வீட்டுப் புறா

வீட்டுப் புறா (Homing Pigeon) என்பது வீட்டில் வளர்க்கப்படும் புறாவின் ஒரு வகை ஆகும். இது மாடப் புறாவில் இருந்து பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவானதாகும். இவை மிகவும் நீண்ட தூரங்களுக்கு பயணித்துத் திரும்பும் ஆற்றல் கொண்டவையாகும். இவை புவியின் காந்தப் புலத்தைப் பயன்படுத்துகின்றன. இவை பந்தயங்களின்போது சுமார் 1800 கி.மீ.க்கு பறந்து திரும்பியதாகப் பதிவுகள் உள்ளன. இவை மணிக்கு சுமார் 50 மைல் வேகத்தில் பறக்க வல்லவை, ஒரு சில புறாக்கள் குறுகிய தூரத்திற்கு 90 மைல் வேகத்தில் பறந்ததிற்கான பதிவுகள் உள்ளன. இதன் காரணமாக இவை செய்திகளை அனுப்ப பயன்படுத்தப்பட்டன.


பால் ஈருருமை


ஆண் புறாக்கள் பெண் புறாக்களை விட பெரிய காற்றுப்பையைப் பெற்றுள்ளன. பெண் புறாக்கள் சிறிய உடலைக் கொண்டுள்ளன. ஆண் புறாக்கள் பெண் புறாக்களை விட சத்தமாக ஒலியெழுப்பக்கூடியவை. ஆண் புறாக்கள் ஒலியெழுப்பும்போது 360 கோணத்தில் சுற்றுகின்றன, பெண் புறாக்கள் அதிகபட்சமாக 270 கோணத்திற்கே சுற்றுகின்றன. அதேநேரத்தில் ஆர்க்காங்கல் புறாவில் ஆண், பெண் புறாக்களை வேறுபடுத்துவது கடினமாகும்.


வளர்தல்


ஆண் புறா குச்சிகளைக் கொண்டுவந்து சேர்க்க பெண் புறா கூட்டை அமைக்கும். இவை இரண்டு முட்டைகளை இட்டு அடைகாக்கும். 17 முதல் 20 நாட்களில் குஞ்சுகள் பொரிக்கின்றன. வளர்ந்த குஞ்சுகள் 3 முதல் 4 வாரங்களில் கூட்டைவிட்டு பறக்கின்றன.


வரலாறு


புறாப் பந்தயங்கள் சுமார் 3000 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. பண்டைய கால ஒலிம்பிக்கில் அவை வெற்றியாளர்களை பிரகடனம் செய்யப் பயன்படுத்தப்பட்டன. தூதுப் புறாக்கள் கி.பி. 1150 ஆண்டிலேயே பாக்தாத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன, அதற்குப் பின்னர் செங்கிஸ் கானாலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. கி.பி.1167ல் அவை தினசரி சேவையாக பாக்தாத்திற்கும், சிரியாவிற்கும் இடையில் சுல்தான் நூருதீனால் உபயோகப்படுத்தப்பட்டன. நைல் நதிக் கரையில் அமைந்த டாமியெட்டா நகரில், இசுபானிய பயணியான பெட்ரொ டபுர் முதன்முதலாக தூதுப் புறாக்களை கி.பி.1436ல் கண்டார். செனோவா குடியரசில் காவல் விளக்கங்களில் தூதுப் புறாக்கள் பயன்படுத்தப்பட்டன. திப்பு சுல்தான் தூதுப் புறாக்களைப் பயன்படுத்தினார். அவை ஜமியா மசுஜித் பள்ளிவாசலுக்கு திரும்பி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தன. அவை வசிக்கும் துளைகளை இன்றளவும் அப்பள்ளிவாசலில் காணலாம்.


கி.பி.1818 ல் பெல்ஜியன் கான்கோர்சு என்ற பந்தயம் பிரசெல்சில் நடைபெற்றது. பின்னாளில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தைத் தொடங்கிய பால் ராய்ட்டர் கி.பி. 1860ல் ஆச்சன் மற்றும் பிரசெல்சு இடையே செய்தி மற்றும் பங்குச் சந்தை நிலவரங்களை அளிக்க சுமார் 45 புறாக்களைப் பயன்படுத்தினார். வாட்டர்லூ போரின் முடிவை இங்கிலாந்துக்குத் தெரிவிக்கப் புறாக்கள் பயன்படுத்தப்பட்டன. பிராங்கோ-பிரஷ்ய யுத்தத்தின்போது புறாக்கள் முற்றுகையின் கீழிருந்த பாரிஸ் மற்றும் முற்றுகையிடப்படாத பிரெஞ்சு பிரதேசத்திற்கும் இடையில் செய்திகளை அனுப்பப் பயன்படுத்தப்பட்டன. டிசம்பர் 1870ல் புறாக்கள் 10 மணி நேரத்தில் செய்திகளை பெர்பிக்னனில் இருந்து பிரசெல்சுக்கு கொண்டுசேர்த்தன.


காலங்காலமாக புறாக்கள் ஒரு வழி (அவற்றின் இருப்பிடத்திற்கு) செய்தி அனுப்புவதற்கே பயன்படுத்தப்பட்டன. அவற்றை, செய்தி எங்கிருந்து அனுப்பப்படுகிறதோ அவ்விடத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டியிருந்தது. ஒரு இடத்தில் உணவை வைப்பதன் மூலம் அவை எளிதாக அவற்றின் இருப்பிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வரவழைக்கப்பட்டன. இதன் மூலம் சுமார் 160 கி.மீ. சுற்றுதூரத்தை ஒரே நாளில் கடந்தன. அவற்றின் மேல் இருந்த நம்பகத்தன்மை காரணமாக உலகின் முதல் வான் அஞ்சல் சேவையாகக் கருதப்படும் ஆக்லாந்துக்கும், கிரேட் பேரியர் தீவுக்கும் இடையேயிருந்த சேவையில் நவம்பர் 1897ல் பயன்படுத்தப்பட்டன,. உலகின் முதல் வான் அஞ்சல் சேவை தபால்கள் கிரேட் பேரியர் பீஜியன்-கிராம் சர்வீஸில் 1898 முதல் 1908 வரை வழங்கப்பட்டன.


ஹோமிங் பீஜியன்கள் 21ம் நுற்றாண்டுவரை கிழக்கு இந்தியாவில் இயற்கைப் பேரழிவுகளுக்கு இடையில் செய்திகளைப் பரிமாற ஒடிசாவில் பயன்படுத்தப்பட்டன. இச்சேவை 2002ம் ஆண்டு இணையதளச் சேவைகளின் விரிவாக்கத்தால் முடித்துக் கொள்ளப்பட்டது. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஹோமிங் பீஜியன்களை வளர்ப்பதைத் தடை செய்தனர்.


வேறு இடத்திற்குக் கொண்டுசெல்லப்பட்ட புறாக்கள் இருப்பிடத்திற்குத் திரும்புவது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அவை “வரைபடம் மற்றும் திசைகாட்டி” முறையைப் பின்பற்றுவதாக நம்பப்படுகிறது. இதில் வரைபடம் என்பது அவற்றின் இருப்பிடத்தை அறிவதையும், திசைகாட்டி என்பது வழியை அறிவதையும் குறிப்பிடுகிறது. சில ஆய்வாளர்கள் அவற்றின் வரைபட அமைப்பானது பூமியின் காந்தப்புலத்தைப் பயன்படுத்துவதாக நம்புகின்றனர். பறவைகளால் இருப்பிடத்திற்குத் திரும்ப காந்தப் புலத்தைப் பயன்படுத்தமுடியும். ஆய்வாளர்கள் புறாவின் அலகில் இரும்புத் துகள்களைக் கண்டறிந்துள்ளனர், இவை வடதிசையை நோக்கி திரும்பி ஒரு திசைகாட்டி போல செயல்படுகின்றன. இத்தாலியைச் சேர்ந்த புளோரியானோ பபி 1970களின் ஆரம்பத்தில் செய்த ஆய்வுகள் மற்றும் ஹான்ஸ் வல்ராபால் செய்த தற்போதைய ஆய்வுகளின்படி அவை வளிமண்டலத்தில் உள்ள நாற்றங்களை நுகர்கின்றன,. கூடுகளுக்கு அருகில் உள்ள இடங்களுக்குச் சென்று திரும்ப அவை காட்சி அடையாளக்குறிகளைப் பயன்படுத்துகின்றன..


யு.எஸ். ஜியலாஜிக்கல் சர்வேயைச் சேர்ந்த ஜான் ஹாக்ஸ்ட்ரமின் ஆய்வின்படி புறாக்கள் குறைந்த அதிர்வெண் சத்தங்களைப் பயன்படுத்துகின்றன. 0.1 ஹெர்ட்ஸ் போன்ற குறைந்த அதிர்வுகள் கூட அவற்றின் வழித்தடத்தில் வேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளன. புறாக்களின் காதானது இத்தகைய நீளமான அலையை அறிய இயலாத காரணத்தால் அவை மேலெழுந்து பறக்கும்போது வானில் வட்டமடித்து அதனை அறிகின்றன.


மற்ற ஆய்வுகளின் படி காற்றிலுள்ள நாற்றங்களை செயற்கையாக நீக்கும்போது அவற்றின் இருப்பிடம் திரும்பும் ஆற்றலில் மாற்றம் ஏற்படுகிறது.[சான்று தேவை]


ஒருசில ஆய்வுகளின்படி புறாக்கள் மனிதர்களைப் போலவே கட்டடங்களையும் மற்ற மனிதனால் ஆக்கப்பட்ட பொருட்களையும் நினைவில் வைத்து இருப்பிடம் திரும்புகின்றன.


புறாக்களின் பங்கு


செய்திகளை அனுப்ப


புறாக்களின் மூலம் செய்தி அனுப்பப்படும்போது அவை மெல்லிய தாளில் எழுதப்பட்டு ஒரு குழலில் அடைக்கப்பட்டு அவற்றின் கால்களில் இணைக்கப்படுகின்றன. வெள்ளைப் புறாக்கள் திருமணங்கள் மற்றும் விளையாட்டு விழாக்களில் பறக்கவிடப்படுகின்றன.


பயிற்சி பெற்ற புறாக்கள் 75 கிராம் எடை வரை கொண்டுசெல்ல வல்லவையாகும். ஜெர்மானிய மருந்து விற்பனையாளரான ஜூலியஸ் நியுபுரோனர் அவசர மருந்து வழங்க புறாக்களைப் பயன்படுத்தினார். 1977ல் இதேபோல் ஆய்வக மாதிரிகளை இரு இங்கிலாந்து மருத்துவமனைகளுக்கு இடையில் கொண்டுசெல்ல புறாக்கள் பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொரு நாள் காலையிலும் புறாக்கள் கூடை மூலம் பிளைமவுத் பொது மருத்துவமனையில் இருந்து டிவாந்போர்ட் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டன. பிறகு இப்பறவைகள் உடையாத குப்பிகளை மீண்டும் பிளைமவுத் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றன. ஒரு மருத்துவமனையின் மூடலால் இத்தகைய சுமார் 30 புறாக்கள் தேவையற்றுப் போயின. 1980களில் கிரான்வில்லே மற்றும் அவுரான்செ மருத்துவமனைகளில் இதெபோன்ற வழக்கம் நடைமுறையில் இருந்தது.


போர்க்காலங்களில்


பறவைகள் முதல் உலகப்போரின்போது விரிவாக பயன்படுத்தப்படுத்தப்பட்டன. செர் அமி என்ற ஒரு ஹோமிங் பீஜியனானது படுகாயமடைந்த நிலையிலும் 12 முக்கிய செய்திகளை சேர்த்ததற்காக குரோயிக்ஸ் டி குவெர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. [சான்று தேவை]


இரண்டாம் உலகப் போரின்போது அயர்லாந்தின் பாடி, அமெரிக்காவின் ஜி.ஐ. ஜோ மற்றும் இங்கிலாந்தின் மேரி ஆஃப் எக்ஸ்டெர் ஆகிய புறாக்கள் டிக்கின் விருதுகள் பெற்றன. இவற்றுடன் சேர்த்து மொத்தம் 32 புறாக்கள் மனித உயிர்களைக் காத்ததற்காக இவ்விருதைப் பெற்றன.82 ஹோமிங் பீஜியன்கள் நெதர்லாந்தில் ஆபரேஷன் மார்க்கெட் கார்டனுக்காக இரண்டாம் உலகப் போரில் இறக்கப்பட்டன. ரேடியோ அலைகள் எதிரிகளால் வழிமறிக்கப்படும் என்ற காரணத்தால் புறாக்கள் “நார்மான்டி லான்டிங்கில்” முக்கியப் பங்காற்றின.


கணினிக் காலத்தில்


செப்டம்பர் 2009ல் தென்னாப்பிரிக்காவின் ஒரு கணினி நிறுவனம் போட்டிக்காக ஒரு புறாவின் காலில் 4 ஜி.பி. மெமரி கார்டை வைத்து அனுப்பியது. அப்புறா 1 மணி நேரம், 8 நிமிடங்களில் 80 கி.மீ. தூரத்திலுள்ள இடத்தைச் சேர்ந்தது. அந்நிறுவனத்தின் டேட்டா டிரன்ஸ்பரானது 4% டேட்டாவை அனுப்ப 2 மணி நேரம், 6 நிமிடங்கள், 57 நொடிகள் பிடித்தது.


வெளி இணைப்புகள்

வீட்டுப் புறா – விக்கிப்பீடியா

Homing pigeon – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.