அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
மூலவர்:
கைலாசநாதர்
உற்சவர்:
சோமாஸ்கந்தர்
அம்மன்/தாயார்:
அறம்வளர்த்தநாயகி
தல விருட்சம்:
வில்வம்
தீர்த்தம்:
சிவகங்கை தீர்த்தம்
ஆகமம்/பூஜை :
சிவாகமம்
புராண பெயர்:
ராஜபுரம்
ஊர்:
ராசிபுரம்
மாவட்டம்:
நாமக்கல்
மாநிலம்:
தமிழ்நாடு
பாடியவர்கள்:
அருணகிரிநாதர்
திருவிழா:
சித்திரையில் பிரம்மோற்ஸவம், வைகாசி விசாகம், தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திரம்.
தல சிறப்பு:
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இவரது திருமேனியில் அம்பு பட்ட தழும்பு இருக்கிறது. மேற்கு நோக்கிய தலம் இது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்
முகவரி:
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், ராசிபுரம்-637 408, நாமக்கல் மாவட்டம்.
போன்:
+91- 4287 – 223 252,+91- 94435 15036, +91-99943 79727
பொது தகவல்:
இத்தலவிநாயகர் சகட விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள ராஜகோபுரம் 5 நிலைகளைக் கொண்டது.
அம்பாள் சன்னதி அருகில் முருகன் பால தண்டாயுதபாணியாகவும், வள்ளி, தெய்வானையுடன் கல்யாண சுப்பிரமணியராகவும் தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகிறார். இவ்வாறு ஒரே சமயத்தில் முருகனின் இரண்டு கோலங்களையும் இங்கு தரிசிக்கலாம். அருணகிரிநாதரால் பாடப்பட்டவர் இவர். மாசிமகத்தன்று இவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
பிரார்த்தனை
கைலாசநாதரிடம் வேண்டிக்கொள்ள கலைகளில் சிறப்பிடம் பெறலாம், அம்பாளை வணங்கிட புத்திரதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் சார்த்தி, விசேஷ அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்
தலபெருமை:
புத்திரப்பேறு தரும் அம்பிகை:
கைலாசநாதர் மூலஸ்தானத்தில் சுயம்புலிங்கமாக காட்சி தருகிறார். இவரது திருமேனியில் அம்பு பட்ட தழும்பு இருக்கிறது. பொதுவாக சிவராத்திரியின்போது இரவில் சுவாமிக்கு 4 கால பூஜைதான் நடக்கும். இத்தலத்தில் ஆறு கால பூஜை செய்கிறார்கள். அம்பாள் அறம்வளர்த்தநாயகி தனிச்சன்னதியில் மேற்கு நோக்கி காட்சி தருகிறாள். இவளுக்கு முன்புறம் மகாமேரு உள்ளது. இவளது சன்னதியில் பவுர்ணமியன்று காலையில் விசேஷ ஹோமம் நடக்கிறது.
குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் வளர்பிறை பிரதோஷத்தின்போது உச்சிக்காலத்தில் இந்த அம்பிகையிடம் விசேஷ வழிபாடு செய்கிறார்கள். அப்போது அரிசி, தேங்காய், பழம் மற்றும் உப்பில்லாத சாதத்தை நைவேத்யமாக படைத்து வழிபடுகிறார்கள். இவ்வாறு செய்வதால் புத்திரப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. காசி, ராமேஸ்வரம் தரிசனம்:
மேற்கு நோக்கிய தலம் இது.
நெல்லி, இத்தலத்தின் விருட்சம். கோபுரத்திற்கு கீழே உள்ள விநாயகர், எதிரே நந்தியுடன் காட்சி தருவது விசேஷம். இவரை வணங்கிவிட்டே கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்பது ஐதீகம். சிவன் கோஷ்டத்தில் சிவதுர்க்கை காட்சி தருகிறாள். ஆடி கடைசி வெள்ளியின்போது இவளுக்கு சங்காபிஷேகம் செய்யப்படுவது சிறப்பு.
இக்கோயில் பிரகார வலத்தை துவங்கும்போது முதலில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்பாள் சன்னதியும், பிரகாரத்தின் முடிவில் ராமேஸ்வரர், பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதியும் அமைக்கப்பட்டிருக்கிறது. விஸ்வநாதர் சன்னதி விமானம், காசி தலத்தைப் போன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு காசி, ராமேஸ்வரம் தலங்களில் அருளும் சிவனை இங்கு தரிசிக்கும் விதமாக இக்கோயில் அமைக்கப்பட்டிப்பது விசேஷமான சிறப்பு.
மன்னனுக்கு திருவிழா:
கங்கை தீர்த்தம் பிரகாரத்தில் இருக்கிறது. இந்த தீர்த்தம் தானாக தோன்றியதாக சொல்கிறார்கள். சிவஅம்சமான வீரபத்திரருக்கு சன்னதி இருக்கிறது. இவருக்கு எதிரே நந்தி உள்ளது. அருகில் ஒரே கல்லில் செய்யப்பட்ட புடைப்புச் சிற்பமாக சகடவிநாயகர் இருக்கிறார். கையில் ருத்ராட்ச மாலையுடன் இருக்கும் இவரை வணங்கிட, கல்வியில் சிறப்பிடலாம் எனப்து நம்பிக்கை.
பிரகாரத்திலுள்ள வன்னி மரத்தின் அடியில் வல்வில் ஓரி மன்னனுக்கு சிலை இருக்கிறது. இவர் வில், அம்பு மற்றும் இடுப்பில் கத்தியுடன் நின்ற கோலத்தில் வணங்கியபடி காட்சி தருகிறார்.
ஆடிப்பெருக்கன்று இவருக்கு சிறப்பு அபிஷேகமும், சுண்டல், பொங்கல் நைவேத்யம் படைத்து விசேஷ பூஜைகளும் செய்யப்படுகிறது. கோயில் கட்டிய மன்னருக்காக இவ்வாறு விசேஷ வழிபாடு நடத்தப்படுவது சிறப்பு.
சிறப்பம்சம்:
தெட்சிணாமூர்த்திக்கு தனியே உற்சவர் இருக்கிறார். இவரது பீடத்திலேயே நான்கு சீடர்களும் இருக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக் கிழமையன்று இவர், தெட்சிணாமூர்த்தி சன்னதிக்கு எழுந்தருளுகிறார். அப்போது விசேஷ அபிஷேகம் மற்றும் ஹோமங்கள் நடக்கிறது. அந்நேரத்தில் இவரிடம் வைத்து பூஜிக்கப்பட்ட மஞ்சள் கயிறை பிரசாதமாக தருகின்றனர்.
காலபைரவர், சனீஸ்வரருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது. கார்த்திகை முதல் நாளில் பைரவருக்கு, “ஏகாதச ருத்ரபாராயணம்’ நடக்கிறது. 63 நாயன்மார்களுக்கும் குருபூஜை உண்டு. நாகர் சன்னதியும் உள்ளது.
நாக தோஷம், தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள் நாகருக்கு மஞ்சள் பூ, சர்க்கரைப் பொங்கல் படைத்து, பாலபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். இதனால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை. பஞ்சலிங்கம், கஜலட்சுமி, சரஸ்வதி, ஐயப்பன், நாயன்மார், நால்வர் மற்றும் சந்தான குரவர்களும் உள்ளனர்.
தல வரலாறு:
வல்வில் ஓரி என்னும் மன்னன் கொல்லிமலையை தலைநகராக கொண்டு இப்பகுதியை ஆட்சி செய்து வந்தான். வில் வித்தையில் வீரனான இம்மன்னன் சிறந்த சிவபக்தன். ஒருசமயம் இப்பகுதிக்கு வேட்டைக்கு வந்தான். வனத்தில் நீண்டநேரமாக தேடியும் ஒரு மிருகம்கூட கண்ணுக்கு சிக்கவில்லை. களைத்துப்போன ஓரி மன்னன், ஓரிடத்தில் வென்பன்றியைக் கண்டான். உடனே பன்றி மீது அம்பை எய்தான். அம்பினால் தாக்கப்பட்ட பன்றி, அங்கிருந்து ஓடியது. மன்னன் பின்தொடர்ந்தான்.
நீண்டதூரம் ஓடிய பன்றி, ஒரு புதருக்குள் மறைந்து கொண்டது. மன்னன் புதரை விலக்கியபோது அவ்விடத்தில் சுயம்புலிங்கத்தைக் கண்டான். லிங்கத்தின் நெற்றியில் மன்னன் எய்த அம்பு தாக்கியதில், ரத்தமும் வழிந்து கொண்டிருந்தது.
கலங்கிய மன்னன் சிவனை வணங்கினான். சிவன் அவனுக்கு சுயரூபம் காட்டி தானே பன்றியாக வந்ததை உணர்த்தினார். அதன்பின் மன்னன் இவ்விடத்தில் கோயில் எழுப்பினான்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இவரது திருமேனியில் அம்பு பட்ட தழும்பு இருக்கிறது.