வேடப்பட்டி அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில் – Uma Maheswarar Temple

அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில்


மூலவர்:

உமாமகேஸ்வரர்


அம்மன்/தாயார்:

உமா


ஊர்:

வேடப்பட்டி


மாவட்டம்:

கோயம்புத்தூர்


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

இத்தலத்தில் பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி, கிருத்திகை, அமாவாசை போன்ற திருநாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. பவுர்ணமியன்று மாலை 108 நாமாவளி அர்ச்சனையுடன் பூஜைகள் நடைபெறும். வருட உற்சவ திருநாளான ஆனி திருவாதிரை அன்று 108 சங்காபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. பிரதிஷ்டா தினமான தை மாத அஸ்த நட்சத்திர நாளன்று காலை 4.00 மணி வேள்வி பூஜை யுடன் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டு வழிபடுவது உள்ளத்திற்கும் அமைதியையும் உடலுக்கு ஆற்றலையும் தரும்.


தல சிறப்பு:

பொதுவாக சிவன் கோயில்களில் ஈசன் லிங்க ரூபத்தில் தனிச்சன்னதியிலும் அம்பிகை தனிச்சன்னதியிலும் அருள்பாலிப்பர். ஆனால் இத்தலத்தில் ஈசனும் அம்பிகையும் ஒருசேர தம்பதி சமேதராய் அமர்ந்து சிலா ரூபத்தில் அருள்பாலிப்பது பெருஞ் சிறப்பாகும். இது போன்ற ஸ்தலங்கள் தமிழ் நாட்டில் மிகச் சிலவே. உமையும் ஈசனும் தம்பதி சமேதராய் அமர்ந்து பக்தர்களின் வேண்டுதல்கள் யாவும் தாயுள்ளத்தோடு நிறைவேற்றி வைப்பது கண்கூடு. இது ஒரு சிறிய கிராமத்துக் கோயில். இருப்பினும் இத்தலத்தில் வியப்பிக்கும் தெய்வீக அதிர்வுகள் இத்தலத்தின் உன்னதத்தை உணர்த்துகின்றன. பூஜைகள் யாவும் தமிழ் முறைப்படியே நடந்தேறி வருகின்றன. கோயிலின் பெயர் இடிந்த கோயில் என்று இருந்தாலும் பலரது வாழ்க்கை துளிர்விட வஞ்சனை இன்றி வரம் அளிக்கிறார்கள் இத்தலத்து இறைவனும் இறைவியும்.


திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 10.30 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில், கீழச் சித்திரை சாவடி, வேடப்பட்டி, கோவை-641007.


போன்:

+91 9894778975


பொது தகவல்:

இத்தலத்தில் விநாயகர், முருகன், துர்க்கை, அம்பிகையின் பாதம், சண்டிகேஸ்வரர் என தனித்தனியே அமர்ந்து அருள் சொரிகின்றனர். காலை 7.30 மணிக்கு அபிஷேகத்துடன் கூடிய ஒருகால பூஜை நடந்து வருகின்றது. இத்தலத்தை இடிந்த கோவில் என்பர். பெயரே ஒரு வித்தியாசமாக இருக்கிறதல்லவா? அப்படி சொன்னால் தான் இப்பகுதியில் உள்ள முதியவர்களுக்கு எளிதில் புரியும்.


பிரார்த்தனை


எத்தகைய கிரக தோஷமாக இருந்தாலும், பித்ருக்கள் மூலமாக ஏற்பட்ட தோஷமாக இருந்தாலும் உமாமகேஸ்வரர் அருளால் அத்தோஷங்கள் விலகி விவாகம் நடைபெற்று விடும் என்பது உறுதி.


நேர்த்திக்கடன்:

திருமணத்தடை உள்ளவர்கள், பூஜைசாமான்களுடன் வெட்டிவேர் மாலை சாற்றி, ஆண்கள் என்றால் சந்தனக் கட்டையும், பெண்கள் என்றால் மஞ்சள் கொம்பும் வைத்து பூஜித்து பின் பயன்படுத்த வேண்டும். பதினொரு வாரங்கள் திங்கள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் இப்படிச் செய்து நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லி 5 முறைகோவில் வலம் வந்து பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வழிபாடு செய்து ஈசன் தாள் பணிந்து சரணடைந்தால் நிச்சயமாக 11 வாரங்களுக்குள்ளாகவே திருமண காரியங்கள் நிறைவேறியதாக பயன்பெற்றோர் தெரிவிக்கின்றனர்.


தலபெருமை:

கோவையில் ஒரு வசதியான பொன் வணிகர் ஒருவருக்கு மூன்று பெண் குழந்தைகள். பெரிய பெண் திருமணவயதைத் தாண்டியும் திருமணமே ஆகவில்லை. கும்பகோணம் பகுதியில் உள்ள திருமணஞ்சேரி மற்றும் எத்தனையோ கோவில்களில் வேண்டுதல், பரிகாரம் என மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை. மனதாலும் உடலாலும் மிகவும் பாதிக்கப்பட்õர். அந்த நேரத்தில் நண்பர் ஒருவர் மூலம் ஜோதிடரின் அறிமுகம் கிட்டியது. தன் மூத்த மகள் ஜாதகத்தை அவரிடம் கொடுத்து கணித்துப்பார்த்தார் அப்பெண்ணிற்கு சில தோஷங்கள் இருப்பதாகவும், ஏதாவது ஒரு சிதிலமடைந்த சிவன்கோயிலை எடுத்து புனருத்தாரணம் செய்தால் உங்கள் பெண்ணிற்கு உடனே திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். அவ் வணிகர் திருப்பணி செய்வதற்கு ஏற்ற கோவிலைத் தேடும் படலத்தை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் தேட ஆரம்பித்தார். வெளி ஊர்களில் தேடியும் உரிய கோவில் கிடைக்கவில்லை. அச் சமயத்தில் தான் கோவை- வேடபட்டி கீழச் சித்திரைச் சாவடியில் உள்ள இடிந்த கோவில் பற்றிய தகவல்கள் கிடைத்தன. உடனே அவ்விடத்திற்கு ஒரு குழுவாயச் சென்று பார்வையிட்டனர். அந்த கோவில் பற்றிய விபரங்களையும் வரலாற்றையும் அவ்வூரில் உள்ள முதியவர்களைச் சந்தித்து கேட்டறிந்தார். தன்னால் இயன்ற திருப்பணி செய்வதற்கு ஏற்ற கோவில் என்பதையும் உணர்ந்தார். பொதுவாக கோவில் திருப்பணி என்றால் தனிப்பட்ட ஒருவரே செய்யாமல் மற்றவர்களின் பங்களிப்பும் இருக்கும். அவர் சார்ந்து உள்ள அறக்கட்டளை உறுப்பினர்களின் உறுதுணையினாலும் ஊர் மக்களின் ஒத்துழைப்பினாலும் கோவில் கட்டுமான பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் செவ்வனே நிறைவேறியது. இடிந்த கோவிலானது 500 ஆண்டுகட்கு முற்பட்ட, பேரூர், பட்டீஸ்வரர் கோவிலுக்கு தொடர்புடைய அம்மன் கோவில். கோவில் திருப்பணி துவங்க திட்டமிட்டு நாள் குறித்து, பூமி பூஜை போடப்பட்டது அப்போதே அவரது மூத்த பெண்ணிற்கு நல்ல வரன் அமைந்து நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திட்டமிட்ட படி திருப்பணி நடந்து முடிந்து, முறையாக திருக்குட நன்னீராட்டு விழாவும் இனிதே நடைபெற்றது. இதில் வியப்புக்குரிய நிகழ்வு என்னவெனில் திருமணம் நிச்சயமான பெண் கணவருடன் தம்பதி சமேதராய் வந்து விழாவில் கலந்து தொழுது ஈசனின் அருள் பெற்றதுதான். ஈசனை மெய் உணர்வோடு தொழுது பாதம் பற்றி சரணடைந்தால், ஈசன் நம்மை என்றும் கைவிட மாட்டார் என்பது திண்ணம்.


தல வரலாறு:

சுமார் ஐந்நூறு ஆண்டுகட்கும் முற்பட்ட இக்கோயில், பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்குத் தொடர்புடைய அம்மன் கோயில் எனப்படுகிறது. நவராத்திரி கொலு வைபவத்தின் போது ஈசன் காஞ்சிமா நதி தாண்டிச் சென்று அம்பு சவாரி நடத்திய இடம். திருக்கல்யாண உற்சவத்தில் இரவு நடுநிசிவேளையில் அம்பிகையை அழைத்து வந்து பட்டீஸ்வரருடன் திருக்கல்யாண உற்சவம் நிகழ்ந்த பின் சுவாமி ரதம் ஏறி வலம் வந்தது அக்கால சிறப்பு நிகழ்வாகும். காலப்போக்கில் இத்தலம் கவனிப்பாரற்று பராமரிப்பு இன்றி இருந்ததால் சிதிலமடைந்து சிறிது சிறிதாக இடிந்தே விட்டது. அம்பிகையின் திருஉருவமும் பழுதடைந்து விட்டது. மிஞ்சியது பாதம் மட்டுமே அப்பகுதியில் மாடுமேய்ப்பவர்களும், வழிப்போக்கர்களும் வழிபட்டுச் செல்வர். நூறு ஆண்டுகளுக்கு மேலாக இத்தலம் இடிந்த நிலையில் இருந்ததால் இடிந்த கோவில் என்ற பெயர் நிலைத்துவிட்டது. அப்பகுதியில் உள்ள முதியவர்களுக்கு இப்பெயர் சென்னால் தான் உடனே விளங்கும். வெள்ளலூர் சுவாமி என்பவர் இத்தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டு அந்நிலையிலேயே வழிபடுபாடுகளை நடத்தி வந்தார். அச்சமயத்தில் அவரைச் சுற்றி பாம்புகள் ஊர்ந்து சென்றதையும், பாம்புகள் அவர்மீது கிடந்ததையும் அவ்வூர் முதியவர்கள் நினைவுகூர்கின்றனர்.


தகவல்:

வி.பி. ஆலாலசுந்தரம், கோவை


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

பொதுவாக சிவன் கோயில்களில் ஈசன் லிங்க ரூபத்தில் தனிச்சன்னதியிலும் அம்பிகை தனிச்சன்னதியிலும் அருள்பாலிப்பர். ஆனால் இத்தலத்தில் ஈசனும் அம்பிகையும் ஒருசேர தம்பதி சமேதராய் அமர்ந்து சிலா ரூபத்தில் அருள்பாலிப்பது பெருஞ் சிறப்பாகும். இது போன்ற ஸ்தலங்கள் தமிழ் நாட்டில் மிகச் சிலவே.

About the author

Leave a Reply

Your email address will not be published.