பூராண்டாம்பாளையம் பரமசிவன் கோவில்

மூலவர்:


பரமசிவன்


தல விருட்சம்:

வன்னி மரம்


ஆகமம்/பூஜை :

மூன்று கால பூஜைகள்


ஊர்:

பூராண்டாம்பாளையம்


மாவட்டம்:

கோயம்புத்தூர்


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

இத்தலத்தில் திங்கள் வெள்ளிக்கிழமைகளிலும், பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை மற்றும் கிருத்திகை போன்ற முக்கிய விரத தினங்களும் வெகுசிறப்பாக அனுஷ்டிக்கப்படுகின்றன. பெரு விழாக்களாக கார்த்திகை தீபம், ஆருத்ரா தரிசனம், மகாசிவராத்திரி ஆகியவை கொண்டாடப்படுகின்றன. இதில் வருடாந்திர வழிபாடாக தெலுங்கு வருடப் பிறப்பு அன்று வெள்ளியங்கிரியிலிருந்து தீர்த்தம் எடுத்துவரப்பட்டு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகிறது.


திறக்கும் நேரம்:

காலை 7-8.30 மணி முதல் 10.30 மணி வரை, மதியம் 12 மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். (உற்சவ காலங்களில் பூஜை நேரம் மாற்றத்திற்குட்பட்டது.)


முகவரி:

அருள்மிகு பரமசிவன் திருக்கோயில் பூராண்டாம்பாளையம், கோயம்புத்தூர்.


பொது தகவல்:

கிழக்கு நோக்கிய கோயில். அலங்கார மண்டபத்தைக் கடந்து உள்ளே நுழைந்ததும் பெரிய குதிரை சுதை வடிவில் இருக்கிறது. அருகே பெரிய சூலாயுதம் ஒன்று நடப்பட்டுள்ளது. அதனையடுத்து அழகிய மண்டபத்துடன் தீபஸ்தம்பம் உள்ளது.


மகாமண்டபத்தினுள் பலிபீடத்தை அடுத்து நந்திகேஸ்வரர் காட்சி தருகிறார். மகாகணபதி, சுப்பிரமணியரும் இங்கே குடிகொண்டுள்ளனர். மகாமண்டபத்தின் வடக்கே தனிச் சன்னிதியில் தெற்கு பார்த்தவாறு சிவகாமியம்மை உடனமர் ஆனந்த நடராஜர் தரிசனம் தருகிறார். அர்த்த மண்டபத்தைக் கடந்தால் கருவறையை நோக்கி பஞ்ச வேல்களின் உருவில் பரமசிவன் அருள்பாலிக்கிறார். இவரிடம் வேண்டினால் நோய் தீரும். குடும்பத்தில் உள்ள பஞ்சம் விலகும் என்பது நம்பிக்கை. கோயிலின் உள்சுற்றில் சித்தர் முத்துக்குமாரசாமி தவநிலையில் இருப்பது போன்றும், பசு ஒன்று புற்றுக்குள் பால் சுரப்பது போன்றும் சுதைச் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட யானை, குதிரை சுதை வடிவங்கள் இக்கோயிலின் பழைமையைப் பறைசாற்றுகின்றன.


பிரார்த்தனை


உடல் தடிப்பு, விஷக்கடி, காணாக்கடி போன்ற பாதிப்பு உள்ளவர்கள் கோயிலில் தங்கியிருந்து குணமடைந்து செல்கிறார்கள். இக்கோயிலில் வழங்கப்படும் திருநீறு மிகவும் விசேஷம்.


நேர்த்திக்கடன்:

பல்வேறு வேண்டுதல்காரர்கள் பொங்கல் வைத்தும், வெள்ளாடை அணிந்து இங்குள்ள தீர்த்தக் கிணறில் நீராடி சமாதியைச் சுற்றி அடிப்பிரதட்சணம் செய்தும் வழிபடுகிறார்கள்.


தலபெருமை:

திருவண்ணாமலையில் உள்ள நாடி ஜோதிட ஓலைச்சுவடி ஒன்றில் இத்தலம் வந்து பரமசிவனையும், சித்தரையும் வழிபட்டால் சகல காரியமும் சித்தியாகும் என்ற குறிப்புகள் காணப்படுவதாகச் சொல்கிறார்கள்.


தல வரலாறு:

ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என ஐந்து முகங்கள் கொண்டவரான சிவபெருமானுக்கும் ஐந்திற்கும் சிறப்பான தொடர்பு உண்டு. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழிலுக்கு அதிபதி. சிவம், சக்தி, சாதாக்கியம், ஈஸ்வரம், சுத்த வித்யை என சிவ தத்துவம் ஐந்து. ஈசனுக்கு உரிய சிறப்பான மந்திரத்தில் இருப்பது ஐந்தெழுத்து. இது போல் சொல்லிக்கொண்டே போகலாம். சிவ வழிபாட்டில் அரூபவழிபாடு, உருவ வழிபாடு, அருஉருவவழிபாடு என மூவகை இருந்தாலும், சிவன்கோயில் என்றாலே நம் மனக்கண் முன் தோன்றுவது சிவலிங்கமேயாகும். ஆனால், சித்தர் ஒருவரால் பஞ்சாக்கரத்தின் சூட்சும ரூபமாக ஐந்து வேல்கள் நடப்பட்டு, அவற்றை ஒற்றைத் திருநாமமாக பரமசிவன் என்னும் திருப்பெயரினைச் சூட்டி வழிபடப்பட்ட எம்பெருமானை, இன்றும் சிவரூபமாகவே பக்தர்கள் போற்றி வணங்கிடும் தலம் ஒன்று கொங்கு நாட்டில் இருக்கிறது.


பூராண்டாம்பாளையம். மிகப் பழங்காலத்தில் கொங்குவள நாட்டில் சிவபக்தரின் குடும்பம் ஒன்று சிறப்புடன் வாழ்ந்து வந்துள்ளது. அக்குடும்பத்தில் முத்துக்குமாரசாமி என்னும் பெயருடைய சிறுவன் ஒருவனும் இருந்தான். சூலூருக்கு வடமேற்கில் உள்ள அரசூரில் வாழ்ந்த அந்தக் குடும்பத்தார் வினை வலியால் வறுமை நிலையை அடைந்தனர். எனவே வாழ்ந்த ஊரைவிட்டு, கொஞ்சம் தொலைவிலிருந்த பூராண்டாம்பாளையத்திற்குச் செல்லத் தீர்மானித்து கிளம்பினர். வழியில் பெருமழை பெய்து நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சிறுவன் முத்துக்குமாரசாமியும் அவனது தாயும் வேண்டவே, இறைவன் ஆற்று நீரைக் குறைத்தார். நீர் குறைந்ததும் இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு, ஆற்றைக் கடந்து, பூராண்டாம்பாளையம் பகுதியில் பண்ணையார் ஒருவரிடம் வேலையில் சேர்ந்தனர். தாய், வீட்டு வேலை செய்ய, முத்துக்குமாரசாமி மாடுகளை மேய்த்து வந்துள்ளார். அச்சமயத்தில் சிறுவன் அவ்வப்போது இறையருள் வரப்பெற்று தன்னை மறந்து தவ நிலையில் இருப்பார்.


சில சமயம் சித்து வேலைகளைச் செய்வார். அதனைக் கவனித்த பண்ணையார், பொறுப்பு இல்லாமல் கவனக்குறைவுடன் இருக்கிறான் என எண்ணி மிகவும் சினம் கொண்டு தவநிலையில் இருந்த சிறுவனை தண்டிக்க அதனால் எந்தவித பலனும் ஏற்படாமல் போனது. பலமுறை அவ்வாறு நிகழவே, அவனுக்கு உண்மையிலேயே இறையருள் உண்டா என்பதை அறிய பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டை அவனை எடுக்கச் சொன்னார்கள். சிறுவனோ அந்த இரும்புத் துண்டை கையில் எடுத்து வளைத்து அதனை தன் கழுத்தில் போட்டுக் கொண்டார். பிறகு சிறுவனுக்கு உண்மையிலேயே இறையருள் இருப்பதை அறிந்து மன்னிப்புக் கேட்டனர். பின்னர் ஒரு சமயம் பண்ணையாரின் மாடுகள் காணாமல் போக, முத்துக்குமாரசாமி தமது யோகத்தால் அவற்றைத் திரும்ப வரச்செய்தார். அதனை அறிந்த பொதுமக்கள், முத்துக்குமாரசாமியை சித்தராகவே கருதி வழிபடத்தொடங்கினார். உடல், மனநோயுற்று வந்தவர்களுக்கும், விஷக்கடிகளால் பாதிக்கப்பட்டோருக்கும் திருநீறு, தீர்த்தம் கொடுத்து குணப்படுத்தினார். அந்த வகையில் பலனடைந்த நெசவாளி ஒருவர், சித்தருக்கு காணிக்கையாக தமது தறிக்குழி இருந்த இடத்தை அளித்தார்.


ஒரு சமயம் பண்ணையாரின் குதிரை ஒன்றை நீராட்டி பூஜை செய்து சுதந்தரமாக அனுப்பினார் முத்துக்குமாரசாமி சித்தர். மூன்று நாட்கள் பல்வேறு இடங்களில் சுற்றிவிட்டு மீண்டும் வந்த அக்குதிரை, நெசவாளர் சித்தருக்குத் தந்த தறிக்குழியின் அருகே சென்று கனைத்துவிட்டு நகர்ந்து சென்றது. அந்த இடத்தில் தெய்வத்தின் ஆற்றல் நிறைந்திருப்பதை உணர்ந்த சித்தர், அந்தத் தறிக்குழியில் சக்திவேலை நிலைநாட்டி, கோயில் அமைத்து வழிபாடுகள் செய்யத் தொடங்கினார். அவர் அவ்வாறு வழிபடத்தொடங்கியது, தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி நாள் ஒன்றில் என்கிறார்கள். அதன்பின்னர் ஒற்றையாக இருந்த வேல் ஐந்தாக மாற்றி அமைக்கப்பட்டது. சித்தர் சித்தி அடைந்ததும் அந்த வளாகத்திலேயே அவருக்கு சமாதி அமைத்தனர். வந்து வணங்கியோர் அனைவரும் வளமும் நலமும் பெறவே கோயிலும் வளர்ந்து 1966, 1974, 1999, 2015 ஆகிய ஆண்டுகளில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடத்தியுள்ளனர். இத்தலத்தை அமைத்த சித்தரின் சமாதி உள்ள இடத்தில் புற்று தோன்றியுள்ளது. அங்கு வேம்பு, அரசமரம், சங்கஞ்செடி, தொரட்டி மரம் என நான்கும் ஒன்றாய்ச் சேர்ந்து வளர்ந்துள்ளன. சமாதியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தும், வேல் மற்றும் சூலாயுதங்களை நட்டும் வழிபட்டு வருகின்றனர்.


சிறப்பம்சம்:

About the author

Leave a Reply

Your email address will not be published.