வயநாட்டுச் சிரிப்பான் உலகில் வேறெங்கும் காணப்படாத ஒரு சிற்றினம் ஆகும், இது மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலும் கோவாவின் தெற்கு பகுதிகளிலும் காணப்படுகிறது.
பெயர்கள்
தமிழில் :வயநாட்டுச் சிரிப்பான்
ஆங்கிலப்பெயர் :Wynaad Laughingthrush
அறிவியல் பெயர் :Garrulax delesserti
உடலமைப்பு
23 செ.மீ. – உடலின் மேற்பகுதி சிவந்த பழுப்பு நிறம். கீழ்ப்பகுதி சாம்பலும் பழுப்புமாகக் காணப்படும். தலை உச்சி, கழுத்தின் பக்கங்கள் மேல் முதுகு ஆகியன சிலேட் சாம்பல் நிறம் கண்கள் வழயாக அகன்ற பட்டைக்கோடு காதுவரை செல்லும்.
காணப்படும் பகுதிகள்
நீலகிரி, கொடைக்கானல் ஆகியவற்றைச் சார்ந்து மலை அடிவாரம் முதல்சிகரங்கள் வரை ஈரப் பதம் மிகுந்த காடுகளில் காணலாம். ஒரு பறவை கலகலப்பாக கத்தத் தொடங்கியவுடன் அடுத்தது அதற்கு அடுத்தது என ஒவ்வொன்றாகச் சேர்ந்து குரல் கொடுக்கத் தொடங்கிப் பின் கூட்டம் முழுதும் சிரிப்பதுபோலக் கெக்கலிக்கும். அபூர்வமாக நாற்பது வரையான பறவைகளைக் கூடக் குழுவாகக் காணலாம்.
உணவு
ஆறுமுதல் பதினைந்து வரையான குழுவாகத் தரையில் உதிர்ந்து அழுகிய இலைகளைப் புரட்டிப் புழுபூச்சிகளை இரையாகத் தேடித் தின்னும். கொட்டைகளையும் சிறு பழங்களையும் உட்கொள்வதும் உண்டு. சிறு மரங்களில் தாழ்வாக ஆறேழு பறவைகள் அருகருகே நெருக்கமாக அமர்ந்து ஒன்றை ஒன்று இறகுகளைக் கோதிக் கொடுத்துக் கொள்ளும்.
இனப்பெருக்கம்
ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை புல், இலை முதலியவற்றால் கோப்பை வடிவமான உருண்டையான கூடமைத்து 2 அல்லது 3 முட்டைகள் இடும்.