கிடாத்தலைமேடு துர்காபுரீஸ்வரர் கோயில்

மூலவர்:


துர்காபுரீஸ்வரர்


அம்மன்/தாயார்:

காமுகாம்பாள்


ஊர்:

கிடாத்தலைமேடு


மாவட்டம்:

தஞ்சாவூர்


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

சிவராத்திரி, பிரதோஷம், நவராத்திரி, பவுர்ணமி பூஜை


தல சிறப்பு:

துர்க்கை தனி சன்னதியில் வடக்குநோக்கி, கிடாத்தலையின் மீது நின்றபடி அருள்பாலிப்பது தலத்தின் சிறப்பு.


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு துர்காபுரீஸ்வரர் திருக்கோயில் கிடாத்தலைமேடு, தஞ்சாவூர் மாவட்டம்.


போன்:

+91 98400 53289


பொது தகவல்:

சோழர் காலவேலைப்பாடு மிக்க நந்தி, மாரியம்மன், பைரவர், சூரியன், நாகர், சாமுண்டீஸ்வரி, துர்கை சன்னதிகள் உள்ளன.


பிரார்த்தனை


விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் தங்கள் தொழிலுக்கு பாதுகாப்பாக இருக்கும்படி இங்குள்ள சாமுண்டீஸ்வரியின் சூலத்தை வழிபடுகின்றனர்.


நேர்த்திக்கடன்:

இங்குள்ள சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புதுவஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.


தலபெருமை:

கரும்புவில் காமுகாம்பாள்:

அசுரர்களிடம் இருந்து தேவர்களைக் காப்பதற்காக தியானத்தில் இருந்த சிவனை எழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மன்மதன், சிவன் மீது மலர்க்கணை தொடுத்து நிஷ்டையைக் கலைத்தான். கோபம் கொண்ட சிவன் அவனை சாம்பலாக்கினார். பின்னர், ரதி மீது இரக்கம் கொண்டு, அவன் அவளது கண்களுக்கு மட்டும் தெரியும் வரம் அளித்தார். அம்பிகை அவனுக்கு கரும்பு வில்லையும், மலர்க்கணைகளையும் திரும்ப அளித்தாள். காமனாகிய மன்மதனுக்கு அருள்புரிந்ததால் காமுகாம்பாள் என்று பெயர் பெற்று, இத்தலத்தில் குடியிருக்கிறாள்.


மூக்குத்தி கேட்ட துர்க்கை:

துர்க்கை தனி சன்னதியில் வடக்குநோக்கி, கிடாத்தலையின் மீது நின்றபடி அருள்புரிகிறாள். கைகளில் சக்கரம், பாணம், வில், கத்தி,கேடயம் ஏந்தியிருக்கிறாள். ஸ்ரீசக்ர பூர்ண மகாமேருவும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. துர்க்கைக்கு சிலை வடித்த சிற்பி, தேவிக்கு மூக்குத்தி வடிக்கவில்லை. கனவில் வந்த துர்க்கை, தன் இடது நாசியில் துளையிடும்படி கட்டளை இட்டாள். அதன்படியே செய்து தேவிக்கு மூக்குத்தி அணிவிக்கப்பட்டது. பவுர்ணமியன்று இவளுக்கு ஹோமம் நடத்தி, சுமங்கலிகளுக்கு சேலை வழங்குவது வழக்கம். ஒருமுறை சிறப்பு வழிபாடாக 300 சுமங்கலிகள் பூஜையில் கலந்து கொள்ள ஏற்பாடாகி இருந்தது. ஆனால், 299 சுமங்கலிகள் மட்டுமே வந்திருந்தனர். அதனால், துர்க்கையை சுமங்கலியாக பாவித்து ஒருரவிக்கையும், புடவையும் பாதத்தில் வைத்து பூஜையைத் தொடங்கினர். பூஜை முடியும் நேரத்தில், ஒரு வயதான சுமங்கலி வந்தார். திருப்தியாக சாப்பிட்டதோடு, புடவையும் வாங்கியபிறகு மறைந்து விட்டார். துர்க்கையே இவ்வாறு வந்து பெற்றுச்சென்றதாக ஐதீகம்.


சூல சாமுண்டீஸ்வரி:

துர்க்கை சன்னதிக்கு எதிரே 20 அடி உயர சூலம் உள்ளது. இதனை சாமுண்டீஸ்வரியாக எண்ணி வழிபடுகின்றனர். விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் தங்கள் தொழிலுக்கு பாதுகாப்பாக இருக்கும்படி இந்த சூலத்தை வழிபடுகின்றனர். சோழர் காலவேலைப்பாடு மிக்க நந்தி, மாரியம்மன், பைரவர், சூரியன், நாகர் சன்னதிகள் உள்ளன.


தல வரலாறு:

கிடாத்தலை கொண்ட அசுரன் ஒருவன் தேவர்களைக் கொடுமைப்படுத்தி வந்தான். அவர்கள் அம்பிகையைச் சரணடைந்து தங்களைக் காக்கும்படி வேண்டினர். அம்பாள் கடும் கோபத்துடன் போருக்குப் புறப்பட்டாள். அசுரனின் தலையை வெட்டினாள். அது பூலோகத்தில் விழுந்த இடமே கிடாத்தலைமேடு. அசுரனானாலும், ஒரு உயிரைக் கொன்ற பழி தீர, பூலோகம் வந்து சிவலிங்க பூஜை செய்தாள். அவள் வழிபட்ட லிங்கத்திற்கு துர்காபுரீஸ்வரர் என்று பெயர் சூட்டப்பட்டது. பிற்காலத்தில் அங்கு கோயில் எழுந்தது.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

துர்க்கை தனி சன்னதியில் வடக்குநோக்கி, கிடாத்தலையின் மீது நின்றபடி அருள்பாலிப்பது தலத்தின் சிறப்பு.

About the author

Leave a Reply

Your email address will not be published.