மாங்காடு அருள்மிகு வெள்ளீஸ்வரர் திருக்கோயில் – Velleswarar Temple

அருள்மிகு வெள்ளீஸ்வரர் திருக்கோயில்


மூலவர்:

வெள்ளீஸ்வரர் ( பார்க்கவேஸ்வரர்)


தல விருட்சம்:

மாமரம்


தீர்த்தம்:

சுக்ர தீர்த்தம்


ஆகமம்/பூஜை :

சிவாகமம்


ஊர்:

மாங்காடு


மாவட்டம்:

காஞ்சிபுரம்


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

திருக்கார்த்திகை, ஆருத்ரா தரிசனம்,சிவராத்திரி


தல சிறப்பு:

துர்க்கையிடமும், பிரயோக சக்கரம் இருக்கிறது. துர்க்கையை இத்தகைய கோலத்தில் காண்பது அரிது.


திறக்கும் நேரம்:

காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு வெள்ளீஸ்வரர் (மாங்காடு காமாட்சி திருக்கோயில், மாங்காடு -602 101, காஞ்சிபுரம் மாவட்டம்.


போன்:

+91- 44 – 2627 2053, 2649 5883, 94444 61383.


பொது தகவல்:

இத்தலவிநாயகர் நெற்கதிர் விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.


சுவாமி விமானத்தில் எண்திசை அதிபர்கள் சிற்பம் இருக்கிறது. பிரகாரத்தில் வீரபத்திரர் இருக்கிறார். இவரது வலது பாதத்திற்கு அருகே ஆட்டுத்தலையுடன் தட்சன் வணங்கிய கோலத்தில் இருக்கிறார். இங்குள்ள முருகன் சன்னதியில், சுவாமி, அம்பிகை இருவருடனும் ஒரே கல்லில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. சிவன் கோஷ்டத்தில் தெட்சிணாமூர்த்தியின் காலடியில் முயலகன் இடப்புறம் திரும்பியிருப்பதும், லிங்கோத்பவர் அருகில் பிரம்மாவும், பிரயோக சக்கரத்துடன் விஷ்ணுவும் வணங்கிய கோலத்தில் இருப்பதும் சிறப்பு. கோஷ்டத்தில் உள்ள துர்க்கையிடமும், பிரயோக சக்கரம் இருக்கிறது. துர்க்கையை இத்தகைய கோலத்தில் காண்பது அரிது.


மாங்காடு காமாட்சியை வழிபடுபவர்கள் இவரையும், இங்கிருந்து சற்று தூரத்திலிருக்கும் வைகுண்டவாசப் பெருமாளையும் வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.


பிரார்த்தனை


கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் சிவன், அம்பிகைக்கு பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.


நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு விசேஷ அபிஷேகங்கள் செய்தும், மொச்சை பயிறு நைவேத்யம் படைத்தும் வழிபடுகிறார்கள்


தலபெருமை:

இக்கோயிலில் சிவன், சதுர பீடத்துடன் அருளுகிறார். துவாரபாலகர்கள் கிடையாது. சுக்ராச்சாரியாருக்கு (வெள்ளி என்றும் பெயருண்டு) காட்சி தந்தால் இங்கு சிவன், “வெள்ளீஸ்வரர்’ என்ற பெயரிலேயே அருளுகிறார். பார்க்கவேஸ்வரர் என்றும் இவருக்கு பெயருண்டு. இவருக்கான அம்பாள், மாங்காடு தலத்தில் இருக்கிறாள். எனவே, காஞ்சிபுரம் போலவே இங்கும் அம்பிகை சன்னதி கிடையாது. சுவாமி சன்னதி எதிரே, அம்பாள் பாதம் மட்டும் இருக்கிறது. இங்கு சுவாமியிடம் வேண்டிக்கொள்பவர்கள், சன்னதி எதிரே தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.


விவசாய விநாயகர்:

முன் மண்டபத்தில் இருக்கும் விநாயகர் மிகவும் விசேஷமானவர். இவர் இடது மேல் கையில் நெற்கதிரும், கீழ் கையில் மாங்கனியும் வைத்திருக்கிறார்.


விவசாயிகள் இவரிடம் மாங்கனி, நெல் நைவேத்யமாக படைத்து வழிபடுகிறார்கள். இதனால், விவசாயம் செழிப்பதாக நம்பிக்கை. கோஷ்டத்தில் உள்ள மற்றொரு விநாயகர் கையில் குடை, சாமரம் வைத்து நின்ற கோலத்தில் இருக்கிறார். இவ்வாறு இத்தலத்தில் இரண்டு வித்தியாசமான விநாயகர்களை தரிசிக்கலாம்.


தல வரலாறு:

கைலாயத்தில் ஒருசமயம் சிவன், தனித்து அமர்ந்திருந்தார். அப்போது அவரிடம் வந்த அம்பிகை, விளையாட்டாக அவரது கண்களை மூடினாள். இதனால், உலகம் இருளில் மூழ்கியது. எனவே, அம்பிகை மீது கோபம்கொண்ட சிவன் அவளை பூலோகத்தில் பிறக்கும்படி சாபம் கொடுத்துவிட்டார். அம்பிகை, தவறை மன்னித்து அருளும்படி சிவனிடம் வேண்டினாள். அவர் பூலோகத்தில் இத்தலத்தில் தவமிருந்து வழிபட, குறிப்பிட்ட காலத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறினார். அதன்படி அம்பிகை இத்தலத்திற்கு வந்து பஞ்சாக்னியில் நின்று தவம் செய்தார். அவளுக்கு அருள்புரிவதற்காக சிவன், இத்தலத்திற்கு வந்தார். இதனிடையே, சுக்கிராச்சாரியாரும் இத்தலத்தில் தவம் செய்து கொண்டிருந்தார்.


மகாபலி சக்கரவர்த்தியை ஆட்கொள்வதற்காக, வாமனராக குள்ள அவதாரம் மகாவிஷ்ணு, மகாபலியிடம் தானம் கேட்டு சென்றார். அவனிடம் மூன்றடி வேண்டும் என்றார். அவரும் ஏற்றுக்கொண்டார். அப்போது அவரது குலகுருவான சுக்ராச்சாரியாருக்கு, வந்திருப்பது திருமால் என்று தெரிந்து விட்டது. எனவே, மகாபலியிடம் தானம் தர வேண்டாம் என்று தடுத்தார். ஆனால், மகாபலி கொடுத்த வாக்கை மீறமாட்டேன் என சொல்லி அவர் கூறியதை கேட்கவில்லை. அவன் திருமாலுக்கு மூன்றடியை கொடுப்பதற்காக, தாரை பாத்திரத்தை எடுத்தார். மனம் பொறுக்காத, சுக்ராச்சாரியார் வண்டு வடிவம் எடுத்து தாரை பாத்திரத்தில் நீர் வெளியேறும் துளையை அடைத்தார். அப்போது வாமனராக வந்த திருமால், ஒரு தர்ப்பை புல்லை எடுத்து சுக்ராச்சாரியாரின் கண்ணில் குத்தினார். அதன்பின் மூன்றடியில் மூன்று உலகையும் அளந்தார். இவ்வாறு கண் பார்வை இழந்த சுக்ராச்சாரியார் மீண்டும் பார்வை கிடைக்க, இத்தலத்தில் சிவனை வேண்டி தவமிருந்தார்.


அம்பிகைக்கு காட்சி கொடுக்க வந்த சிவன், முதலில் சுக்ராச்சாரியாருக்கு காட்சி கொடுத்தார். அப்போது அவர் சிவபூஜை செய்யவே, சிவனால் இங்கிருந்து செல்ல முடியவில்லை. எனவே, இங்கிருந்தபடியே அம்பிகையிடம் அசரீரியாக காஞ்சிபுரத்தில் தவம் செய்யும்படியும், அங்கு தான் காட்சி தருவதாகவும் கூறினார். அதன்படி அம்பிகையும் காஞ்சிபுரம் சென்று தன் தவத்தை தொடர்ந்து, பின் சிவனருள் பெற்றாள். சுக்ராச்சாரியாருக்கு காட்சி தந்த சிவன் இங்கு எழுந்தருளினார்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

துர்க்கையிடமும், பிரயோக சக்கரம் இருக்கிறது. துர்க்கையை இத்தகைய கோலத்தில் காண்பது அரிது.

About the author

Leave a Reply

Your email address will not be published.