பாணாத்துறை கும்பகோணம் அருள்மிகு பாணபுரீஸ்வரர் (வியாசலிங்கம்) திருக்கோயில் – Banapureeswarar (Vyasa Lingam) Temple

அருள்மிகு பாணபுரீஸ்வரர் (வியாசலிங்கம்) திருக்கோயில்


மூலவர்:

பாணபுரீஸ்வரர்


அம்மன்/தாயார்:

சோமகலாம்பாள்


ஊர்:

பாணாத்துறை, கும்பகோணம்


மாவட்டம்:

தஞ்சாவூர்


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

சிவராத்திரி, பிரதோஷம் மற்றும் சிவன், அம்பாளுக்குரிய விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் உண்டு. மகாமகத்தன்று இறைவன் இங்கிருந்து மகாமக குளத்திற்கு எழுந்தருள்வார்.


தல சிறப்பு:

உலகம் அழிந்த காலத்தில், தண்ணீரில் மிதந்த கும்பத்தை சிவன் பாணத்தால் உடைத்த தலம்.


திறக்கும் நேரம்:

காலை 7மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு பாணபுரீஸ்வரர் திருக்கோயில், பாணாத்துறை, கும்பகோணம்.


பொது தகவல்:

வியாச முனிவர் ஒருமுறை நந்திதேவரிடம் சாபம் ஒன்றை பெற்றார். மகாவிஷ்ணுவின் கட்டளைப்படி பாணபுரீஸ்வரரை வழிபட்டு சாபம் நீங்கியது. இத்தலத்தில் வியாசர் லிங்கம் ஒன்றை அமைத்து வழிபட்டார். இதற்கு வியாசலிங்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. வங்க தேசத்து அரசனான சூரசேன மன்னன் தன் மனைவி காந்திமதியின் தீராத நோயை போக்குவதற்காக சூதமகா முனிவரின் கட்டளைப்படி இத்தலத்திற்கு வந்து தங்கி திருப்பணி செய்து மகப்பேறும் பெற்றான். இங்கிருக்கும் சோமகலாம்பாளை வழிபட்டால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும். மேலும் முகப்பொலிவையும் இந்த அம்பிகை தருவாள்.


பிரார்த்தனை


சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு உண்டாக இங்குள்ள அம்மனை பிரார்த்திக்கின்றனர்.


தல வரலாறு:

ஊழிக்காலத்தில் பிரளய வெள்ளம் ஏற்பட்டபோது பிரம்மனால் விடப்பட்ட அமுதகுடம் மிதந்து வந்துகொண்டிருந்தது. அப்போது கயிலையில் இருந்து வேட வடிவத்தில் வந்த சிவபெருமான் ஒரு பாணத்தால் அந்தகுடத்தை உடைத்தார். சிவன் பாணம் தொடுத்த இடம் என்பதால் பாணாத்துறை எனப்பட்டது. இறைவனுக்கு பாணபுரீஸ்வரர் என்ற பெயர் உருவானது. இதன்பிறகே குடத்திலிருந்த அமுதம் பெருகி மகாமக குளமாக வடிவெடுத்தது. எனவே இத்தலத்து இறைவனை வணங்குபவர்களுக்கு ஆயுள் அபிவிருத்தியும், அழியாத புகழும் கிட்டும் என்பது நம்பிக்கை. அமுதத்தையே குடித்த மகிமை இத்தலத்திற்கு வந்தால் கிடைத்துவிடும்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

உலகம் அழிந்த காலத்தில், தண்ணீரில் மிதந்த கும்பத்தை சிவன் பாணத்தால் உடைத்த தலம்.

About the author

Leave a Reply

Your email address will not be published.