சிதம்பரம் அருள்மிகு ஆத்மநாதசுவாமி திருக்கோயில் – Athmanathaswami Temple

அருள்மிகு ஆத்மநாதசுவாமி திருக்கோயில்


மூலவர்:

ஆத்மநாதசுவாமி


அம்மன்/தாயார்:

யோகாம்பாள்


தீர்த்தம்:

பாற்கடல் தீர்த்தம்


ஊர்:

சிதம்பரம்


மாவட்டம்:

கடலூர்


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

மாணிக்கவாசகர் குருபூஜையன்று ஆத்மநாத சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று மதியம் மாணிக்கவாசகர், ஆத்மநாதர் சன்னதிக்குள் எழுந்தருளி சிவனுடன் இரண்டறக்கலக்கும் வைபவம் நடக்கும்.


தல சிறப்பு:

சிவனடியார்களால் பெரிதும் போற்றப்படுவது திருவாசகம். “திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்னும் சொல் வழக்கே இதற்குச் சான்று. இதை இயற்றிய மாணிக்கவாசகப் பெருமான், சிதம்பரத்திலுள்ள தில்லை திருப்பெருந்துறை ஆத்மநாதசுவாமி கோயிலில் குரு அம்சமாகக் காட்சியளிக்கிறார். மாணிக்கவாசகரே கட்டிய கோயில் இது.


திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்


முகவரி:

அருள்மிகு ஆத்மநாதசுவாமி திருக்கோயில், திருப்பெருந்துறை, சிதம்பரம்-608 001, கடலூர் மாவட்டம்


போன்:

+91 94431 12098.


பொது தகவல்:

கோயில் பிரகாரத்தில் விநாயகர், துர்கை, நந்தி, யோக தட்சிணாமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.


பிரார்த்தனை


தவம் செய்யவும், முக்தி கிடைக்கவும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.


நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியவுடன் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்து வழிபடுகின்றனர்.


தலபெருமை:

அடியாராக வந்த சிவன்:

மாணிக்கவாசகர் இங்கு தங்கியிருந்தபோது, சிவன் அடியார் வேடத்தில் வந்து, அவரது பாடல்களைக் கேட்க விரும்புவதாக கூறினார். மாணிக்கவாசகரும் பாடினார். சிவன் அந்தப் பாடல்களைத் தொகுத்து “இப்பாடல்கள் மாணிக்கவாசகர் திருவாய் மலர்ந்தருளியவண்ணம் எழுதப்பட்டது’ என எழுதி “திருச்சிற்றம்பலம் உடையார்’ என கையெழுத்திட்டார். மறுநாள் அதை சிதம்பரம் நடராஜர் சன்னதியில் வைத்துவிட்டு மறைந்தார். வேத பண்டிதர்கள் மாணிக்கவாசகரிடம் திருவாசகத்திற்கு விளக்கம் கேட்டனர். அப்போது சிவனே ஒரு அடியாராக வந்தார். பண்டிதர்களிடம் சிவனைக்காட்டிய மாணிக்கவாசகர், “இவரே இதற்கான பொருள்’ என்று சொல்லி அவருடன் இரண்டறக் கலந்தார். இந்நிகழ்வின் அடிப்படையில் ஆத்மநாதர் சன்னதி முகப்பில் சிவன், அடியார் வடிவில் காட்சியளிக்கிறார். அருகில் மாணிக்கவாசகர் அவரை நோக்கி கை காட்டியபடி இருக்கிறார்.


குரு வடிவம்:

இக்கோயில் திருப்பெருந்துறையை பல வகையிலும் ஒத்திருக்கிறது. மூலஸ்தானத்தில் சிவலிங்கம் தெற்கு நோக்கி உள்ளது. இந்த லிங்கம் முழுமையானதாக இல்லை. அம்பாள் சன்னதியில் பாதம் மட்டும் இருக்கிறது. சிவனுக்கு புழுங்கல் அரிசி சாத ஆவி, பாகற்காய் நிவேதனம் செய்கின்றனர். மாணிக்கவாசகர் சின்முத்திரை காட்டி குரு அம்சத்துடன் காட்சியளிக்கிறார். அநேகமாக எல்லா தலங்களிலும் நின்ற நிலையில் இருக்கும் மாணிக்கவாசகர், இங்கே உட்கார்ந்திருக்கிறார். மாணிக்கவாசகர் குருபூஜையன்று ஆத்மநாத சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று மதியம் மாணிக்கவாசகர், ஆத்மநாதர் சன்னதிக்குள் எழுந்தருளி சிவனுடன் இரண்டறக்கலக்கும் வைபவம் நடக்கும்.


நால்வர் சிறப்பு:

நடராஜரின் நடனத்தை தரிசிக்க வந்த வியாக்ரபாதர் சிதம்பரத்தில் தங்கியிருந்தார். அவரது குழந்தை உபமன்யு பசியால் பால் வேண்டி அழுதான். சிவன் அவனுக்காக பாற்கடலை இங்கு பொங்கச்செய்து அருளினார். பாற்கடல் தீர்த்தம் எனப்படும் இத்தீர்த்தத்தின் வடகரையில் இக்கோயில் அமைந்துள்ளது. கோயில் முன்மண்டபத்தில் யோக தட்சிணாமூர்த்தி, இருகால்களையும் மடக்கி அமர்ந்திருக்கிறார். அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் மூவரும் லிங்கத்தின் பாண வடிவில் காட்சி தருவது சிறப்பான அமைப்பு. யோக விநாயகர், அகோர வீரபத்திரர், பைரவர் ஆகியோரும் உள்ளனர். இக்கோயில் அருகில் தில்லைக்காளி மற்றும் குருநமச்சிவாயர் கோயில்கள் உள்ளன.


தல வரலாறு:

மதுரையில் அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சராகப் பணியாற்றியவர் மாணிக்கவாசகர், திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோவிலில் (புதுக்கோட்டை மாவட்டம்) சிவனிடம் உபதேசம் பெற்றார். இவருக்காக சிவபெருமான் மதுரையில் நரிகளை பரிகளாக்கியும், வைகையில் வெள்ளம் பெருக்கெடுக்கச் செய்தும் திருவிளையாடல் நிகழ்த்தினார். இவர் ஒருமுறை சிதம்பரம் வந்தார். முனிவர்கள் தங்கியிருந்த ஒரு பர்ணசாலையில் தங்கினார். ஆனாலும், திருப்பெருந்துறை ஆத்மநாதரை அவரால் மறக்க முடியவில்லை. எனவே, இங்கும் ஆத்மநாதருக்கு அளவில் சிறிய கோயில் கட்டினார். சுவாமிக்கு ஆத்மநாதர் என்றும், அம்பிகைக்கு யோகாம்பாள் என்றும் பெயர் சூட்டினார். இத்தலம்”தில்லை திருப்பெருந்துறை’ என்றழைக்கப்பட்டது.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

மிராக்கில் பேஸ்டு : மாணிக்கவாசகப் பெருமான் இக்கோயிலில் குரு அம்சமாகக் காட்சியளிக்கிறார். அவரே கட்டிய கோயில் இது.

About the author

Leave a Reply

Your email address will not be published.