நல்லுார் வில்வவனேஸ்வரர் கோவில்

மூலவர்:


வில்வவனேஸ்வரர்


அம்மன்/தாயார்:

பிரஹ்ன்நாயகி, பாலாம்பிகை


தல விருட்சம்:

வில்வம்


தீர்த்தம்:

மணிமுக்தாறு (திருவேணி சங்கமம்)


ஆகமம்/பூஜை :

சிவஆகமம்


புராண பெயர்:

வில்வாரண்யம்


ஊர்:

நல்லுார்


மாவட்டம்:

கடலூர்


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

10 நாட்கள் மாசி மகப் பெருவிழா, பிரதோஷம்


தல சிறப்பு:

பஞ்சபாண்டவர்களில் ஒருவரான பீமன் வழிபட்ட மணல் லிங்கம், வடக்கு நோக்கி சிவனை வழிபடும் படும் முருகன் வள்ளி தெய்வானையுடன் அருள்பாலிப்பது. கோவிலுக்கு மேற்கிலிருந்து வரும் மணிமுக்தா, மயூரா– கோமுகி நதிகள் வடக்காகவும், தெற்காகவும் வலம் வந்து கிழக்குப்புறமாக சங்கமிப்பது சிறப்பு.


திறக்கும் நேரம்:

காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு வில்வவனேஸ்வரர் கோவில் நல்லுார், 606 602 வேப்பூர் தாலுகா, கடலுார் மாவட்டம்


போன்:

+91 4143 230 232, 94436 16639


பொது தகவல்:

விழுப்புரம் மாவட்டம் கல்ராயன் மலையில் தனித்தனியா உற்பத்தியாகும் கோமுகி – மயூரா காட்டு மயிலுார் பகுதியில் ஒன்றாகி கோவிலின் தெற்கு புறமாகவும்; அதே கல்ராயன் மலையில் உற்பத்தியாகி வரும் மணிமுக்தா வடக்குப்புறமாகவும் ஓடி கோவிலின் கிழக்குப் புறத்தில் சங்கமிக்கிறது.


ஸ்ரீபிரஹ்ஹன்நாயகி, பாலாம்பிகை உடனுறையும் ஸ்ரீவில்வவனேஸ்வரர் எழுந்தருளியுள்ள மிகப்பெரிய பழம்பெரும் சிறப்புகள் வாய்ந்த சிவாலயம். மணிமுக்தா, மயூரா நதிகளுக்கிடையே அமைந்துள்ளது.


கங்கை, யமுனை கூடுமிடம் உத்திரப்பிரயாகைபோல கோமுகி, மணிமுக்தா, மயூரா நதிகள் சங்கமிக்கும் திருவேணிசங்கமம் (தட்சிணப்பிரயாகை) என தலவரலாறு கூறுகிறது.


தலபெருமை:

கோவில் வாயில், பிரகாரம் என இரண்டு கொடிமரங்கள், இரண்டு தேர்கள் உள்ளன. தருமர், பீமன், தனஞ்செயன், நகுலன், சகாதேவன் இவர்கள் பூஜைசெய்த சிவலிங்கங்கள் அவர்கள் பெயர்கொண்டே இன்றும் விளங்குகிறது. இதில், அந்தரங்க பக்தியில் சிறந்த பீமன் பூசித்த மணல் லிங்கம் தனிச்சிறப்புடன் விளங்குகிறது. மேலும், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், மதுரை சொக்கநாதர், மீனாட்சியம்மை, சுவேதனன் பூசித்த பிராணதியாகேசுவரர், சந்திரன் பூசித்த சோமலிங்கேசுவரர், காசிபிந்துமாதவப் பெருமாள், வடபுறத்திலிருந்து சிறுதொண்ட நாயனார் கொண்டு வந்த வாதாபி விநாயகர், வேறெங்கும் இல்லாத பெருமை கொண்ட கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான முருகப்பெருமான், சிவபெருமானை பூசித்த திருக்கோலத்தில் இரு தேவியர்கள் புடைசூழ அருள்வழியும் ஆறு திருமுகஙங்களுடன் இராறு கரங்களுடன் வேலும், மயிலுமாக வடக்கு நோக்கி வேண்டுவோர்க்கு வேண்டுவன ஈயும் அருள் வள்ளலாக விளங்குகிறார். கோவிலின் தெற்கு புறத்தில் 63 நாயன்மார்கள், கணபதியுடன் அமைந்துள்ளனர். வில்வ மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட இத்தலத்திற்கு வில்வாரண்ய ேஷத்திரம் என்ற பெயரும் உண்டு.


தல வரலாறு:

முருகப் பெருமான் அசுரனை கொன்ற வீரகத்தி தோஷம் நீங்க வழியாது என்று சிவனை கேட்க. நிலவுலகில் வில்வாரண்யம் சென்று என்னை பூஜித்தால் நீங்கும் என்றார். அதன்படி, வில்வராயண்யத்தில் மயூரா நதியில் நீராடி லட்சம் வில்வங்களால் அர்ச்சனை செய்த முருகனுக்கு தோஷம் நீக்கி, சிவன் காட்சி கொடுத்து, இத்தலத்தில் வடக்கு நோக்கி என்னை பூஜித்த கோலத்தில் பக்தர்களுக்கும் அருள்வள்ளலாக விளங்க வேண்டும் என்று மறைந்தார். அன்று முதல் வள்ளி தெய்வாணை சமேதராக சுப்ரமணியராக வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பஞ்சபாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் வந்தபோது, நாரதர் அறிவுரைப்படி வில்வாரண்யம் ஸ்ரீநல்ல நாயகரை வழிபட்டதால், போரில் வென்று அரசுரிமையைப் பெற்றனர். பீமன் வழிபட்ட மணல் லிங்கம் இன்றும் தனிச்சிறப்புடன் விளங்குகிறது. மதுரையை ஆண்ட வீரபாண்டிய மன்னன் தன் தந்தையின் அஸ்தியை கங்கையில் கரைக்கச் செல்லும் வழியில் நல்லுார் சிவாலயம் வந்து விருத்தப்பிரயாகை நதியில் குளித்து புனித நீரை அஸ்தியில் தெளித்தவுடன் அது தங்க தாமரை மலர்களாக காட்சி கொடுத்தது. உடனே, மன்னன் கங்கை செல்லாது, இங்கேயே அஸ்தியை கரைத்தான். கோமுகி, மயூரம், மணிமுத்தா ஆகிய நதிகள் ஒன்று சேர்வதால் தட்சிணப்பிரயாகை எனப் புகழ்ந்தான். பின், ஸ்ரீநல்ல நாயகருக்கு ஏராளமான திருப்பணிகள் செய்து பிரியா விடை பெற்று தன் நாடு சென்றான்.


27 மனைவியருடன் வாழ்ந்த சந்திரன் காமவெறி கொண்டு, தன் குரு வியாழன் மனைவியை விரும்பி கொடிய பாவத்துக்கும், ரோக நோய்க்கும் ஆளானான். அது தீர பிரம்மதேவன் கட்டளைப்படி நல்லுார் வல்வாரண்ய தலம் வந்து நதியில் குளித்து கார்த்திகை நட்சத்திரமும், பவுர்ணமியும் கூடிய நன்னாளில் பசு நெய்யினால் லட்சம் திருவிளக்குகள் ஏற்றி காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க வழிபாடு செய்து கொடிய நோய் நீங்கப்பெற்றான். இவர், பூசித்த லிங்கம் ஸ்ரீசோமலிங்கேஸ்வரர் என்ற பெயரில் இன்றும் விளங்குகிறது.


நைந்துவம் எனும் நாட்டை ஆண்ட மன்னன் ஏமாங்கதன் மன்னன் புத்திர பேறு இல்லாமையால் தன் குருவான வசிட்டர் ஆணைப்படி, இங்கு வந்து நீராடி சிவ ஆகமவிதிப்படி அம்மையருக்கு அபிேஷக ஆராதனை செய்தான். அதன் பயனாக இறைவன் அருளால் பிறந்த மகனுக்கு பானு எனும் பெயர் சூட்டினான். காஷ்மீர் தேசம் கோளகன் சாரமதி ஆகியோர் மகள் குணநிதி எனும் நற்குணமுள்ள பெண் இருந்தாள். இவளை சுபிச்சனுக்கு மணம் செய்து கொடுத்தனர். கோதாவரியில் குளிக்கச் சென்றவன், பாம்பு கடித்து இறந்தான். குணநிதி அழுது புலம்பும்போது அவ்வழியாக வந்த துருவாச முனிவர் அறிவுரைப்படி வில்வாரண்யத்தலம் வந்து ஸ்ரீபிராணதியாகேசுவரர், பெரியநாயகியை ஐம்புலன்களார வழிபட்டார். பெருமான் குணநிதிக்கு காட்சி கொடுத்து நீ நம் உலகம் அடைந்து அரம்பை என்னும் பெயருடன் நித்திய சுமங்கலியாக வாழ்வாய் என்றருளினார். இதனால், பூத உடம்பை நீர்த்து தேவ உடம்பை பெற்று இன்றும் நித்தி சுமங்கலியாக சிவலோகத்தில் வாழ்வதாக தலபுராணம் கூறுகிறது.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

பஞ்சபாண்டவர்களில் ஒருவரான பீமன் வழிபட்ட மணல் லிங்கம், வடக்கு நோக்கி சிவனை வழிபடும் படும் முருகன் வள்ளி தெய்வானையுடன் அருள்பாலிப்பது. கோவிலுக்கு மேற்கிலிருந்து வரும் மணிமுக்தா, மயூரா– கோமுகி நதிகள் வடக்காகவும், தெற்காகவும் வலம் வந்து கிழக்குப்புறமாக சங்கமிப்பது சிறப்பு.

About the author

Leave a Reply

Your email address will not be published.