செம்மார்புக் கானாங்கோழி

செம்மார்புக் கானாங்கோழி [Ruddy-breasted crake (Zapornia fusca)] ராலிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நீர்ப்பறவை ஆகும். இந்தியாவில் தொடங்கி அதற்குக் கிழக்காக உள்ள பல நாடுகளிலும் இலங்கையிலும் இதன் வாழ்விடம் பரந்து இருப்பினும், காண்பதற்கு அரிதான பறவையாகவே இது உள்ளது.


உடலமைப்பும் கள அடையாளங்களும்


நாகணவாய்ப் புள்ளை ஒத்த அளவை உடையது (நீளம் – 21 cm முதல் 23 cm). ஆணும் பெண்ணும் ஒரே தோற்றம் கொண்டிருக்கும். இருப்பினும், பெண் பறவை சற்று வெளிர் நிறத்துடன் இருக்கும்.


சிவந்த கண்; காய்ந்த மரப்பட்டையையொத்த சாம்பல் கலந்த பழுப்பு நிற மேற்பாகம், செம்மண் நிற அடிப்பகுதி. கால்களும் விரல்களும் சிவப்பு. கருநிற வாலின் அடிப்பகுதியிலுள்ள இறகுத் தொகுதியில் மெல்லிய வெண் பட்டைகள் காணப்படும்; இளவயதுப் பறவையின் அடிப்பாகத்தில் மெல்லிய வெண் பட்டைகள் இருக்கும்.


அதிகாலையிலும் மாலையிலும் இப்பறவை அதன் மறைவிடத்திலிருந்து எழுப்பும் வளர்வேகமெடுக்கும் அதிர்வொலி அதனை அடையாளங்காண உதவும்.


பரவலும் வாழ்விடமும்


பரவல்


இந்தியா, இலங்கை, நேபாளம், பூட்டான், வங்கதேசம் தொடங்கி பெரும்பாலான தென்கிழக்கு ஆசிய நாடுகள், தைவான், கொரியா, ஜப்பான் மற்றும் சீனாவின் சில பகுதிகளில் இவற்றைக் காணலாம். இந்தியாவில் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட சில உள்நாட்டுப் பகுதிகள் நீங்கலாக பெரும்பாலான மாநிலங்களில் காணலாம்.


தமிழ்நாட்டில் சென்னை (குறிப்பாக, பள்ளிக்கரணை சதுப்புநிலம்) அதனையொட்டிய சில பகுதிகள், திருச்சி, மதுரை, சேலம் ஆகிய இடங்களிலும் இக்கானாங்கோழி பதிவு செய்யப்பட்டுள்ளது; பெரும்பாலான தென் தமிழகப் பகுதிகளில் இது பதிவு செய்யப்படவில்லை. மேலும், இவை குறைந்த எண்ணிக்கையிலேயே காணப்படுகின்றன.


வாழ்விடம்


நாணல் அதிகமுள்ள சதுப்பு நிலங்கள், ஓடைக் கரைகள், ஏரிக்கரைகள், புற்கள் நிறைந்த ஈரநிலங்கள், நெல்வயல்களின் கரைப்பகுதிகள், புதர் மண்டிய காட்டுப் பகுதிகள்.


உணவு


சிப்பியின மெல்லுடலிகள், நீர்வாழ் பூச்சிகள் அவற்றின் புழுக்கள், விதைகள், சதுப்புநிலத் தாவரங்களின் தண்டுகள்.


வெளி இணைப்புகள்

செம்மார்புக் கானாங்கோழி – விக்கிப்பீடியா

Ruddy-breasted crake – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.