மோகனூர் அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோயில் – Achala Deepeswarar Temple

அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோயில்


மூலவர்:

அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்)


உற்சவர்:

சந்திரசேகரர், சோமாஸ்கந்தர்


அம்மன்/தாயார்:

மதுகரவேணியம்பிகை (குமராயி)


தல விருட்சம்:

வில்வம்


தீர்த்தம்:

காவிரி


ஆகமம்/பூஜை :

காமீகம்


புராண பெயர்:

மகனூர்


ஊர்:

மோகனூர்


மாவட்டம்:

நாமக்கல்


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

கார்த்திகை பரணியில் தீபத்திருவிழா, சிவராத்திரி, ஆருத்ராதரிசனம்.


தல சிறப்பு:

சிவன், சுயம்புலிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அம்மன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.


திறக்கும் நேரம்:

காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோயில், மோகனூர் – 637 015, நாமக்கல்மாவட்டம்.


போன்:

+91- 4286 – 257 018, 94433 57139.


பொது தகவல்:

அம்பிகை மகனை அழைக்க அவர் நின்ற ஊர் என்பதால், “மகனூர்’ என்றழைக்கப்பட்ட இத்தலம், “மோகனூர்’ என்று மருவியது. இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில், முருகன் நின்றதாக கருதப்படும் இடத்தில் குன்றின் மீது முருகன் தனிக்கோயிலில் அருளுகிறார்.


பிரார்த்தனை


காவிரியில் நீராடி சுவாமியை வழிபட முன்வினைப்பாவம் நீங்கும், ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இங்கு அதிகளவில் ஆயுஷ்ய ஹோமம் மற்றும் அறுபது, எண்பதாம் திருமணங்கள் செய்து கொள்கிறார்கள்.


நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்து, விசேஷ அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.


தலபெருமை:

இத்தலம் தேவார வைப்புத்தலமாக கூறப்படுகிறது.


கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம் விசேஷம். அதேபோல் கார்த்திகைக்கு முதல் நாளில் வரும் பரணி நட்சத்திரத்தன்று இங்கு ஏற்றப்படும் தீபம் மிகவும் விசேஷம். அப்போது சுவாமிக்கு விசேஷ அபிஷேக,பூஜை செய்யப்படுகிறது.


சிவபக்தரான பீஜாவாபா மகரிஷி இத்தல இறைவன் மீது பக்தி கொண்டு இங்கேயே சிவனுக்கு சேவை செய்து வந்தார். இவர் ஒவ்வொரு கார்த்திகை மாத பரணி நட்சத்திரத்தன்றும் இங்கு சுவாமி சன்னதி எதிரேயுள்ள தீப ஸ்தம்பத்தில் தீபம் ஏற்றி வழிபட்டார். இதன் அடிப்படையில் தற்போதும் இங்கு பரணி தீப வழிபாடு விசேஷமாக இருக்கிறது.


இந்த மகரிஷியின் சிற்பம் கோயில் மண்டபத்திலுள்ள ஒரு தூணில் புடைப்புச்சிற்பமாக இருக்கிறது.


சிவன், சுயம்புலிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார். தீப வழிபாட்டுடன் தொடர்புடைய தலம் என்பதால், இவரது சன்னதியில் எப்போதும் அணையாதீபம் எரிந்து கொண்டிருக்கிறது. இத்தீபம் அசையாமல் எரிவதால் சுவாமி, “அசலதீபேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். “அசலம்’ என்றால் “அசையாதது’ என்று பொருள். சுவாமி, இத்தலத்தில் தியான கோலத்தில் இருப்பதால், தீபம் அசைவதில்லை என்கிறார்கள்.


குழந்தை பாக்கியம் தரும் அம்பிகை:

தாயார் மதுகரவேணி கிழக்கு நோக்கி தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளது சிலை திருவாட்சியுடன் சேர்த்து ஒரே கல்லில் அமைக்கப்பட்டிருப்பது விசேஷம். முருகனை கைலாயத்திற்கு அழைப்பதற்காக அவரை பின்தொடர்ந்தபோது, முருகனை நேரில் பார்த்தவுடனேயே பாசத்தில் இந்த அம்பிகை பால் சொரிந்தாளாம். எனவே இவள் “மதுகரவேணி’ என்று அழைக்கப்படுகிறாள். மது என்றால் பால் என்ற பொருள் உள்ளதாக சொல்கிறார்கள். பவுர்ணமிதோறும் இவளுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அந்நேரத்தில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வழிபட்டால், புத்திரப்பேறு உண்டாவதாக நம்பிக்கை.


ஆரம்பத்தில் இத்தலத்தில் சிவன் சன்னதி மட்டும் இருந்தது. இத்தல சிவனின் பக்தையான குமராயி என்ற பெண், தயிர் விற்று பிழைப்பு நடத்தி வந்தாள். குழந்தை பாக்கியம் இல்லாத அவள், இங்கு சிவனுக்கு சேவை செய்து வந்தாள். தினமும் தயிர் விற்றது போக, பாத்திரத்தில் மீதமிருப்பதை சுவாமிக்கு நைவேத்யமாக படைத்து வழிபடுவாள். ஒருசமயம் இவள் கருத்தரித்து, அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். ஊரார் அவளை தவறாக பேசினர். தான் பத்தினி என்பதற்கு சிவன் ஒருவரே சாட்சி என்ற அவள், இங்குள்ள காவிரி நதியில் இறங்கி நதிக்குள் ஐக்கியமானாள். அவ்விடத்தில் இருந்து அம்பிகை எழுந்தருளி மக்களுக்கு காட்சி தந்தாள். தானே தயிர் விற்கும் பெண்ணாக வந்ததை உணர்த்தினாள். அதன்பின், இத்தலத்தில் அம்பாளுக்கு தனிச்சன்னதி எழுப்பப்பட்டது.


அம்பிகை குமராயி என்னும் பெயரில் இங்கு வாழ்ந்ததால் இத்தலத்து அம்பிகைக்கு குமராயி என்றும், சிவனுக்கு குமரீஸ்வரர் என்றும் பெயர் உண்டு.


இத்தலத்தில் சிவன் மேற்கு நோக்கியும், அம்பாள் கிழக்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். சிவன் அம்பிகை இருவரும் ஒருவருக்கொருவர் வலப்புறமாக காட்சி தரும்படி இத்தலம் அமைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம். மூலவருக்கு அருகில் சிறிய பாணலிங்கம் ஒன்று இருக்கிறது. இந்த லிங்கம், தயிர் விற்கும் பெண்ணாக வந்த அம்பிகையால் வழிபடப்பட்டது என்கிறார்கள். மூலவருக்கும், பாண லிங்கத்திற்கும் ஒரே நேரத்திலேயே பூஜை நடக்கிறது. இத்தலத்திற்கு அருகில் காவிரி நதி, காசி போன்று வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடுகிறது. காவிரியை பார்த்தபடி சுவாமி காட்சி தருகிறார். ஆடிப்பெருக்கின்போது சுவாமி, அம்பாளுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. சிவன், அம்பாள் சன்னதிக்கு நடுவே முருகன் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார்.


ஆடு வாகன துர்க்கை:

பிரகாரத்தில் விநாயகர், நாகத்தின் மத்தியில் காட்சி தருகிறார். அருகில் முருகன் இருக்கிறார். நாகதோஷம் உள்ளவர்கள் இந்த விநாயகருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். கோயிலுக்கு வெளியே வேம்பு மரத்தின் அடியில் மற்றொரு விநாயகர் இருக்கிறார். திருமணத்தடை உள்ள பெண்கள், இவருக்கு தாலி கட்டி வேண்டிக்கொள்கிறார்கள்.


காலபைரவருக்கு தனிச்சன்னதி உள்ளது. வாராகி, வைஷ்ணவி, சாமுண்டி ஆகிய முத்தேவியரும் பிரகார சுவரில் புடைப்புச் சிற்பமாக காட்சி தருகின்றனர். தேய்பிறை அஷ்டமியில் பைரவர் மற்றும் முத்தேவியருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. கோயிலுக்கு வெளியே சரபேஸ்வரர் சன்னதி உள்ளது.


அம்பாள் சன்னதி முன்மண்டபத்திலுள்ள ஒரு கல்லில், சிவதுர்க்கை புடைப்புச் சிற்பமாக இருக்கிறாள். மகிஷாசுரனை வதம் செய்த துர்க்கையம்மன், காலுக்கு கீழே மகிஷாசுரனுடன் மட்டும்தான், சிவன் சன்னதி கோஷ்டத்தில்தான் காட்சி தருவாள். ஆனால் இவள் எட்டு கரங்களுடன், பின்புறத்தில் ஆடு வாகனத்துடன் காட்சி தருகிறாள். துர்க்கையை இத்தகைய கோலத்தில் காண்பது அபூர்வம்.


தல வரலாறு:

கைலாயத்தில் நாரதர் கொடுத்த கனியை சிவன், விநாயகரிடம் கொடுத்ததால் கோபம் கொண்ட முருகன், தென்திசை நோக்கி கிளம்பினார். சிவனும், அம்பிகையும் சமாதானம் செய்தும் அவர் கேட்கவில்லை. அம்பிகை அவரை பின்தொடர்ந்தாள். சிவனும் உடன் வந்தார். மயில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த முருகனை அம்பிகை நிற்கும்படி கூறினாள். தாயின் சொற்கேட்ட மகன் நின்றார். அம்பிகை அவரை கைலாயத்திற்கு திரும்பும்படி அழைத்தாள். ஆனால் முருகன், தான் தனியே இருக்க விரும்புவதாக கூறி, பழநிக்குச் சென்றார். இவ்வாறு முருகனை அம்பிகை அழைக்க அவர் வழியில் நின்ற தலம் இது. இவ்விடத்தில் சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். இவரே இத்தலத்தில் அசலதீபேஸ்வரராக காட்சி தருகிறார்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

சிவன், சுயம்புலிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.அம்மன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.

About the author

Leave a Reply

Your email address will not be published.