வெள்ளியங்கிரி (மலை அடிவாரம்) வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில்

மூலவர்:


வெள்ளியங்கிரி ஆண்டவர்


அம்மன்/தாயார்:

மனோன்மணி


ஊர்:

வெள்ளியங்கிரி (மலை அடிவாரம்)


மாவட்டம்:

கோயம்புத்தூர்


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

இத்தலத்தில் தமிழ் மாதத்தின் முதல்நாள், பிரதோஷம், அமாவாசை, கிருத்திகை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. சித்திரை மாதத்தில் தொடங்கி பங்குனி வரை உள்ள மாதத்திருவிழாக்கள் நடைபெற்றாலும் சித்திர பவுர்ணமியும் பங்குனி உத்திரமும் இத்தலத்தின் தலையாய பெருவிழாக்களாகும். சித்திரா பவுர்ணமியன்று லட்சக் கணக்கான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலை மீதுள்ள பஞ்ச லிங்கத்தை தரிசித்து வருவர். பங்குனி உத்திரத்தன்று அடிவாரக் கோயிலிலும் மலைக் கோயிலும் சிறப்பு பூஜைகள் உண்டு. திருக்கல்யாண உற்சவம் நடப்பதைக் காண ஏராளமான பக்தர்கள் கூடுவர். கையிலை மலையில் நடப்பதற்கு ஒப்பானது என்பதுடன் ஒரு முறையேனும் திருக்கல்யாணத்தை காணும் பாக்கியம் பெறவேண்டும்.


தல சிறப்பு:

கோயிலின் வடக்குப் பகுதியில் ஐந்து விநாயகர் திருமேனிகள் அமைந்த பஞ்ச விநாயக மண்டபம் உள்ளது. அடுத்து கல்லினால் வடிக்கப்பட்ட ராசித்தூண் வேறு எந்தக் கோயிலும் காணப்படாத ஒன்று. விரிந்த தாமரை மலரின் நடுவே உள்ள தண்டில் 9 தாமரை மலர்களை அடுக்கி வைத்தாற்போல் உருவாக்கப்பட்டுள்ளது. மேல் பகுதியில் ஒரு குடையும் அதன் மேல் ஓர் அழகிய அன்னப் பட்சியின் திருஉருவத்தை அமைத்துள்ளனர். விரிந்த தாமரை மலரின் கீழ்பகுதியில் 12 ராசி சிற்பங்களை புடைப்பு சிற்பங்களாக நேர்த்தியாக வடித்துள்ளனர். மலர்ந்த தாமரையின் மேல் உள்ள பீடத்தில் நவகிரஹ நாயகர்கள் வட்ட வடிவில் நின்ற கோலத்தில் அருள்கின்றனர். இந்த ராசித்தூணை சுற்றி வந்து வணங்கும் போது நவகிரஹங்களையும் ராசிகளையும் தொழுத பலன் கிடைக்கும்.


திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு7 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பூண்டி, வெள்ளியங்கிரி (மலை அடிவாரம்) கோயம்புத்தூர்


போன்:

+91 422 -2615258, 2615570.


பொது தகவல்:

கோவை மாநகருக்கு மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்கு எல்லையில் அடிவாரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில். வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில். வெள்ளியங்கிரி மலை 7 மலைகளைத் கொண்ட 6350 அடி உயரத்தில் ஒரு குகையில் சுயம்பு பஞ்ச லிங்கங்களாக எழுந்தருளியுள்ள மலையின் அடிவாரத்தில் அமைந்த கோவிலாகும். இத்தலம் அமைந்துள்ள இடம் பூண்டி என வழங்கப்படுகிறது.


நேர்த்திக்கடன்:

பங்குனி உத்திரத்தின் அடுத்த சிறப்பு காவடிகள், சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களிலிருந்து காவடி எடுத்து பாதயாத்திரையாக வந்து ஈசனுக்கு நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.


தலபெருமை:

வெள்ளியங்கிரி மலை ஏறுவது என்பது எளிதான காரியமில்லை. 60 வயதைக் கடந்தவர்கள். இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, இருதய நோய் உள்ளவர்கள் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் மலையேற அனுமதி இல்லை. பூண்டி அடிவாரத்திலிருந்து கிரிமலைக்கு சென்று சன்னதியை யடைய சுமார் 5.5 கி.மீ. தூரமும் 6350 அடி உயரமும் பயணிக்க வேண்டும். 5, 6, 7 மலைகளில் கடுங்குளிர் நிலவும். தென்கயிலை எனும் வெள்ளியங்கிரியற்றிய பெருமைகளை கச்சியப்ப முனிவர் இயற்றிய பேரூர் புராணத்தில் வியந்து பாடிஉள்ளார்.


வெள்ளியங்கிரி மலை மேல் கோரக்கர் முனிவர் பிறந்து வளர்ந்து தெய்வ கடாட்சம் பெற்றும், பல்கலை மேடையில் சகல கலை ஞானங்களை கற்றும் வல்ல சித்துக்கள் விளைத்தார் என கோவம்ச சரித்திர நூல் கூறுகின்றது.


வெள்ளியங்கிரி மலையின் சாரல் மலைத்தொடரில் உற்பத்தியாகி மரங்கள் அடர்ந்த சோலைகள் நடுவே பாய்ந்து வருகின்றது. இதனை காஞ்சி மாநதி என அழைக்கின்றனர். இந்நதியில் மூழ்கி எழுந்தால் பாவங்கள் நீங்கும் தேவர்கள் முனிவர்கள் இந்நதியில் மூழ்கி மும்மலங்களிலிருந்தும் நீங்கினர். இதனை சிவநதி எனவும் அழைக்கின்றனர்.


வெள்ளியங்கிரியைப் பற்றிய குறிப்புகள் சோழன் பூர்வ பட்டயம், பேரூர் புராணம், வெள்ளிமலை கட்டளை கலித்துறை அந்தாதி, வெள்ளியங்கிரி மகிமை போன்ற நூல்களில் காணப்படுகின்றன.


இறைவன் தத்துவம் பொருளால் எல்லா இடங்களிலும் விளங்குகின்றனர். தீர்த்தம், மூர்த்தி தலம் இவற்றால் நினைகின்றவர் நினைவிற்கு ஏற்ப காட்சி தருகின்றார். வெள்ளியங்கிரி மலையில் மூலிகை, தாதுப் பொருட்கள் மிகுந்து உள்ளன. மூலிகை மணம், பூக்களின் மணம் இரண்டும் கலந்து சுவாசிப்பதால் உடலுக்கு நன்மை ஏற்படுகின்றது. பலர் உடம்பிலிருந்து கெட்ட நீர் வியர்வையாக வடிந்து, காற்றுக் குழாயும் சுவாசப்பையும் மார்பு எலும்புகளும் விரிந்து சுருங்குவதால் நம் உடற்பணி நீங்கி நலம் பெருகிறோம். மூலிகை கலந்த சுனைநீரில் நீராடினால் நல்ல உடல் சுகம் கிடைக்கும். இம்மலையில் கிடைக்கும் வேங்கை மாத்துப்பாலை திலகமாக இடுவதன் மூலம் முக வசீகரம் உண்டாவதாக கூறப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அலகு மலையில் எழுந்தருளி இருக்கும் முருகனுக்கு வேங்கைப் பாலால் திலகம் இடப்படுகிறது. இவ்வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் பிறந்த குழந்தைகளுக்கு வேங்கைப் புலால் திலகமிடும் வழக்கம் தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.


இத்தனை சிறப்புக்களைத் தன்னகத்தே பெற்றிருந்தாலும் வருடம் முழுவதும் 7வது மலையில் எழுந்தருளி உள்ள பஞ்ச லிங்கங்களைத் தரிசிக்க இயலாது. வெள்ளியங்கிரி மலைமீது செல்வதற்கு தை, மாசி, பங்குனி மற்றும் சித்திரை மாதங்கள், மட்டுமே உகந்தவை இக்கால கட்டத்தில் மட்டும் தான் பக்தர்கள் மலைமீது செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். மலை வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் அவர்கள் அனுமதிக்கும் போதுதான் செல்ல முடியும். மற்ற நாட்களில் பக்தர்கள் மலைமீது செல்லமுடியாத நிலை.


16ம் நூற்றாண்டுக்குப் பின் முட்டத்துப் பகுதி மக்கள் அருகில் உள்ள கிராமங்களில் குடியேறினர். சென்ற நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் தான் இப்பகுதியில் ஜன நடமாட்டம் ஏற்பட்டது. அது முதல் வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் சென்று வரத் தொடங்கினர்.


அருகில் உள்ள செம்மேடு என்ற பகுதியை விளை நிலமாக்கியதோடு ஊரையும் உண்டாக்கியது. வெள்ளக்கிணறு வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டார் குடும்பத்தார் வெள்ளியங்கிரி செல்லும் பக்தர்களுக்கு துணை நின்று, வெள்ளியங்கிரியின் பெருமையை உலகுக்கு அறிவித்தனர். 20 நூற்றாண்டின் துவக்கத்தில் சவுந்திர பாண்டிய சுவாமிகள் பூண்டியில் தங்கி இருந்து சுனை அருகே மேடை அமைத்து அதில் லிங்கப் பிரதிஷ்டை செய்ததுடன் தெப்பகுளத் திருப்பணியையும் மேற்கொண்டார்.


பிற நாட்களில் வெள்ளியங்கிரி அடிவாரத்திற்கு வருடம் பக்தர்கள் அரச மரத்தடியில் உள்ள லிங்கத்தைத் தரிசித்து திரும்பிச் சென்றனர். பக்தர்கள் அடிவாரத்தில் ஒரு கோயில் இருந்தால் மற்ற நாட்களில் வந்து தரிசித்துச் செல்ல ஏதுவாக இருக்கும் என்ற அவாவையம் கோரிக்கையையும் கோயிலில் இருந்த நிர்வாகியிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர்.


ஆண்டு முழுவதும் பக்தர்கள் வழிபாடு செய்ய தவத்திரு சுந்தர சுவாமிகள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுகற் கோயிலை கட்டினர். பூண்டி விநாயகர், வெள்ளியங்கிரி ஆண்டவர் மற்றும் மனோன்மண்யம்மை ஆகியோருக்கு தனித்தனியே கற் கோயில்கள் விமானங்களுடன் எழுப்பப்பட்டது. பின் மூன்று சன்னதிகளுக்கு முன் சித்திரதூண்களுடன் கூடிய மகா மண்டபம் கட்டிமுடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது.


தினசரி பூஜைகளும், சதுர்த்தி, பிரதோஷம், பவுர்ணமி அமாவாசை மற்றும் சிவனுக்குரிய சிறப்பு விழாக்கள் நடைபெற்று வருகின்றது. இக் கோயில் பூர்த்தியான நிலையில் வருட முழுவதும் பக்தர்கள் வரத்துவங்கினர் இரவு நேரங்களில் தங்குவதற்கென சத்திரங்களும் ஏற்படுத்தப்பட்டன. இந்த இடம் வனத்துறையின் கட்டுப் பாட்டில் இருக்கின்றது. மேலும் அடர்த்தியான வனம் சூழ்ந்தபகுதி. யானை போன்ற காட்டு மிருகங்களின் நடமாட்டம் உள்ள பகுதி. எனவே மாலை 7.00 மணிக்குமேல் சாலையில் பயணிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.


கோயிலுக்கு வரும் பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரிக்க, பக்தர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இளைப்பாறும் மண்டபங்களும் அன்னதான கூடங்களும் இதில் அடக்கம். ஏழு ஆண்டுகளுக்கு முன் மாணிக்க வாசகர் மற்றும் சிவகாமியுடன் 4 1/2 அடி உயரமுள்ள நடராஜப் பெருமான் பஞ்சலோக திருமேனிகள் எழுந்தருளச் செய்யப்பெற்றது. அதன் பின் ஆடவல்லானை புடைசூழ சிவனடியார் திருக்கூட்டம் வேண்டும் என்ற எண்ணத்தில் 63 நாயன்மார்கள் திருமேனிகள் உட்பிரகாரத்தில் அழகுற நிறுவப்பட்டன. இத்துடன் சந்தான குரவர்களான மெய் கண்டார். அருணநந்தி சிவம், மறைஞான சம்பந்தர் உமாபதி சிவம் ஆகியோருக்கும் வெள்ளியங்கிரியைப் போற்றி பாடியவர்களில் முதன்மையானவர்களான கச்சியப்ப முனிவர் கந்தசுவாமிகள் ஆகியோருக்கும் சிலைகள் நிறுவப்பட்டன.


திருக்கோயில் வளாகத்தில் நுழைந்தவுடன் திருக்கோயிலை மறைத்துக் கொண்டிருந்த பழமையான ஓட்டு வில்லை கட்டிடங்களை அகற்றி, அவ்விடத்தில் ஓர் அழகிய நந்தவனம் அமைக்கப்பெற்று முருக நாயனார் நந்தவனம் என்ற பெயரில் எழிலுடன் திகழ்கின்றது.


பங்குனி உத்திரத்தின் அடுத்த சிறப்பு காவடிகள், சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களிலிருந்து காவடி எடுத்து பாதயாத்திரையாக வந்து ஈசனுக்கு நேர்த்திகடன் செலுத்துவது பார்ப்போர் மனைதவிட்டு அகலாத ஒன்றாகும். சிறுவர்கள்முதல் பெரியவர்கள் என பெண்கள் உட்பட காவடி எடுத்து வந்து தாரை தப்பட்டை (தோல் கருவிகள்) முழங்க அதற்கு ஏற்றால் போல் ஆடிவருவது கண்கொள்ளாக் காட்சியாகும். இரவு முழுவதும் காவடிகள் வந்த வண்ணமாய் இருக்கும். பங்குனி உத்திரத்தில் காவடிக்கு முக்கியத்துவம் என்றால் அது மிகையாகாது.


லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்தாலும் உணவுக்குப் பஞ்சமில்லை. பல்வேறு தரப்பில் இருந்தும் அன்னதானம் வழங்கப்படுகிறது. மற்ற பிற வசதிகளையும் அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர். ஒருமுறையாவது பங்குனி உத்திரம் பெருவிழாவிற்கு சென்று தொழுது வருவது வாழ்வில் சிறந்த பயனைத்தரும்.


தேன் மிக்க பூமாலையை கையில் ஏந்தி வெள்ளியங்கிரி ஆண்டவனை பூஜித்து திருவருளை விரும்பியவர்கள், எடுத்த இப் பிறவிலேயே நினைத்த எல்லாவற்றையும் பெற்று பேரின்பம் அடைவார்கள் எனக் கூறப்படுகிறது.


நாரதர், கோமுன், காமதேனு பட்டிமுனி முதலானோர் வெள்ளியங்கிரி ஆண்டவனை தரிசித்து பேறுபெற்றதை அவர்கள் பாடிய பாடல்கள் மூலம் அறியப்படுகிறது.


தல வரலாறு:

காலவ முனிவர் அனுதினமும் காஞ்சிமா நதிக்கரையில் நீராடி பட்டியெம்பதி பெருமானை வணங்கி பேரூரில் தவமிருந்தார். சிவபெருமான், உமையானை விடுத்து பேரூரில் சித்தமும் மூர்த்திகளாக எழுந்தருளி வெள்ளி மன்றத்தை உமக்கு காட்டுவோம் எனக் கூறி பேரூர் பொன்னம்பலத்தில் உமயவளோடு நடனம் ஆடினார். இந் நடனத்தைக் கண்ட காளிதேவி எப்போதும் இந் நடனத்தைக் கண்டு மகிழ அருள் புரியுமாறு வேண்டினார்.


அப்போது உமையவள் இறைவன் திருக்கூத்தினை கண்டு மகிழும் முதன்மைப் பேறு தமக்கே உரியதென்றும், தன் பொருட்டு ஒரு திருநடனம் ஆடிக்காட்டுமாறு வேண்டினார். இறைவன் அகமகிழ்ந்து உமையவள் கண்டு மகிழ வெள்ளியில் கிரி மலைமேல் உள்ள மூலத்தானத்தில் திருநடனம் ஆடினார். அவ்விடம் தற்போது பல்கலை மேடை என வழங்கப்பெறுகிறது.


படம், தகவல்:

வி.பி. ஆலாலசுந்தரம், கோவை


சிறப்பம்சம்:

About the author

Leave a Reply

Your email address will not be published.