திருத்தண்டிகைபுரம் சனத்குமரேஸ்வரர் கோயில்

மூலவர்:


சனத்குமரேஸ்வரர்


அம்மன்/தாயார்:

சவுந்தர்ய நாயகி


தல விருட்சம்:

பலா மரம்


தீர்த்தம்:

சோம தீர்த்தம்


ஊர்:

திருத்தண்டிகைபுரம்


மாவட்டம்:

தஞ்சாவூர்


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

பிரதோஷம், நவராத்திரி, மகா சிவராத்திரி, மாசிமாதப் பவுர்ணமி விளக்குபூஜை போன்றவை மிக விஷேசமாகக் கொண்டாடப்படுகின்றன.


தல சிறப்பு:

இங்குள்ள மூலவர் மேற்கு திசை நோக்கி அருள்பாலிப்பதும், 12 ராசிகளையும் பீடமாக அமைத்து அதன் மீது அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் தட்சிணாமூர்த்தி உள்ளதும் தனி சிறப்பு.


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு சனத்குமரேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம் எஸ்.புதூர்,திருத்தண்டிகைபுரம், தஞ்சாவூர் மாவட்டம்.


பொது தகவல்:

இங்கு விநாயகர், சுப்ரமண்யர், சண்டிகேஸ்வரர் தனித்தனி சன்னதிகளில் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். தவிர சூரியன், சந்திரன், ஞானசம்பந்தர், அப்பர் ஆகியோருக்கும் உருவச் சிலைகள் உள்ளன.


பிரார்த்தனை


பக்தர்கள் தாங்கள் இழந்த செல்வத்தை பெற இங்குள்ள ஈசனை வழிபட்டு வந்தால் செல்வங்கள் அனைத்தையும் பெறலாம் என்பது நம்பிக்கை.


அட்சய திருதியை நாளில் குபேரனின் திருவடியில் பொன் அல்லது ஒரு ரூபாய் நாணயம் வைத்து நெய் தீபமேற்றி வழிபட்டு வணங்கினால் ஆயுள் முழுதும் பணத்துக்குப் பஞ்சமின்றி மனமகிழ்ச்சியுடன் வாழலாம் என்கின்றனர்.


நேர்த்திக்கடன்:

பக்தர்கள் இங்குள்ள சுவாமிக்கும் அம்பிகைக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்தும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.


தலபெருமை:

ஆலயத்தின் உள்ளே மேற்கு திசை நோக்கி சனத்குமாரேஸ்வரர் அருள்பாலிக்கிறார். அம்பிகை சவுந்தர்ய நாயகி தெற்கு பார்த்து நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களோடு அபய முத்திரை காட்டி அருள்பாலிக்கிறாள். பெயருக்கு ஏற்றாற் போல அம்பிகையின் அழகைக் காண கண்கோடி வேண்டும். இந்த ஆலயத்தில் ஒரு பவுர்ணமி தினத்தன்று நல்ல பாம்பு ஒன்று அம்பிகையின் திருவடியில் நான்கு நாட்கள் இருந்து விட்டு, பின் மாயமாய் மறைந்து விட்டது என்று கூறப்படுகிறது. இதன்பின் ஒவ்வொரு பவுர்ணமியன்றும் அம்பாள் வழிபாடு விசேஷமாக இருக்கிறது. மாசிமாதப் பவுர்ணமியன்று விளக்குபூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கோஷ்டத்தில் பிரம்மா, விநாயகர், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி ஆகியோரும் உள்ளனர். இங்கு 12 ராசிகளையும் பீடமாக அமைத்து அதன் மீது அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார் தட்சிணாமூர்த்தி. எந்த ராசியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இவரை வழிபட்டால் குரு தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பதால் இது ஒரு குரு ÷க்ஷத்திரமாகவும் கருதப்படுகிறது.


மதுரை மன்னன் மாறவர்மன் சுந்தர பாண்டியனால் எழுப்பப்பட்டது. இக்கோயிலின் முன்னே சுருளியாறு வடதிசை நோக்கிப் பாய்வது விசேஷம்.


தல வரலாறு:

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலில் அமுதம் கடைந்தபோது சங்கநிதி, பதுமநிதி என்ற ஐஸ்வர்யங்களும் தோன்றின. அவற்றுக்கு அதிபதியாக குபேரனை நியமித்தார் திருமால். குபேரனும் தர்மத்தின்படி அவற்றைக் கண்ணும் கருத்துமாகக் காத்து வந்தான். ஒரு சமயம் குபேரன் விதி வசத்தால் ஒரு சிறு தவறு செய்ய நேர்ந்தது. அவனைப் பாவம் சூழ்ந்ததால் அவனிடம் இருந்த அஷ்ட ஐஸ்வர்யங்களும் அவனை விட்டு நீங்கின. தான் செய்த தவறை எண்ணி மிகவும் வருந்தினான். சப்த ரிஷிகளைக் கண்டு வணங்கி இழந்த செல்வங்களை மீண்டும் பெற முடியுமா? என்று கேட்டான். அவன் மேல் இரக்கம் கொண்ட அவர்கள் திருத்தண்டிகை புரத்தில் சனத் குமாரேஸ்வரர் கோயிலில் உள்ள சோம தீர்த்தத்தில் நீராடி அங்கு எழுந்தருளியுள்ள சனத் குமாரேஸ்வரரையும் அம்பிகை சவுந்தர்ய நாயகியையும் வழிபட யோசனை வழங்கினர். குபேரனும் அவ்வாறே செய்து இழந்த ஐஸ்வர்யங்கள் அனைத்தையும் இறைவன் அருளோடு திரும்பப் பெற்றான். நான் மட்டுமின்றி என்னைப் போல செல்வத்தை இழந்த பக்தர்கள் இங்கு வந்து தரிசித்தால் அவர்கள் செல்வத்தைத் திரும்பப் பெற நீங்கள் அருள்புரிய வேண்டும்! என்று இறைவனிடம் கோரிக்கை வைத்தான், ஈசனும் அவ்வாறே அருளினார். குபேரன் இத்தலத்து ஈசனை வழபட்டு இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றதால் இது குபேர ஸ்தலம் என்று வழங்கப்படுவதாக தலபுராணம் தெரிவிக்கிறது.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

இங்குள்ள மூலவர் மேற்கு திசை நோக்கி அருள்பாலிப்பதும், 12 ராசிகளையும் பீடமாக அமைத்து அதன் மீது அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் தட்சிணாமூர்த்தி உள்ளதும் தனி சிறப்பு.

About the author

Leave a Reply

Your email address will not be published.