வெண்வயிற்றுக் கரிச்சான் [White-bellied drongo (Dicrurus caerulescens)] என்பது இந்தியாவிலும் இலங்கையிலும் மட்டும் காணப்படும் ஒரு கரிச்சான் இனக் குருவியாகும். மற்ற கரிச்சான்களைப் போலவே இது பூச்சிகளை உண்ணும் வழக்கம் கொண்டிருந்தாலும், சில வகைப் பூக்களின் தேனை விரும்பி உண்பதால் மகரந்தச் சேர்க்கையிலும் இது உதவுகிறது.
உடலமைப்பும் கள அடையாளங்களும்
உடலமைப்பு
சின்னானை விட அளவில் பெரியது [நீளம் = 24 cm] கரிக்குருவியை விட சிறியது. வாலின் பிளவு கரிக்குருவியின் வால் பிளவை விடவும் குறைவாக இருக்கும். மார்பின் அடிப்பகுதியிலிருந்து வெள்ளையாக இருக்கும். கண்விழிப் படலம் அரக்கு நிறம். ஆண் பெண் இரண்டும் ஒரே தோற்றம் கொண்டிருக்கும்.
கள அடையாளங்கள்
இரண்டு அல்லது மூன்று குருவிகள் மற்ற பூச்சியுண்ணும் பறவைகளுடன் சேர்ந்தே காணப்படும்; அந்தி நேரத்திலும் நன்கு இருட்டிய பிறகும் கூட இரையைத் தேடும்.
பரவலும் வாழ்விடமும்
பரவல்
மேற்கு குஜராத், மேற்கு ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், இமாசல பிரதேசம், வடகிழக்கு மாநிலங்கள் நீங்கலாக இந்தியாவின் அனைத்துப் பகுதிகள் மற்றும் இலங்கையின் பெரும்பாலான பகுதிகள். இனப்பெருக்கம் செய்யாத காலங்களில் இவை மத்திய குஜராத் பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வாழ்விடம்
இலையுதிர், மூங்கிற் காடுகளின் புதர்வெளிகள், தேயிலை, இரப்பர் தோட்டங்கள்.
உணவு
சிதடி எனப்படும் பாச்சை, வெட்டுக்கிளி, விட்டில், சிறகுடைய கறையான் உள்ளிட்ட பூச்சிகள்; திடீர்த் தாக்குதல் மூலம் உணவை பிற பறவைகளிடமிருந்து அபகரிப்பதும் உண்டு. எப்போதாவது, நாணல் கதிர்குருவிகளைத் தாக்கி உண்ணும்; Bombax, Erythrina- தாவரங்களுடைய மலர்களின் தேனை உண்ணும்.
ஒலி
பூங்குருவிகள், தினைக்குருவிகள் போன்றவற்றின் தொனியில் ஒலியெழுப்பும்; கரிக்குருவியைப் போன்றே பாடும். குறிப்பாக, தையல் சிட்டு, காட்டுக் கீச்சான், மாம்பழச் சிட்டு ஆகிய குருவிகளைப் போன்றே போலிக்குரல் எழுப்பும்.