தேவனாம்பாளையம் அமணீஸ்வரர் கோவில்

அமணீஸ்வரர் கோவில்


மூலவர்:

அமணீஸ்வரர்


அம்மன்/தாயார்:

அகிலாண்டேஸ்வரி


தல விருட்சம்:

வில்வம், நொச்சி


தீர்த்தம்:

கற்பகநதி


ஆகமம்/பூஜை :

சிவாகமம்


புராண பெயர்:

தேவநகர்


ஊர்:

தேவனாம்பாளையம்


மாவட்டம்:

கோயம்புத்தூர்


மாநிலம்:

தமிழ்நாடு


பாடியவர்கள்:


திருவிழா:

சிவராத்திரி, திருக்கார்த்திகை, பிரதோஷம், ஆருத்ரா தரிசனம்.


தல சிறப்பு:

அரிதாக சில சிவத்தலங்களில் மட்டும் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் ஒருங்கே இருந்து அருளுவர். ஆனால், அவர்களே ஒரே கருவறையில் சுயம்புவாக மேற்கு நோக்கி இருக்கும் அதிசயத்தை இங்கு காணலாம்.


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் மணி 11வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு அமணீஸ்வரர் திருக்கோயில், தேவனாம்பாளையம், பொள்ளாச்சி தாலுகா, கோயம்புத்தூர் மாவட்டம்-642 120.


போன்:

+91 4259 – 264 391.99429 70491, 97877 07787


பொது தகவல்:

பிரகாரத்தில் வெள்ளைக்கல் நந்தி, அஷ்டதேவதைகள், விநாயகர், முருகன், அர்த்தமண்டபத்தில் எட்டு கைகளில் ஆயுதங்கள் ஏந்தியபடி ருத்ரதாண்டவர், காளியின் சிலைகள் கலையம்சத்துடன் சிறப்பாக தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளன.


பிரார்த்தனை


சுவாமிக்கு வஸ்திரங்கள் சார்த்தி, பூஜைகள் செய்து வணங்கிட மனநோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை.


நேர்த்திக்கடன்:

சுவாமிக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது.


தலபெருமை:

தியானம் செய்வதற்கு ஏற்ற அமைதியான இடமாக உள்ள இத்தலத்திற்கு சுவாமியை வணங்க, தேவர்கள் அடிக்கடி வருவராம். இதனால், தேவநகர் எனப்பட்ட இவ்வூர், பிற்காலத்தில் தேவனாம்பாளையம் என்றானது. இங்கு முன்னோர்களுக்கு அதிகளவில் திதி கொடுக்கப்படுகிறது.


மும்மூர்த்திச்சுயம்பு :

இங்கு, மும்மூர்த்திகளும் சுயம்புவாக, மேற்கு திசை நோக்கியபடி, ருத்திராட்ச மேனிகொண்டவர்களாக அருளுகின்றனர். நடுவே, சிவன் வீற்றிருக்க வலதுபுறம் பிரம்மா, இடதுபுறம் விஷ்ணு தனித்தனியேயும், மகாமண்டபத்தில், பீடத்தில் விநாயகருடனான அகிலாண்டேஸ்வரி தெற்கு நோக்கியபடியும் உள்ளனர்.


ஆற்றுக்கு நடுவே கோயில் :

இக்கோயில் கற்பக ஆற்றுக்கு நடுவே ஓர் பாறையின் மீது அமைந்துள்ளது. ஆற்றில் நீர் செல்லும் காலங்களில், கோயிலை சூழ்ந்தபடி நீர் செல்லும் என்பதால் அச்சமயங்களில் இறைவனை வணங்கச்செல்வது சற்று சிரமம். இங்கு நீண்ட காலமாக பாம்பு ஒன்று வசிப்பதாகவும், அது சில சமயங்களில் சுவாமி கருவறைக்குள் சென்று இறைவனை சுற்றுவதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.


பேண்ட், சட்டைக்கு அனுமதி இல்லை:

நியமாமுனிவர், தேவர்கள், சித்தர்கள், அடியார்கள் உட்பட பலர் வணங்கிச்சென்றுள்ள இக்கோயிலில் சுவாமியை வணங்க பேண்ட், சட்டை அணிந்தவர்களுக்கு அனுமதியில்லை. வேட்டி கட்டிச் சென்றால் மட்டுமே இறைவனை அருகில் இருந்து தரிசிக்க முடியும்.


தல வரலாறு:

மும்மூர்த்திகளே தமக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என விரும்பிய அத்திரி மகரிஷிக்காகவும், அவரது மனைவி அனுசுயாவின் கற்பின் மகிமையை உலகிற்கு எடுத்துக்காட்டவும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடியார் வேடமிட்டு அனுசூயாவிடம் பிச்சை கேட்டனர். அவள் உணவைப் பரிமாறச்சென்ற போது, அனுசுயாதேவி நிர்வாணமாக பரிமாறினால் மட்டுமே உணவினை ஏற்றுக்கொள்வோம் என்றனர். கலங்காத அனுசுயா, தனது பத்தினித்தன்மையால் கணவருக்கு செய்த பாதபூஜை தீர்த்தத்தை மும்மூர்த்திகள் மீது தெளிக்க மூவரும் குழந்தைகளாக மாறினர், பின் நிர்வாணமாக அவர்களுக்கு பாலூட்டினாள். இவ்வாறு, அனுசுயாவை சோதிக்கச்சென்ற மும்மூர்த்திகளும் ஆடைகள் இன்றி சுயம்புவாக உள்ளனர். இக்கோயிலை நளன் கட்டியதாகவும், பிற்காலத்தில் விக்கிரமசோழ மன்னர் சீரமைத்ததாகவும் புராணவரலாறு தெரிவிக்கிறது.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

அரிதாக சில சிவத்தலங்களில் மட்டும் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் ஒருங்கே இருந்து அருளுவர். ஆனால், அவர்களே ஒரே கருவறையில் சுயம்புவாக இருக்கும் அதிசயத்தை இங்கு காணலாம்.

About the author

Leave a Reply

Your email address will not be published.