திருமலை அருள்மிகு மலைக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் – Malai Kozhundeeswarar Temple

அருள்மிகு மலைக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில்


மூலவர்:

மலைக்கொழுந்தீஸ்வரர்


அம்மன்/தாயார்:

பாகம்பிரியாள்


தல விருட்சம்:

காட்டாத்தி மரம்


தீர்த்தம்:

பொய்கை தீர்த்தம்


ஆகமம்/பூஜை :

சிவாகமம்


ஊர்:

திருமலை


மாவட்டம்:

சிவகங்கை


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, கார்த்திகை சோமவாரம், சிவராத்திரி, ஆடி, தை அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை


தல சிறப்பு:

இங்குள்ள முக்குறுணி விநாயகர் சிலையின் பின்புறம், சடை போன்ற அமைப்பு இருக்கிறது. எட்டு கைகளுடன் துர்க்கை இருக்கிறாள். இவளுடன் சிம்மம், மான் ஆகிய வாகனங்கள் இருப்பது விசேஷமான அமைப்பு. இங்குள்ள கால பைரவருடன் நாய் வாகனம் இல்லை. கையில் கதை வைத்திருக்கிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.


திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு மலைக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், திருமலை – 630 552. சிவகங்கை மாவட்டம்.


போன்:

+91 97888 43275


பொது தகவல்:

பவுர்ணமி, வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். திருக்கார்த்திகையன்று மலையுச்சியில் தீபமேற்றுவர். இங்குள்ள முக்குறுணி விநாயகர் சிலையின் பின்புறம், சடை போன்ற அமைப்பு இருக்கிறது. இச்சன்னதிக்கு முன்புறம் மகிஷாசுரனை வதம் செய்தபடி எட்டு கைகளுடன் துர்க்கை இருக்கிறாள். இவளுடன் சிம்மம், மான் ஆகிய வாகனங்கள் இருப்பது விசேஷமான அமைப்பு. ராகு காலத்தில் இவளுக்கு விசேஷ பூஜைகள் உண்டு. அருகில் ஒரே கல்லில் புடைப்புச் சிற்பமாக சப்தகன்னியர் உள்ளனர். சுப்பிரமணியர், அம்பிகையின்றி தனித்து காட்சி தருகிறார். இங்குள்ள கால பைரவருடன் நாய் வாகனம் இல்லை. கையில் கதை வைத்திருக்கிறார். நவக்கிரகம், சூரியன், சந்திரன், காவல் தெய்வம் மாவீரர் கருவபாண்டியன் ஆகியோரும் உள்ளனர். சன்னதிக்கு முன்புறம் விநாயகர், முருகன் உள்ளனர். அருகில் சேவல் கொடியும், ஆடு, மயில் வாகனங்களும் உள்ளன. முருகனுக்கு குண்டோதரன் குடைப்பிடித்தபடி இருக்கிறான். அருகில் அக்னி பகவான் உள்ளார்.


பிரார்த்தனை


திருமணத் தடை நீங்க, தீராத நோய், உடல் வலி, முடக்குவாதம், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோர் உமாசகித மூர்த்தியை வழிபடுகின்றனர். முன்னோருக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதோர், பித்ருசாபம் உள்ளோர் இத்தீர்த்தக்கரையில் சிரார்த்தம் செய்து வேண்டிக்கொள்கின்றனர்.


நேர்த்திக்கடன்:

குழந்தை பாக்கியத்திற்காக இங்குள்ள காட்டாத்தி விருட்சத்தில் தொட்டில் கட்டி வழிபடுகின்றனர். வில்வ இலையால் சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.


தலபெருமை:

விசேஷ சிவ தரிசனம்:

மலைக்கொழுந்தீஸ்வரர் சன்னதிக்கு இடப்புறமுள்ள குடவரை சன்னதியில் அம்பிகையுடன், உமாசகித மூர்த்தி சன்னதி உள்ளது. சிவன் இடது காலை மடக்கி, வலக்காலை தொங்கவிட்டும், வலது கையை மடியில் வைத்து, இடக்கையால் அம்பிகையின் கையைப் பிடித்தபடி சுகாசன நிலையில் அமர்ந்திருக்கிறார். தலையில் அலங்கரிக்கப்பட்ட மகுடம், காதில் மகர குண்டலங்கள், கழுத்தில் மாலை, இடுப்பில் ஒட்டியானம், கை விரல்களில் மோதிரம், கைகளில் திருமணத்தின்போது கட்டும் மங்கலக்கயிறு (கங்கணம்), காலில் சிலம்பு என சகல ஆபரணங்களையும் அணிந்திருக்கிறார். அம்பிகை உத்குடி ஆசன நிலையில், நாணத்துடன் வலது காலை மடித்து, மணப்பெண் போல இடது கையை தரையில் ஊன்றி அமர்ந்திருக்கிறாள். அம்பிகையை மணம் முடித்த சிவன், மணப்பெண்ணுடன் சொக்கட்டான் ஆடினாராம். இந்த அமைப்பில் இச்சன்னதி அமைந்துள்ளது.


தம்பதி கோயில்:

சிவனை விட்டு எப்போதும் பிரியாமல், அவருடனே இருக்கும்படியாக இடது பாகம் பெற்றவள் அம்பிகை. எனவே, இவளுக்கு பாகம்பிரியாள் என்றும் பெயருண்டு. இந்த பெயருடன் அம்பிகை இங்கு அருள்பாலிக்கிறாள். பெண்கள், கணவருடன் இணக்கமாக இருக்க இவளை வழிபடுகின்றனர். திருமண பிரார்த்தனைக்காக தாலி அணிவித்து வேண்டிக் கொள்வதும் உண்டு. அழகு, அறிவு, நற்குணம், கை நிறைய சம்பளம் என எந்த குறையும் இல்லாதிருந்தாலும், ஏதாவது ஒரு காரணத்தால் திருமணம் மட்டும் தள்ளிப்போய்க் கொண்டிருக்கும். இவர்கள் உமாசகித மூர்த்திக்கு மணமாலை அணிவித்து, வணங்கிச் செல்கின்றனர். இதனால், அவர்களுக்கு விரைவில் நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை.


பக்கவாதத்திற்கு தீர்வு:

இரண்டு கி.மீ., சுற்றளவுடன் கூடிய மலை மீது அமைந்த கோயில் இது. தீராத நோய், உடல் வலி, முடக்குவாதம், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோர் நிவர்த்திக்காக மலைக்கொழுந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து, வில்வ இலை அர்ச்சனை செய்கின்றனர். குணமானதும் மலையில் பாதங்களை பொறித்து வைக்கின்றனர். குழந்தை பாக்கியத்திற்காக இங்குள்ள காட்டாத்தி விருட்சத்தில் தொட்டில் கட்டி வழிபடுகின்றனர்.


சுவாமி சன்னதி விமானத்தில் மகாவிஷ்ணுவின் அவதாரங்களான மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், மகாபலி, பரசுராமர் மற்றும் ராமபிரான் சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. விமானத்தின் வடதிசையில் சிவன், பிரம்மா, மகாவிஷ்ணு மூவரும் ஒரே பாதத்துடன் ஒன்றிணைந்த மூர்த்தியாக காட்சி தரும் ஏகபாத மூர்த்தியையும் தரிசிக்கலாம்.


பித்ரு தோஷ நிவர்த்தி:

மலையடிவாரத்தில் தாமரை தீர்த்தக்குளம் உள்ளது. இதில், கங்கையே சங்கமித்திருப்பதாக ஐதீகம். முன்னோருக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதோர், பித்ருசாபம் உள்ளோர் இத்தீர்த்தக்கரையில் சிரார்த்தம் செய்து வேண்டிக் கொள்கின்றனர். ஆடி, தை அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை நாட்களில் இங்கு கூட்டம் அதிகமிருக்கும்.


தல வரலாறு:

பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட இப்பகுதியை, 11ம் நூற்றாண்டில் சோழ மன்னன் முதலாம் ராஜேந்திரன் கைப்பற்றினார். அதன்பின், 12ம் நூற்றாண்டில் பாண்டியர் வம்சத்தில் வந்த ஜடாவர்ம குலசேகரன், சோழ மன்னனை வென்று நாட்டை மீட்டார். சிவபக்தனான ஜடாவர்ம குலசேகரன், தான் வெற்றி பெற்றமைக்கு நன்றிக் காணிக்கையாக, இங்கிருந்த மலையில் சிவனுக்கு கோயில் எழுப்பி,”மலைக்கொழுந்தீஸ்வரர்’ என்று பெயர் சூட்டினான். மிகவும் தொன்மையான இக்கோயிலில் கி.பி.2ம் நூற்றாண்டுகளில் வழக்கில் இருந்த தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் உள்ளன. இங்குள்ள குன்றுகளில் பழைய தமிழர்களின் வரலாற்றைச் சொல்லும் ஓவியங்களும் உள்ளன.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

இங்குள்ள முக்குறுணி விநாயகர் சிலையின் பின்புறம், சடை போன்ற அமைப்பு இருக்கிறது. எட்டு கைகளுடன் துர்க்கை இருக்கிறாள். இவளுடன் சிம்மம், மான் ஆகிய வாகனங்கள் இருப்பது விசேஷமான அமைப்பு. இங்குள்ள கால பைரவருடன் நாய் வாகனம் இல்லை. கையில் கதை வைத்திருக்கிறார்.

About the author

Leave a Reply

Your email address will not be published.