ஐரோப்பிய ராபின்

ஐரோப்பிய ராபின் (European robin) அல்லது ஐரோப்பிய ரொபின் (இலங்கை வழக்கு) என்பது, பூச்சியுண்ணும், மரக்கிளைகளில் தங்கும், ஒரு சிறிய பறவை. மார்பு செந்நிறமாக இருப்பதால் இதைப் பிரித்தானியத் தீவுகளில் ராபின் ரெட்பிரெஸ்ட் எனவும் அழைப்பர். இது முன்னர் “திறசு” (thrush) குடும்பத்தில் (தேர்டிடே) வகைப்படுத்தப்பட்டிருந்தது. இப்போது இது ஒரு பழைய உலக ஈபிடிப்பான் எனக் கருதப்படுகிறது. இது 12.5-14.0 சமீ (5.0-5.5 அங்குலம்) நீளம் கொண்டது. இதன் ஆண், பெண் இரு பாலினப் பறைவைகளும் ஒரே விதமான நிறம் கொண்டவை. செம்மஞ்சள் நிற மார்பைக் கொண்ட இவற்றின் முகத்தில் சாம்பல் நிறக் கோடுகள் இருக்கும். முதுகு மண்ணிறமாகவும், வயிற்றுப்பகுதி வெள்ளை நிறமாகவும் காணப்படும். இது, கிழக்கில் மேற்கு சைபீரியா வரையும், தெற்கில் வட ஆப்பிரிக்கா வரையும் உள்ள ஐரோப்பாக் கண்டத்தின் எல்லாப் பகுதிகளிலும் பரந்து வாழ்கின்றது. தூர வடக்குப் பகுதிகளில் வாழும் சி வகைகளைத் தவிர இதன் ஏனைய வகைகள் இடப்பெயர்வு இல்லாமல் ஒரே பகுதியிலேயே வாழ்கின்றன.


செம்மஞ்சள் நிற மார்பையுடைய, ஆனால் வேறு குடும்பங்களைச் சேர்ந்த சில பறவைகளையும் “ராபின்” என்னும் பெயரால் அழைப்பது உண்டு. “திரசு” குடும்பத்தைச் சேர்ந்த “அமெரிக்க ராபின்” (தேர்டசு மைகிரேட்டேரியசு (Turdus migratorius)), “பெட்ரோயிசைடே” குடும்பத்தைச் சேர்ந்த ஆசுத்திரேலிய ராபின் போன்றவை இத்தகையவை. இவற்றுக்கு இடையேயான தொடர்புகள் குறித்துத் தெளிவில்லை.


வகைப்பாட்டியலும் தொகுதியியலும்


1758 ஆம் ஆண்டு, சிஸ்டெமா நச்சுரேயின் 10 ஆவது வெளியீட்டில், மோட்டசிலா ருபெக்குலா என்னும் இருபடிப் பெயரில், ஐரோப்பிய ராபினை கார்ல் லின்னேயசு விபரித்தார். இதன் உரிய பண்புச் சொல்லான ருபெக்குலா என்பது “சிவப்பு” எனப் பொருள்படும் இலத்தீன் சொல்லான ருபெர் என்பதில் இருந்து பெறப்பட்டது. 1800 ஆம் ஆண்டில் பிரெஞ்சு இயற்கையாளர் ஜார்ச் குவியர், எரித்தாகசு என்னும் பேரினத்தை உருவாக்கி, ஐரோப்பிய ராபினுக்கு எரித்தாக்கசு ருபெக்குலா என்னும் பெயரை வழங்கினார்.


இப்பேரினம் முன்னர் சப்பானிய ராபின், ரியுகியு ராபின் ஆகியவற்றையும் உள்ளடக்கி இருந்தது. மூலக்கூற்றுக் கணப்பிறப்பியல் (molecular phylogenetic) ஆய்வுகள், மேற்குறிப்பிட்ட கிழக்காசிய இனங்கள், ஐரோப்பிய ராபினை விடப் பிற ஆசிய இனங்களுடனேயே நெருக்கமாக ஒத்திருக்கின்றன எனக் காட்டின. இதனால், ஐரோப்பிய ராபின், எரித்தாக்கசு பேரினத்தின் ஒரே இனமாக எஞ்சியது. கணப்பிறப்பியல் பகுப்பாய்வுகள் எரித்தாகசுவை, முன்னர் ஆப்பிரிக்க இனங்களை மட்டுமே கொண்டிருந்த எரித்தாசினே துணைக் குடும்பத்தில் வைத்தன. ஆனால், பிற பேரினங்கள் தொடர்பிலான இதன் சரியான இடம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.


இப்பறவையின் தனித்துவமான செம்மஞ்சள் நிற மார்பு, இதற்கு அதன் முதல் பெயரான “ரெட்பிரெஸ்ட்” (செம்பார்பன்) என்னும் பெயர் ஏற்படக் காரணமாயிற்று. “ஆரெஞ்சு” என்பது இங்கிலாந்தில், ஒரு நிறப்பெயராக 16 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் அறியப்பட்டிருக்கவில்லை. அக்காலப் பகுதியில் “ஆரெஞ்சு”ப் பழம் அறிமுகமான பின்பே இந்நிறப் பெயரும் அறிமுகமானது. அதனாலேயே “செம்மஞ்சள்”, “சிவப்பு” நிறமாக அடையாளம் காணப்பட்டது. 15 ஆம் நூற்றாண்டில், பழக்கமான இனங்களுக்கு மனிதப் பெயர்களை வைக்கும் வழக்கம் உருவானபோது, இப்பறவைக்கு “ராபின் ரெட்பிரெஸ்ட்” என்னும் பெயர் ஏற்பட்டதுடன், பின்னர் இது சுருக்கமாக “ராபின்” என அழைக்கப்பட்டது. ஒல்லாந்த, பிரெஞ்சு, செருமன், இத்தாலியம், எசுப்பானியம் ஆகிய மொழிகளில் வழங்கும் பெயர்களும் அப்பறவையின் தனித்துவமான மார்பு நிறத்தை அடிப்படையாகக் கொண்டே உருவானவை.


வெளி இணைப்புகள்

ஐரோப்பிய ராபின் – விக்கிப்பீடியா

European robin – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.