தாருகாவனம் அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் – Naganathar Temple

அருள்மிகு நாகநாதர் திருக்கோயில்


மூலவர்:

நாகநாதர்


அம்மன்/தாயார்:

நாகேஸ்வரி


தீர்த்தம்:

பீம தீர்த்தம், கோடி தீர்த்தம், நாகதீர்த்தம்.


ஊர்:

தாருகாவனம்


மாவட்டம்:

ஜாம்நகர்


மாநிலம்:

குஜராத்


திருவிழா:

சிவராத்திரி, பிரதோஷம் முதலிய திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.


தல சிறப்பு:

தெற்கு நோக்கிய லிங்கம். சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று.


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், தாருகாவனம், ஜாம்நகர் மாவட்டம், குஜராத் மாநிலம்.


பொது தகவல்:

விநாயகர், முருகன், மற்றும் லிங்கங்கள், நந்திதேவர் பஞ்சபாண்டவர்கள், தாருகவன முனிவர்களும் அவர்களது பத்தினிகளும் பிட்சாடனர், மோகினி வடிவத் திருமால் ஆகியோர் பரிவார மூர்த்திகளாக உள்ளனர்.


பிரார்த்தனை


பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் நிறைவேற இங்குள்ள நாகநாதரை வழிபட்டுச் செல்கின்றனர்.


நேர்த்திக்கடன்:

இங்குள்ள மூலவருக்கு வில்வ இலையால் அபிஷேகம் செய்து வேண்டிச் செல்கின்றனர்.


தலபெருமை:

நாகநாதரின் கோயில் மிகப்பழமையானது. ஜோதிர்லிங்கத் தலங்களிலேயே முதன்முதல் தோன்றிய தலம் என்றும் கூறுகின்றனர். கோயிலின் நான்கு பக்கங்களிலும் உயர்ந்த மதிற்சுவர்களும் உள்ளே பரந்த விசாலமான இடமும் உள்ளது. கிழக்குப் பக்கத்திலும், வடக்குப்பக்கத்திலும், வாயில்கள் உள்ளன. அதில் வடக்கு பக்கம் வாயில் மட்டும் பெரிதாகவும், புழக்கத்திலும் உள்ளது. கோயில் கோபுரம் வாழைப்பூ போன்று கூம்பு வடிவில் மிக உயரமாகவும், அநேக சிற்பவேலைப்பாடுகளுடன் கூடியதாகவும் காணப்படுகிறது. கோயில் கோபுரத்தின் கீழ் கர்ப்பகிரகத்தினுள் ஒரு மேடை மட்டுமே உள்ளது. கர்ப்பகிரகத்தின் இடப்பக்கம் மூலையில் மட்டும் ஒரு நான்கடி நீளம், நான்கடி அகலமுள்ள சுரங்கப் பாதை உள்ளது. அதன்வழியே உள்ளே சென்றால் பூமிக்கடியில் ஒருசிறு அறையில் மூலவர் நாகநாதர் இருக்கின்றார். அந்தச்சதுரமான துவாரத்தின் வழியே பக்தர்கள் குதித்து தான் இறங்க வேண்டும். மேலே வரும்போது தாவித்தான் ஏறி வர வேண்டும். பக்தர்கள் நெருக்கத்தின் காரணமாக உள்ளே செல்வதும், மேலே ஏறி வருவதும் வயதான பக்தர்களுக்குச் சற்றுக்கடினமாகவே உள்ளது.


பாதாள அறையில் நிற்கமுடியாது. மேற்கூறை தலையில் முட்டிக்கொள்ளும். பக்தர்கள் குனிந்து சென்று மூலவரைச் சுற்றி அமர்ந்து தான் சாமியைத் தரிசிக்க வேண்டும். மூலலிங்கம் சிறியதாக உள்ளது. வெள்ளியிலான முகபடாம் கவசம் வைத்து வழிபடுகின்றனர். அங்கு அமர்ந்திருக்கும் பண்டாவிற்கு தட்சிணை கொடுத்தால் கவசத்தை நீக்கி லிங்கதரிசனம் செய்ய வழி செய்கின்றனர். அந்தக் கர்ப்பகிரகத்தினுள் காற்றோட்டவசதி கிடையாது. தற்போது பேன் வசதி செய்துள்ளார்கள். என்றாலும் அதிகமான பக்தர்கள் உள்ளே சென்றால் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. எனவே பக்தர்கள் பொறுமை காத்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டும்.


தல வரலாறு:

நாகநாதம் என்னும் இக்கோயில் உள்ள பிரதேசம் முன்பு பெரும் காடாகவும், வனமாகவும் இருந்தது. அக்காலத்தில் இது தாருகவனம் எனப் புகழ் பெற்றதாக விளங்கியது. தாருகவனத்தில் பல ரிஷிகளும், முனிவர்களும், தங்கள் மனைவிமார்களுடன் வாழ்ந்து வந்தனர். தாருகவன முனிவர்கள் மிகுந்த தவ வலிமையாலும், தங்களது பத்தினிகளின் பதிவிரதத் தன்மையாலும் மிகவும் கர்வம் கொண்டனர். இறைவன் இல்லை, தவம் செய்தலே சிறந்தது என்றும் இன்னும் பலபடியாக நாத்திகம் பேசிவந்தனர். மேலும் சிவபெருமானையும் மதியாமல் அவமரியாதையாகவும் பேசியும் செயலில் ஈடுபட்டும் வந்தனர். தங்களது தர்ம பத்தினிமார்களின் கற்புநிலையைக்கொண்டு மிகவும் கர்வம் கொண்டிருந்தனர். ஒருவன் எவ்வளவுதான் பலமிக்கவனாக இருந்தாலும் அவனுக்கு மிகுந்த பலத்தையும் புகழையும் தருவது அவனுடைய மனைவியின் மாண்பே ஆகும். தாருக வனத்து முனிவர்களின் கர்வத்தை அகற்றி அவர்களை நல்வழிக்குத் திருப்ப வேண்டுமென சிவபெருமான் திருவுளம் கொண்டார். எனவே சிவபெருமான் மிக அழகிய ஆண்மகனின் திருஉருவம் கொண்டு நிர்வாணமாகத் தாருகவனம் சென்றார். தாருகவனத்து முனிவர்கள் பர்ணக சாலை தோறும் சென்று வாசலில் நின்று பிச்சாந்தேகி எனக்கூறி, பிச்சாடனமூர்த்தியாக பிச்சை கேட்டார். பிச்சையிட வந்த முனிவர்களின் பத்தினிகள் பிச்சாடன மூர்த்தியின் அழகையும் பிரகாசத்தையும் கண்டு தம் கருத்தையிழந்து அவர் உருவுமேல் மோகம் கொண்டனர். பத்தினிமார்கள் அனைவரும் தம் கருத்தழிந்து சிவபெருமான் பின்னாலேயே தங்களையும் அறியாமல் சென்றனர். தாருகவனத்து முனிவர்கள் அனைவரும் தத்தம் மனைவியைக் கூப்பிட்டுக் கொண்டே அப்பெண்கள் பின்னாடியே பதறிக் கொண்டு ஓடினார்கள். சிவலீலை என்னவென்று கூறுவது?


முனிவர்களின் மனைவிமார்கள் சிவபெருமான் பின்னாடியே வர அவர் சிவசிவ எனக் கூறிக்கொண்டே பெரும்காட்டுப் பகுதிக்குச் சென்றார். நடுக்காட்டில் ஒரு குளத்தின் கரையிலிருந்த ஒரு பெரும் நாகப்பாம்பின் புற்றுக்குள் சென்று மறைந்து விட்டார். முனிவர் மனைவியர் யாவரும் அப்பாம்புப் புத்தினை அணுகி அதனையே சுற்றிச் சுற்றி வந்தனர். தாருகவனத்து முனிவர்கள் அவர்களை எவ்வளவோ வருந்தி வேண்டிக் கூப்பிட்டும் அவர்கள் வரவில்லை. சிவபெருமான் நுழைந்த பாம்புப்புற்றினுள்ளிருந்து மிகுந்த பிரகாசம் வெளியே வந்தது. யாவரும் உள்ளே எட்டிப்பார்க்கையில் சிவபெருமான் ஜோதிர்லிங்கமாகக் காட்சி தந்தார். அந்த ஜோதிர்லிங்கத்தின்மீது ஐந்து தலை நாகம் படமெடுத்து குடை போல நின்றது. இக்காட்சியைக் கண்ட அனைவரும் வந்தது சிவபெருமானே என உணர்ந்தனர். தங்கள் கர்வத்தை விட்டு சிவபெருமானைப் புகழ்ந்து அவரை வழிபட்டனர். அவ்விடத்தே பிற்காலத்தில் கட்டப்பட்ட கோயில்தான் இத்தலம் ஆகும். இவ்வாறு சிவபெருமான் பிட்சாடனராக சிவலீலை புரிந்து தாருகவனத்து முனிவர்களின் கர்வத்தைப் போக்கி நாத்திகவாதத்தையும் போக்கி நாகப்பாம்பின் புற்றுக்குள் நாகத்தின் குடையுடன் காட்சி தந்தமையினால் நாகநாதர் எனவும் தலத்திற்கு நாகநாதம் எனவும் பெயர் வந்தது. ஜோதி வடிவமுடன் காட்சி தந்தமையினால் ஜோதிர் லிங்கமாயிற்று.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று.

About the author

Leave a Reply

Your email address will not be published.