ஸ்ரீ சேத்ர தர்மஸ்தலா அருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் – Manjunathar Temple

அருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில்


மூலவர்:

மஞ்சுநாதர்


அம்மன்/தாயார்:

பகவதி அம்மன்


தீர்த்தம்:

நேத்ராவதி


ஊர்:

ஸ்ரீ சேத்ர தர்மஸ்தலா


மாவட்டம்:

மங்களூரு


மாநிலம்:

கர்நாடகா


திருவிழா:

மகா சிவராத்திரி, நவராத்திரி


தல சிறப்பு:

தர்ம தேவதைகளுக்கு இங்கு தனி சன்னதி இருப்பது சிறப்பு.


திறக்கும் நேரம்:

காலை 5.30 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்


முகவரி:

அருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் தர்மஸ்தலா, பெல்தங்கடி தாலுக்கா தெட்சிண கன்னடா மாவட்டம் மங்களூர் அருகில் கர்நாடகா-574 216.


போன்:

+91 8256 277121, 277141


பொது தகவல்:

ஆலயத்தின் முகப்புத் தோற்றம் ஒரு மடத்தைப் போலவே உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் வெளிப் பிராகாரத்தில் மேற்கு நோக்கிய சன்னதியில் சுப்ரமணிய சுவாமி காட்சியளிக்கிறார். உள்பிரகாரத்தில் மேற்கு நோக்கி அன்னப்ப சுவாமியின் சன்னதி உள்ளது.


பிரார்த்தனை


மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், பேய்-பிசாசு பிடித்தவர்கள் , பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றால் துன்புறுகிறவர்கள் இக்கோயிலுக்கு வந்து ஒரு வாரம் தங்கியிருந்து வழிபட்டு குணமடைந்த மகிழ்ச்சியுடன் திரும்புகிறார்கள். பிறரால் வஞ்சிக்கப்பட்டவர்கள், கடன் கொடுத்து ஏமாந்தவர்கள், பாகப் பிரிவினையில் அநீதி இழைக்கப்பட்டவர்கள், நிலத்தகராறு உள்ளவர்கள், சரியான சாட்சிப் பத்திரங்கள் இல்லாமையால் நீதிமன்றங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் இக்கோயிலுக்கு வந்து, மஞ்சுநாத சுவாமி சந்நிதி தானிகே என்று சுவாமியிடம் வழக்கைச் சொல்லி பிரார்த்திக்கிறார்கள்.


தலபெருமை:

இங்குள்ள அன்னப்ப சுவாமி தர்மதேவதைகளின் பிரதிநிதியாகவும், இந்த தர்மஸ்தலா தலத்தின் மகிமைக்குப் பெரிதும் காரணமாகவும் இருக்கிறார். தினமும் இங்கு வழங்கப்படும் அன்னதானத்திற்கு அதிபதியாகவும் இருக்கிறார். கருவறையில் மஞ்சுநாத சுவாமி பெரிய லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். இவருக்கு இருபுறமும் உற்சவர்கள் காணப்படுகின்றனர். சுவாமி சன்னதியின் வடபுறத்தில் தர்மதேவதைகளின் சன்னதி தனியாக உள்ளது கன்னியாகுமரி அம்மன் சன்னதியில் குமாரசுவாமி, கால ராகு முதலிய தேவதைகள் எழுந்தருளியுள்ளனர், மையப் பகுதியில் கன்னியாகுமரி அன்னையின் உற்சவ விக்ரகம் உள்ளது. மஞ்சுநாதரின் கருவறைக்குப் பின் உள்ள சுவரில் லிங்கோத்பவர், கணபதி காட்சி அளிக்கின்றனர் பிராகாரத்தின் வடக்கு மூலையில் இஷ்ட தேவதைகளின் சந்நிதி இருக்கிறது. இக்கோயிலுக்கு வெளியே உள்ள அன்னபூர்ணா சத்திரத்தில் தினமும் சுமார் 10,000 பேருக்கு குறையாமல் அன்னதானம் நடக்கிறது.


மஞ்சுநாத சுவாமியின் பிரதிநிதியாக அவரது சன்னதிக்கு எதிரே உள்ள பீடத்தில் அமர்ந்திருக்கும் தற்போதைய ஹெக்டே வழக்குகளை விசாரிக்கிறார். இருதரப்பினரையும் அழைத்துப் பேசுகிறார். அவர்களை சமரசப்படுத்தி அனுப்புகிறார். அவசியமானால் தன் தீர்ப்பையும் வழங்குகிறார். வழக்காடுபவர்கள் அவரது தீர்ப்பை அப்படியே ஏற்றுக் கொள்கின்றனர். இக்கோயிலுக்கு எதிரிலேயே அழகிய நந்தவனம், அபிஷேக தீர்த்தகுளம், அன்னப்பசுவாமி ஆலயமும் உள்ளது. இத்தலத்தின் வருமானத்திலேயே கல்விக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனை, முதியோர் இல்லம் போன்றவை இயங்குகின்றன. திருமணங்களும் இலவசமாகவே நடத்தப்படுகிறது. யாத்ரீகர்கள் தங்க இலவச விடுதியும் உள்ளது. இக்கோவிலின் உண்டியலில் காணிக்கை செலுத்துவது தவிர வேறு பணத் தேவையே இங்கு இல்லை. கோவிலுக்கு உள்ளேயும் வெளியேயும் வழிகாட்ட ஊழியர்கள் உள்ளனர்.


தல வரலாறு:

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் இந்த தலம் குடுமபுரம் என்று அழைக்கப்பட்டது. அந்த சமயத்தில் பரமண்ண ஹெக்டே என்பவர் இப்பகுதியின் தலைவராக இருந்தார். ஒருநாள் தெய்வீகத் தோற்றத்துடன் கூடிய சிலர் யானை, குதிரைகளில் அமர்ந்தபடி பரமண்ண ஹெக்டே வசித்து வந்த நெல்லியாடிபீடு என்ற இல்லத்திற்கு வந்து, தாகத்திற்கு தண்ணீர் கேட்டனர். தர்ம சிந்தனையுள்ள ஹெக்டே அவர்களை முறைப்படி வரவேற்று உபசரித்து, பருகுவதற்கு சுவையான நீர் தந்தார். பின்னர் அவர்கள் ஹெக்கேடவைப் பார்த்து, நாங்கள் இந்த இல்லத்திலேயே தங்கியிருக்க விரும்புகிறோம். நீங்கள் வேறு இடத்திற்குப் போய் விடுங்கள் என்று கூறினர். அதற்கு ஒப்புக் கொண்ட ஹெக்டே உடனே தன் வீட்டிலுள்ள பொருட்களை வெளியேற்ற முயன்றார். அவர் செயலைக் கண்டு மகிழ்ந்த அவர்கள் ஹெக்டேவைப் பார்த்து, நாங்கள் மகேஸ்வரனின் கட்டளைக்குட்பட்ட தர்மதேவதைகள். எங்களால் பல அற்புதங்கள் நிகழ்த்திக் காட்ட முடியும் இந்த குடுமபுரம் கிராமத்தை ஒரு புண்ணிய ஸ்தலமாக மாற்றப் போகிறோம்.


நீங்கள் இங்கு ஒரு கோயில் கட்டி, அதில் கன்னியாகுமரி அம்மனை பிரதிஷ்டை செய்யுங்கள். மங்களூருக்கு அருகிலுள்ள கத்ரி என்ற தலத்திலுள்ள குளத்தில், காசியிலிருந்து கொண்டுவரப்பட்ட மஞ்சுநாதேஸ்ரர் என்னும் சிவலிங்கம் இருக்கிறது. அதைக் கொண்டு வந்து கன்னியாகுமரி அம்மன் சந்நிதிக்கு அருகிலேயே பிரதிஷ்டை செய்யுங்கள். இவர்களைத் தரிசிக்க வரும் பக்தர்களின் எல்லா கோரிக்கைகளும் நிறைவேறும். அதனால் பக்தர்கள் பெருமளவு காணிக்கையும் செலுத்துவார்கள். பெருந்தொகை சேரும். எங்கள் பிரதிநிதியாக நீங்கள் இருந்து அப்பணத்தை தர்ம காரியங்களுக்காகச் செலவிட வேண்டும். நீங்கள் உண்மை பக்தனாக வாழ்ந்து மக்களின் துயரங்களைக் கேட்டு தீர்த்து வையுங்கள். உங்களுக்கு ஒரு குறையும் வராமல் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறி தேவதைகள் மறைந்து விட்டனர். தர்ம தேவதைகளின் கட்டளைக்கிணங்க முதலில் கன்னியாகுமரி அம்மனுக்கு கோயில் கட்டி அதில் அம்மனை பிரதிஷ்டை செய்தார். பிறகு கத்ரியிலிருந்து கொண்டு வரப்பட்ட மஞ்சுநாதேஸ்வரருக்கு கோவில் கட்டி பிரதிஷ்டை செய்தார் ஹெக்டே.


அங்கு வழிபட ஏராளமான பக்தர்கள் வந்தனர். காணிக்கையும் குவிந்தது. அதை தர்ம காரியங்களுக்குச் செலவிட்டார் ஹெக்டே. எனவே அத்தலம் தர்ம ஸ்தலா எனப் பெயர் பெற்றது. பரமண்ண ஹெக்டேவுக்குப் பிறகு அவருடைய சந்ததியினர் தொடர்ந்து தர்மஸ்தலாவின் பாதுகாவலர்களாக இருந்து தர்மதேவதைகளின் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகின்றனர். தற்போதைய தலைவராக உள்ள வீரேந்திர ஹெக்டேவை பேசும் மஞ்சுநாத சுவாமியாகவே மதித்துப் போற்றுகிறார்கள். அவருடைய வார்த்தைகளை தெய்வ வாக்காகக் கருதுகிறார்கள் பக்தர்கள்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

தர்ம தேவதைகளுக்கு இங்கு தனி சன்னதி இருப்பது சிறப்பு.

About the author

Leave a Reply

Your email address will not be published.