லோட்டன் தேன்சிட்டு

லோட்டன் தேன்சிட்டு [Loten’s sunbird or Long-billed sunbird (Cinnyris lotenia)] என்பது நெக்டாரினிடே குடும்பத்தைச் சேர்ந்த நீண்ட, வளைந்த அலகினையுடைய ஒரு தேன்சிட்டு. இச்சிட்டு பெரும்பாலும் தென்னிந்திய தீபகற்பத்திலும் இலங்கையிலும் மட்டும் காணப்படக்கூடிய ஓரிட வாழ்வி ஆகும். தென்னிந்தியாவில் காணப்படும் தேன்சிட்டுகளில் அளவில் இதுவே பெரியது. (இதே குடும்பத்தைச் சேர்ந்த சிலந்திபிடிப்பான் லோட்டன் தேன்சிட்டை விட சற்று பெரியது)


உடலமைப்பும் கள அடையாளங்களும்


13 cm நீளமும் 8 g முதல் 11 g வரை எடையும் இருக்கும்.


ஆண்: ஒளிரும் கருஊதா நிற மேற்பகுதியும் தலையும் கொண்டது; இதே போலுள்ள ஊதாத் தேன்சிட்டை விடப் பெரிய அலகும் உடல் நீளமும் உடையது. மார்புப் பகுதியில் அரக்குப் பட்டையுடன் தோள்பட்டையில் செம்மஞ்சள் நிறக் கொத்தும் தனித்துவமாகத் தெரியும்.


பெண்: இடலைப் பச்சை நிறத்துடன் தெளிவான எல்லை கொண்ட மேல்பகுதியும் வெளிர் மஞ்சள் அடிப்பகுதியும் கொண்டது. ஊதாத் தேன்சிட்டில் உள்ளது போல் புருவக்கோடு இருக்காது.


பரவலும் வாழ்விடமும்


பரவல்


கிழக்கே விசாகப்பட்டினத்திற்குத் தெற்காகவும் மேற்கே மும்பைக்குத் தெற்கேயும் உள்ள பகுதிகளில் தொடங்கி தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுகின்றது. இருப்பினும், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரிலும் தென்னிந்தியத் தீபகற்பத்திலும் இலங்கையில் வட மாகாணத்தைத் தவிர பிற பகுதிகளிலும் இது பெருமளவில் காணப்படுகின்றது. இலங்கையில் காணப்படும் இனமான C. lotenius lotenius தென்னிந்தியாவில் உள்ள உள்ளினத்தை (C. lotenius hindustanicus) விட சற்று பெரிய அலகினைக் கொண்டது.


வாழ்விடம்


இலையுதிர் காடுகள், மரங்கள் (குறிப்பாக, பூக்கள் நிறைந்த மரங்கள்) அடர்ந்த தோட்டங்கள், விவசாயப் பகுதிகள்; இவ்வகை வாழ்விடமுள்ள நகரப் பகுதிகளிலும் இவை காணப்படுகின்றன. 1600 m உயரத்திலிருந்து 2100 m உயரம் வரை கூட இவற்றைக் காணலாம்.


உணவும் உணவு தேடும் முறையும்


உணவு. பூச்சிகள், சிலந்திகள், தேன்.


உணவு தேடும் முறை. தனியாகவும் இணையோடும் உணவு தேடும். உணவுப் பொருளின் அருகில் நிலையாக வட்டமிடும், சிறிது சிறிதாக பொறுக்கி உணவை எடுக்கும். மலர்களின் புல்லிவட்டத்தை ஓட்டை போட்டு தேனை எடுக்கும்.


பெயர்க் காரணம்


இலங்கையின் கவர்னராக இருந்த ஜோன் கிடியன் லோட்டன் என்பார் பீட்டர் டீ பெவர் என்ற ஓவியரைக் கொண்டு இப்புள்ளை முதலில் வரையச் செய்தார். பின்னர், லோட்டனிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளுக்கு நவீன உயிரியல் வகைப்பாட்டின் தந்தை என அழைக்கப்படும் லின்னேயசு லோட்டனின் பெயரை இட்டார்.


வெளி இணைப்புகள்

லோட்டன் தேன்சிட்டு – விக்கிப்பீடியா

Loten’s sunbird – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.