மஞ்சள்பிடரி சின்ன மரங்கொத்தி (Lesser Yellow Nape) என்பது மரங்கொத்தி வகைகளுள் ஒன்றாகும். பொதுவாக இவை ஆசியாவின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல பகுதிகளில் காணப்படுகிறது. மேலும் இந்தியா, இலங்கை, நேபாளம், பூட்டான், மியான்மார் ,தென் சீனா, தாய்லாந்து, கம்போடியா, சிங்கப்பூர், வியட்நாம், இந்தோனிசியா, புருனே போன்ற நாடுகளில் காணப்படுகிறது.
பெயர்கள்
தமிழில் :மஞ்சள்பிடரி சின்ன மரங்கொத்தி
ஆங்கிலப்பெயர் :Small Yellow – Naped Wood pecker
அறிவியல் பெயர் : Picus chlorolophus
உடலமைப்பு
இந்த மரங்கொத்தியின் நீளம் சுமார் 27 செ.மீ. வரை இருக்கும். மஞ்சள் தோய்ந்த பச்சை நிற உடலும் இறகுகளும் கொண்ட இதன் வால் பழுப்புத் தோய்ந்த கருப்பாக இருக்கும். மார்பானது ஆலிவ் பழுப்பு நிறத்திலும், வயிறும் வாலடியும் வெண்மையும் பழுப்புமான பட்டைகளைக் கொண்டது.
காணப்படும் பகுதிகள், உணவு
மேற்கு, கிழக்குத் தொடர்ச்சி மலைசார்ந்த பகுதிகளில் தேக்குக் காடுகளிலும் இலையுதிர் காடுகளிலும் காபி, ரப்பர் தோட்டங்களிலும் காணலாம். பிற மரங்கொத்திகளோடும், கரிச்சான், மின்சிட்டுகள், ஈப்பிடிப்பான், சிலம்பன்கள் ஆகியவற்றோடு சேர்ந்து இரை தேடும். எறும்புகளும் கறையான்களுமே இதன் முக்கிய உணவு; பழங்களையும் அவ்வப்போது தின்னும். ‘சேங் என சோகங்கலந்த குரலில் அரைவினாடி முதல் ஒரு வினாடி வரை நீள ஒலிக்கும், மரத்தில் உளியை ஒத்ததான அலகால் தட்டித் தொடர்ந்து ஒலி எழுப்பவும். பறக்கும்போது குரலொலி எழுப்புவதில்லை.
இனப்பெருக்கம்
ஜனவரி முதல் மே வரையான பருவத்தில் காட்டு மரங்களில் வங்கு குடைந்து 2 முட்டைகள் இடும்.