கருங்குயில் நாதன்பேட்டை சக்திபுரீஸ்வரர் சுவாமி கோயில்

மூலவர்:


சக்திபுரீஸ்வரர் சுவாமி


அம்மன்/தாயார்:

ஆனந்தவல்லி


தல விருட்சம்:

வில்வ மரம்


தீர்த்தம்:

கருணா தீர்த்தம்


ஆகமம்/பூஜை :

காரன ஆகமத்தின் படி இரண்டு கால பூஜை


புராண பெயர்:

கருணாபுரம்


ஊர்:

கருங்குயில் நாதன்பேட்டை


மாவட்டம்:

நாகப்பட்டினம்


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

சிவராத்திரி


தல சிறப்பு:

இந்த கோயிலில் வன்னி மரத்தை நவகிரகமாக வழிபடுகின்றனர். இந்த தலத்தில் சப்த மாதர்களில் வராகி இத்தல இறைவனை வழிபட்டுள்ளார். இந்திரன் குயில் உருவில் சுவாமியை வழிபட்ட தலமாதலால் இந்த ஊர் கருங்குயில்நாதன்பேட்டை என்று அழைக்கப்படுகிறது.


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல்7 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு சக்திபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயில், மணக்குடி அஞ்சல், மயிலாடுதுறை தாலுக்கா, கருங்குயில்நாதன்பேட்டை நாகப்பட்டினம்- 609 118.


போன்:

+91 94435 23080


பொது தகவல்:

இது மாயூரம் துலாக் கட்டத்தின் வடகரையில் கிழக்கே ஒருகல் தொலைவில் உள்ளது. பழைய காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்) சாலையிலிருக்கின்றது. பொழில் சூழ்ந்த எழில்மிகுந்த இடம். கோயில் மிகச் சிறியது. சுவாமி கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார். அம்மை தெற்கு நோக்கி இருக்கிறார். சப்தமாதர் திருவுருவங்கள் இருக்கின்றன. சப்தமார்களுள் வராகி என்பாள் பூசித்த தலம் என்று வடமொழிப் புராணம் சொல்கிறது. விநாயகர், வள்ளி தெய்வானையுடன், சுப்பிரமணியர், தெட்சனாமூர்த்தி, பைரவர், சன்டிகேஸ்வரர் மற்றும் சூரியன், சனி (ஒரே சன்னிதியில்) எழுந்தருளியுள்ளனர். தருமபுர ஆதினத்தின் நிர்வாகத்தில் உள்ள இந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று 60 ஆண் டுகளுக்கு மேல் ஆவதாக கூறப்படுகிறது. இந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்வதற்காக 15 ஆண்டுகளுக்கு முன்பு பாலாலயம் செய்யப்பட்டது. ஆனால் இதுவரை திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்படவில்லை. இத்தலமும் கல்வெட்டு முதலிய வரலாற்றுப் பகுதி இல்லாதது. வேறு இலக்கியங்களும் தோத்திரங்களும் இல்லை. இத்தலத்தைப் பற்றிப் பிள்ளையவர்கள் மாயூரப் புராணத்து சத்தபுரப்படலத்து இரண்டு பாடல்களால் குறிப்பித்துச் செல்கிறார்கள். மற்றும் வடமொழியில் ஒரு புராணம் உண்டு. அது இன்னும் அச்சிடப்பெறவில்லை.


பிரார்த்தனை


இந்த தலத்தில் உள்ள கருணா தீர்த்தித்தில் நீராடி சுவாமியை வழிபட்டால் சாப விமோட்சனம் நீங்குவதுடன், குஷ்டரோக வியாதியும் நீங்கும் என கூறப்படுகிறது.


நேர்த்திக்கடன்:

சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்யப்படுகிறது.


தலபெருமை:

தீர்த்தம் கருணாதீர்த்தம். கவுசிக கோத்திரத்துப் பிறந்த அந்தணன் ஒருவன் வேதங்களையும் வேதாங்கங்களையும் முறையே நல்லாசாரியன்பால் ஓதினான். ஓதியும் பூர்வபுண்ணியப் பதிவு இல்லாமையால் அவன் மனம் கூடாவொழுக்கத்தினை கூடிற்று. இழிமகளிரை எய்தினான். அதனாற்பொல்லாத தொழுநோய் உடல் முழுதும் பொத்தியது. வருந்திச் செய்வதியாதெனத் தெரியாது திகைத்தான். தவத்திற் சிறந்த முனிவர்களைக் காணின் அவர்கள் முன்பு செல்லவும் கூசினான். இவன் நிலையையுணர்ந்த முனிவர் செல்லவும் இரங்கி கருணாபுரத்து கருணா தீர்த்தத்தில் முழுகுக உன்மேனி பொன்மேனியாகும் என்றார். அவனும் அவ்வாறே நீராடிக் கருங்குயில் நாதரை முப்போதுங் கைப்போது கொண்டுவணங்கி நோய் நீங்கப் பெற்றான். அண்மையில் ஆறு ஆண்டுகட்கு முன்புகூட குட்டநோயாளன் ஒருவன் ஓராண்டு இருந்து முழுகிநோய் நீங்கப்பெற்றான். அன்றியும் இத்தீர்த்தம் தோலைப்பற்றிய எல்லாநோய்களையும் நீக்கும் வன்மைவாய்ந்தது. இன்றும் கண்கூடாக நடந்து வருகிறது.


கும்பாபிஷேகப் பலன்:

கும்பாபிஷேகம் பெருஞ்சாத்தி எனப் பெயர்பெறும். திருஞானசம்பந்தர் பூம்பாவைத் திருப்பதிகத்தில் பெருஞ்சாந்தி விழாவைக் கண்டுகளிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார். கும்பாபிஷேகம் செய்தல், செய்வித்தல், துணைபுரிதல், கண்டுகளித்தல் ஆகியன மிக்க சிவபுண்ணியத்தை நமக்கு ஈட்டித் தரும்சிறப்புடையன. பெருஞ்சாந்தி விழாவைச் செய்பவர். செய்விப்பவர், காண்பவர்கள் இருமை இன்பங்களையும் எய்தி இன்புறுவார்கள். பஞ்ச வில்வங்கள்: வில்வம், கிளுவை, மாவிலிங்கை, விளா, நொச்சி ஆகியவற்றின் பத்திரங்கள்.

தல வரலாறு:

திருப்பறியாலூரில், சிவநிந்தகனான தக்கன் ஒரு யாகம் நடத்தினான். யாகத்திற்குச் சிவபெருமானை நீக்கி ஏனைய தேவர்களை யழைத்திருந்தான். யாகம் தொடங்கப்பெற்றது. அம்மை தந்தையென்ற உரிமை பற்றி யாகத்திற்கு எழுந்தருளினார். தக்கன் வறவேற்காது அவமதித்தான். அம்மைக்கும் சினம் வந்தது. சிவபெருமானுக்கும் சீற்றம் பிறந்தது. நெற்றிக்கண்ணிலிருந்து வீரபத்திரக் கடவுள் தோன்றினார். யாகம் அழிக்கப்பெற்றது. யாகத்திற்கு வந்த இந்திரன் அஞ்சிக் கருங்குயிலாக வடிவுகொண்டு தப்பியோடினான். பின்னர், தன் தவறினையுணர்ந்து சிவநிந்தனை செய்த தக்கன் யாகத்திற்குச் சென்றமையால் தன் தெய்வத் தன்மையிழந்து, பறவையாய்ப் போக நேர்ந்தமைக்கு வருந்தினான். அச்சிவநிந்தனை அளித்த அவியுண்டபாவந் தீர வேண்டினான். தேவகுருவாகிய வியாழன் திருமயிலாடுதுறைக்குக் கிழக்கே ஒருகல் தொலைவில் மகேசுவரி பூசைசெய்து சிறந்த வரங்களைப் பெற்று வழிபட்ட திருத்தலம் ஒன்றுண்டு.


கருணாபுரம் என வழங்குவது. அதனையடைந்து வழிபாடு செய்யின் உன் பறவைப் பிறவி நீங்கும் பாபமும் மறையும் என்று விதித்தனர் இந்திரன் வந்து கருணா தீர்த்தத்தில் நீராடி ஆகம விதிப்படி இறைவனை வழிபட்டு வந்தான். இறைவன் சிவலிங்கத் திருமேனியிற் காட்சி வழங்கி உன் குறை தீர்ந்தது; வேண்டுவதியாது என்று வினவினார். இந்திரன் என்றுங் கருணாபுரத்துக் கருணையாளனாகவேயிருந்து எல்லா மக்களுக்கும் அருள்பாலித்தல் வேண்டும். என்னிழிதகைமையும், அடியேனையும் ஆட்கொண்டபெற்றிமையும் தோன்ற இனி இத்தலம் அடியேன்பேரால் கருங்குயில் நாதன்பேட்டை என வழங்கிவருதல் வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். அவ்வாறே இறைவனால் அருள் செய்யப்பெற்றது. மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இறைவன் கருணை என்றும் விளங்கும் தலமாதலின் கருணாபுரமாயிற்று என்கிறார்கள். குயில்வடிவாகிய இந்திரன் பூசித்தமையின் கருங்குயில் நாதன்பேட்டை ஆயிற்று என்கின்றது மற்றொரு புராணம். இப்போது கர்ணாப்பேட்டை என மருவி வழங்குகிறது.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

இந்த கோயிலில் வன்னி மரத்தை நவகிரகமாக வழிபடுகின்றனர். இந்த தலத்தில் சப்த மாதர்களில் வராகி இத்தல இறைவனை வழிபட்டுள்ளார். இந்திரன் குயில் உருவில் சுவாமியை வழிபட்ட தலமாதலால் இந்த ஊர் கருங்குயில்நாதன்பேட்டை என்று அழைக்கப்படுகிறது.

About the author

Leave a Reply

Your email address will not be published.