ஆனந்ததாண்டவபுரம் அருள்மிகு பஞ்சவடீஸ்வரர் திருக்கோயில் – Panchavateeswarar Temple

அருள்மிகு பஞ்சவடீஸ்வரர் திருக்கோயில்


மூலவர்:

பஞ்சவடீஸ்வரர்


அம்மன்/தாயார்:

பிரஹன்நாயகி, கல்யாணசுந்தரி


ஊர்:

ஆனந்ததாண்டவபுரம்


மாவட்டம்:

நாகப்பட்டினம்


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

பிரதோஷம், சிவராத்திரி


தல சிறப்பு:

இத்தலத்தில், ஜடாநாதர் எனும் திருநாமத்துடன், அரிந்தெடுத்த கூந்தலை இடதுகையில் பிடித்தபடி காட்சி தரும் சிவனாரை காண்பது கோயிலின் தனி சிறப்பு. சப்தகன்னியரில் கவுமாரி வழிபட்ட தலம் இது.


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு பஞ்சவடீஸ்வரர் திருக்கோயில் ஆனந்த தாண்டவபுரம், மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்.


பொது தகவல்:

ஆடல்வல்லான், ஆனந்ததாண்டவம் ஆடிய திருத்தலம் இது; எனவே , ஊரின் பெயர் ஆனந்ததாண்டவபுரம் என்றானது. இங்கே ஆனந்ததாண்டவமூர்த்தியாக, அழகுற தரிசனம் தரும் ஸ்ரீநடராஜ பெருமானின் அழகுத் திருமேனி அற்புதம்.


பிரார்த்தனை


திருமணத்தடை நீங்க, பிறவிப் பிணிகள் நீங்க, இல்லறத்தில் ஏற்படும் சிக்கல்கள் விலக, மனதுள் நிம்மதி நிலைக்க இங்குள்ள சிவனையும், அம்மனையும் வழிபடுகின்றனர்.


நேர்த்திக்கடன்:

சுவாமிக்கும், அம்மனுக்கும் புது வஸ்திரம் அணிவித்து, அபிஷேகம் செய்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.


தலபெருமை:

இந்தத் தலத்தில் இரண்டு அம்பிகையர்! ஒருவர் பிரஹன்நாயகி. இன்னொருவர் கல்யாணசுந்தரி அம்பாள். பரத்வாஜ முனிவரின் வேண்டுகோளை ஏற்று, மணக்கோலத்தில் காட்சி தந்ததால், அம்பிகைக்கு இந்தத் திருநாமம். சிவனடியாராக வந்த சிவனார் நீராடிய திருக்குளம் இங்கு உள்ளது. இந்தத் தீர்த்தத்தில் நீராடி, பிரஹன்நாயகி கல்யாணசுந்தரி சமேத பஞ்சவடீஸ்வரரையும் மானக்கஞ்சாற நாயனாரையும் வணங்கி வழிபட்டால், பிறவிப் பிணிகள் நீங்கும்; மனதுள் நிம்மதி நிலைக்கும்!


தல வரலாறு:

எந்நாட்டவர்க்கும் இறைவனான சிவனாரின்மீதும், அவர்தம் அடியார்கள் மீதும் அப்படியொரு பக்தி மானக்கஞ்சாறருக்கு! வேளாளரான இவர், படைக்குத் தலைமை வகித்து நடத்தியவர்; எனினும், அன்பிலும் சிவபக்தியிலும் கட்டுண்டு கிடந்தார். தன் மனைவியுடன் சிவனடியார்களுக்குச் சேவை செய்வதில் மகிழ்ந்த மானக்கஞ்சாறருக்கு, ஒரே ஒரு குறை.. தனக்கொரு வாரிசு இல்லையே என்று! நாள்தோறும் தவறாமல் சிவவழிபாடு செய்யும் கல்யாணசுந்தரியும் கஞ்சாறரரும் கண்ணீரும் பக்தியும் பெருக்கெடுக்க, வாரிசு வரம் கேட்டுப் பிரார்த்தித்து வந்தனர். இவர்களது வேண்டுதல் நிறைவேறும் காலமும் வந்தது. கஞ்சாறரின் மனைவி, ஒரு சுபயோக சுபதினத்தில் கருவுற்றாள்; உரிய காலத்தில் அழகிய பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள். நாங்கள் எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியமோ… எங்களுக்குக் குழந்தைச் செல்வத்தைத் தந்தருளிவிட்டாய் என நெகிழ்ந்தவர்கள், மகளுக்கு புண்ணியவர்த்தினி எனும் பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். காலங்கள் ஓடின. புண்ணியவர்த்தினியும் வளர்ந்தாள்; கருகருவென நீண்ட கூந்தலுடன், அழகு ததும்பக் காட்சி அளித்த மகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் தருணமும் வந்தது. சிவபக்தியில் திளைத்த கலிக்காமன் என்னும் இளைஞனைத் தன் மகளுக்கு மணம் முடிக்க ஏற்பாடுகள் செய்தார் கஞ்சாறர். இதையறிந்த ஊர்மக்கள், அடடா…! மாமனாரும் சிவபக்தர்; மருமகப் பிள்ளையும் சிவபக்தர் எனக் கொண்டாடினர். வெகு விமரிசையாக திருமண ஏற்பாடுகள் நடக்க… முகூர்த்த நாளும் நெருங்கியது. அடியவர் வீட்டுத் திருமண வைபவத்துக்கு, ஆண்டவன் வராமல் இருப்பானா?!


திருமணத்துக்கு முதல் நாள்.. காவி உடையும், கழுத்தில் ருத்திராட்ச மாலைகளும் அணிந்து, மேனி முழுவதும் திருநீறு தரித்தபடி சிவனடியார் ஒருவர் வந்தார். அவர்… மாவிரதியர். அதாவது சிரசின் முடியை ஐந்து பிரிவுகளாக்கி பூணூலாக அணிந்துகொள்ளும் வழக்கம் உள்ளவர். வடக்கில் உள்ள சிவனடியார்கள் சிலர் இப்படித்தான் பூணூல் தரிப்பர் என்பதை அறிந்தார் கஞ்சாறர்; தொலைவிலிருந்து வந்த சிவனடியாரை அன்புடன் வரவேற்றார். மனைவி, மகள் சகிதம் விழுந்து வணங்கினார். அப்போது, அந்த மணமகளின் நெடுங்கூந்தலைக் கண்ட சிவனடியார், இவளின் முடி, நமக்குப் பஞ்சவடி (பூணூல்) என்று சொல்லிப் புன்னகைத்தார். உடனே கஞ்சாறர், என் பாக்கியம், என் பாக்கியம்…! என் மகளின் தலைமுடி, தங்களுக்குப் பூணூலாகப் பயன்படப் போகிறதே! எனச் சொல்லிச் சிலிர்த்தவர், சற்றும் யோசிக்காமல் அந்தக் கணமே தன் மகளின் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து, அடியோடு அறுத்து, சிவனடியாரிடம் பணிவுடன் கொடுத்து, வணங்கினார்.


திருமணக் கூட்டம் வாயடைத்துப் போனது. என்ன இது கொடுமை…! விடிந்தால் அவளுக்குத் திருமணம். அவளின் தலைமுடியை அறுத்துக் கொடுப்பது தகுமா?! என்று நினைத்து மருகியது. அப்போது, அந்தத் திருவிளையாடல் முடிவுக்கு வந்தது. அங்கே, கஞ்சாறருக்கும் அவர்தம் மனைவி மகளுக்கும் திருக்காட்சி தந்தார் சிவனார். மணமகளின் கூந்தல் அவளது தலையில் பழையபடியே அழகுறக் காணப்பட்டது. சிவனே… என் சிவனே என்று நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, கண்ணீரும் மகிழ்ச்சியும் பீறிட… வணங்கினார், கஞ்சாறர் அன்று முதல் மானக்கஞ்சாற நாயனார் உலகத்தாரால் போற்றப்பட்டார். இவரின் மாப்பிள்ளை மட்டும் சளைத்த வரா என்ன?! விஷயம் தெரிந்து ஓடோடி வந்த கலிக்காமன், கதறினான்; கண்ணீர் விட்டான். மனைவியாக வரப் போகிறவளின் தலைமுடி பறிபோய்விட்டதே என்று அவன் கலங்கவில்லை. பிறகு?! நான் என்ன பாவம் செய்தேன்?! இறை தரிசனம் எனக்குக் கிடைக்காமல் போய்விட்டதே! திருமணம் முடிந்த பிறகு இறைவன் வந்து கேட்டிருந்தால், மனைவியின் தலை முடியை நானே அறுத்துக் கொடுத்திருப்பேனே! எனக்கு அந்தப் பெருமை கிடைக்காமல் போய்விட்டதே! என வருந்தினான். பின்னாளில் அவர், கலிக்காம நாயனார் எனப் போற்றப்பட்டார்; அறுபத்து மூவரில் ஒருவரானார்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

இத்தலத்தில், ஜடாநாதர் எனும் திருநாமத்துடன், அரிந்தெடுத்த கூந்தலை இடதுகையில் பிடித்தபடி காட்சி தரும் சிவனாரை காண்பது கோயிலின் தனி சிறப்பு. சப்தகன்னியரில் கவுமாரி வழிபட்ட தலம் இது.

About the author

Leave a Reply

Your email address will not be published.