நாகூர் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயில் – Naganatha Swami Temple

அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயில்


மூலவர்:

நாகநாத சுவாமி


உற்சவர்:

சந்திரசேகரர்-கல்யாணசுந்தரர்


அம்மன்/தாயார்:

நாகவல்லி அம்பாள்


தல விருட்சம்:

பின்னை மரம்


தீர்த்தம்:

சந்திர தீர்த்தம்


ஆகமம்/பூஜை :

காமிய ஆகமம்


புராண பெயர்:

புன்னகாவனம்


ஊர்:

நாகூர்


மாவட்டம்:

நாகப்பட்டினம்


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

மகா சிவராத்திரி, பிரதோஷம் கார்த்திகை வழிபாடு, அர்த்த ஜாமபூஜை போன்ற திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.


தல சிறப்பு:

மூர்த்தி, தலம், தீர்த்தம் இம்மூன்றாலும் சிறப்புற்று, தில்லைக்கு நிகரான சிறப்புடையது. வைகாசி மாதம் பவுர்ணமி அன்று புன்னை மரத்தடியில் சுயம்பு லிங்கமாக தோன்றி திருமாலுக்கு காட்சி கொடுத்தது.


திறக்கும் நேரம்:

காலை 6.30 மணி முதல் 12 மணி வரை,மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு நாகவல்லி அம்பாள் சமேத நாகநாத சுவாமி திருக்கோயில், சிவன் சன்னதி, நாகூர் 611002, நாகப்பட்டினம்.


போன்:

+91 98652-69553


பொது தகவல்:

ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட கோயில் கிழக்கு நோக்கி அமையப் பெற்றுள்ளது. சுவாமிக்கு வலது புறத்தில் உற்சவர் சந்திசேகரர், கல்யாண சுந்தரர், தியாகராஜர், இடது புறத்தில் அம்பாள் நாகவல்லி, காட்சி கொடுத்த நாயனார், நடராஜர், ஐயப்பன் தனி தனி சன்னதிகளிலும், உட்பிரகார வலது புறத்தில் ஜூரதேவர்,தெட்சிணாமூர்த்தி, நாகர் கன்னிகள், வலம்புரி விநாயகர், மேற்கில், கன்னிராகுபகவான், ஐவேலி நாதர், சுப்பிரமணியர், தத்த புருஷலிங்கம், மகாலெட்சுமி, நால்வர், இடது புறத்தில் பிரம்மா, துர்கை, காசி விஸ்வநாதர்,நர்த்தன விநாயகர், சனீஸ்வர பகவான் ஆகியோர் தனி, தனி சன்னதிகளிலும், வெளி பிரகார வலது புறத்தில் சந்திர தீர்த்த குளம், இடது புறத்தில் நந்தவனமும் அமையப் பெற்றுள்ளது. இத்திருக்கோயிலின் உட்பிரகாரத்தில் கன்னி மூலையில் ராகுபகவான் விமானம், மண்டபத்துடன் தனி சன்னதியில், நாகவல்லி, நாககன்னியருடன் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.இவ்வூரில் யாரையும் நல்லபாம்பு தீண்டியது கிடையாது என்று கூறப்படுகிறது.


பிரார்த்தனை


நாக தோஷம், காலசர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் என அனைத்து வித தோஷங்களும் நிவர்த்தியாவதால் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தோஷம் நீங்க பிரார்த்தனை செய்கின்றனர்.


நேர்த்திக்கடன்:

பிரார்த்தனைகள் நிறைவேறியதும் எடைக்கு எடையாக தானியங்களை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.


தலபெருமை:

பிரம்மன், இந்திரன், சந்திரன், துர்வாசர், சப்தரிஷிகள், உருத்திரசன்மன், அந்தணன் ஆகியோரால் யுகங்கள் தோறும் வழிபடப்பெற்றது. நாகராஜரின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய நாகதோஷ பரிகார தலம். இக்கோயிலின் தீர்த்தம் சந்திரனால் உருவாக்கப்பட்டதால் சந்திரதீர்த்தம் என பெயர் பெற்றது. இத்தீர்த்தத்தில் நீராடி சிரார்த்தம், தான, தர்மம் செய்தால் கயாவில் செய்த பலன் கிடைக்கும்.


தல வரலாறு:

ஆனி மாத பவுர்ணமியில் சந்திரன் 10 நாட்களும், மாசி மாத பவுர்ணமியில் இந்திரன் 10 நாட்களும் கொடியேற்றி, தேரோட்டி தீர்த்தவாரிகள் நடத்தி பிரமோற்சவம் செய்து வழிப்பட்டு சிவபெருமான் திருவடி சேர்ந்தனர். அதே போல் மாசி மாத அமாவாசையில் நாகராஜன் 10 நாட்களும் கொடியேற்றி, பிரமோற்சவம் செய்து, ஒன்பதாம் நாள் தேரோட்டம் நடத்தினான். அன்று மகாசிவராத்திரி ஆகையால் காட்டில் வாழ்ந்து வந்த சம்புபத்தன் என்னும் அந்தணனின் ஐந்து வயது மகன் விளையாடிக் கொண்டிருக்கையில், பாம்புகளுக்கு அரசன் தன் மனைவியுடன் கூடி மகிழ்வதை சிறுவன் கண்டு விட்டானே என்று நாக அரசன், சிறுவனை கடிக்க அவன் இறந்து விடுகிறான். அந்தணன் தன் ஞான திருஷ்டியினால் உணர்ந்து, கோபமுற்று, நாக அரசனை சபித்தான். நீ நாகர் உலகை விட்டு நீங்கி, அறிவும், வலிமையும் நீங்கி தனிப்பட்டவனாய் , பூவுலக காட்டில் திரியக் கடவாய் என்று சபித்தான். நாக அரசன் நடுங்கி, அந்தணன் காலில் விழுந்து வணங்கி, செய்த தவறை உணர்ந்து, சாபம் நீக்க கேட்டான். ஆயிரம் ஆண்டுகள் சென்ற பிறகு உன் தந்தை காசிபரை காணும் போது சாபம் தீரும் என்றான் அந்தணன். அதன்படி நாகராஜர், தன் தந்தையை கண்டு வணங்கி சாபம் தீர, மாசி மாத மகாசிவராத்திரி நாளில் முதற்காலம் கும்பகோணம் வில்வ வனத்தில் உள்ள நாகநாத சுவாமியையும், இரண்டாம் காலம் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் காலம் திருப்பாம்புறம் வன்னிவனத்தில் உள்ள நாகநாதரையும், நான்காம் காலம் புன்னாகவனத்தில்(நாகூர்) உள்ள நாகநாதசுவாமியை வழிபட்டு சாபவிமோசனம் நீங்கி முக்தி அடைந்துள்ளார். நாகராஜன் பூஜித்து பெயர் பெற்றதால் இறைவன் நாகநாதர் என்றும் இறைவி திருநாகவல்லி என்றும் அழைக்கப்படுகின்றனர்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

மூர்த்தி, தலம், தீர்த்தம் இம்மூன்றாலும் சிறப்புற்று, தில்லைக்கு நிகரான சிறப்புடையது. வைகாசி மாதம் பவுர்ணமி அன்று புன்னை மரத்தடியில் சுயம்பு லிங்கமாக தோன்றி திருமாலுக்கு காட்சி கொடுத்தது.

About the author

Leave a Reply

Your email address will not be published.