கும்பகோணம் அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில் – Kalahastheeswarar Temple

அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்


மூலவர்:

காளஹஸ்தீஸ்வரர்


அம்மன்/தாயார்:

ஞான பிரகலாம்பிகை, கார்த்தியாயினி


ஊர்:

மடத்து தெரு, கும்பகோணம்


மாவட்டம்:

தஞ்சாவூர்


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

மகர சங்கராந்தி அன்று இவருக்கு திருக்கல்யாணம் நடத்தப்படும். இதன்பின் நித்ய கல்யாண கோலத்தில் காட்சியளிப்பார். மகாமகத்தை ஒட்டி தீர்த்தவாரிக்காக சுவாமி எழுந்தருள்வார். ராகு காலங்களில் துர்க்கைக்கு பூஜை நடத்தப்படுகிறது.


தல சிறப்பு:

இங்கு கல்யாணசுந்தரமூர்த்தி, அன்னை கார்த்தியாயினியுடன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். இவர் கையில் வாக்கிங் ஸ்டிக் வைத்திருக்கிறார். மணமகன் காசியாத்திரைக்கு செல்லும்போது வாக்கிங் ஸ்டிக் வைத்திருப்பதுபோல இவருக்கும் இருப்பது சிறப்பான அம்சமாகும்.


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில், மடத்து தெரு, கும்பகோணம்.


பொது தகவல்:

காஞ்சி மகா பெரியவர் தினமும் தரிசனம் செய்த கோயில் இது. திருப்பதி அருகே காளஹஸ்தி இருப்பது போல, தென்திருப்பதியான உப்பிலியப்பன் கோயில் அருகே தென்காளஹஸ்தியான கும்பகோணம் காளஹஸ்தீஸ்வரர் கோயிலும் அமைந்துள்ளது. நவக்கிரக சன்னதி நீங்கலாக தனியாகவும் ராகுவுக்கு சன்னதி உள்ளது. இத்தலம் ஓம்கார வடிவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ராகு தலம் என்பதால் 18 கைகள் கொண்ட பிரம்மாண்டமான துர்க்கை சன்னதி இருக்கிறது. இவளை அஷ்டதசபுஜ மகாலட்சுமி துர்க்கை என அழைக்கின்றனர். துர்க்கைக்கெல்லாம் துர்க்கை என்பதால் 18 கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ராஜகோபுர வாசலில் விநாயகரும், முருகனும் அருள்பாலிக்கின்றனர்.


பிரார்த்தனை


தீராத நோய்களெல்லாம் தீர்வதற்கு இங்கு பிரார்த்திக்கின்றனர்.


நேர்த்திக்கடன்:

புழுங்கல் அரிசி சாதம், ஜீரக ரசம், பருப்பு துவையல் ஆகியவை நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. இவருக்கு அர்ச்சனை செய்து நைவேத்தியம் படைத்து சாப்பிட்டால் தீராத நோய்களெல்லாம் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.


தலபெருமை:

பல பெரிய கோயில்களில் ஜுரதேவருக்கு சன்னதிகள் உள்ளன. ஆனால், இந்த கோயிலில் உள்ள ஜுரஹரேஸ்வரருக்கு மூன்று கால்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு கால்களை கீழே ஊன்றியும் ஒரு காலை மட்டும் மடித்தும் இவர் காட்சியளிக்கிறார். எலும்பு, தோல், நரம்பு ஆகியவையே நோய்களுக்கு காரணமாக அமைகின்றன. இம்மூன்றாலும் வரும் நோய்களை குணப்படுத்துவதால் இவருக்கு மூன்று கால்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இறைவனுக்கு வெந்நீரால் அபிஷேகம் நடத்தப்படுகிறது.இத்தலத்தில் சிவசூரியன் மேற்கு பார்த்து அமர்ந்துள்ளார். இங்குள்ள நடராஜர் சன்னதியில் மிக அருமையான சிலை இருக்கிறது. அருகில் சிவகாமி அம்பாளும், மாணிக்கவாசகரும் அருள்பாலிக்கின்றனர். மகாமக தீர்த்தவாரி கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.


தல வரலாறு:

ஆதிசேஷனுக்கும் வாயுபகவானுக்கும் இடையே யார் பலசாலி என்பதில் போட்டி ஏற்பட்டது. மேருமலையை ஆதிசேஷன் பிடித்துக்கொள்ள, வாயுபகவான் அதை அசைக்க வேண்டும் என்பது போட்டி. இந்த போட்டியில் மேரு மலையின் மூன்று சிகரங்கள் பெயர்ந்தன. அவை தென்னாட்டில் வந்து விழுந்தன. அவையே காளத்திமலை, திருச்சிராப்பள்ளி மலை, திரிகோண மலை ஆகியவை ஆயிற்று. இங்கு சிவபெருமான் எழுந்தருளினார். காளத்தீஸ்வரர் என வழங்கப்பட்டது. கும்பகோணம் தீர்த்தநகரம் என்பதால் இங்கும் எழுந்தருளினார். காளஹஸ்தியில் ராகு தோஷத்தை தீர்த்து வைப்பதைப்போல இத்தலத்து காளத்தீஸ்வரரும் ராகுதோஷத்தை தீர்த்து வைக்கிறார். காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகளுக்காக தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரால் இந்தகோயில் அமைக்கப்பட்டது. இத்தலத்து ஞான பிரகலாம்பிகையை தரிசித்தால் காளஹஸ்தியில் வழிபட்ட பலன் கிடைக்கும்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

இங்கு கல்யாணசுந்தரமூர்த்தி, அன்னை கார்த்தியாயினியுடன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். இவர் கையில் வாக்கிங் ஸ்டிக் வைத்திருக்கிறார்.

About the author

Leave a Reply

Your email address will not be published.