ரங்கராஜபுரம் இடும்பேஸ்வர சுவாமி கோயில்

மூலவர்:


இடும்பேஸ்வர சுவாமி


அம்மன்/தாயார்:

குசும குந்தலாம்பிகை


ஊர்:

ரங்கராஜபுரம்


மாவட்டம்:

தஞ்சாவூர்


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

ஐப்பசி பவுர்ணமி, பவுர்ணமி, சிவரத்திரி, பிரதோஷம்


தல சிறப்பு:

இங்குள்ள இறைவன் அக்னி தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர்.


திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு இடும்பேஸ்வர சுவாமி திருக்கோயில் ரங்கராஜபுரம், தஞ்சாவூர்.


பொது தகவல்:

ஆலய முகப்பைக் கடந்ததும் விசாலமான பிரகாரம் உள்ளது. கொடிமரம், பீடம், நந்தி இவைகளைக் கடந்தால் மகா மண்டபம். மகா மண்டபத்தின் வலதுபுறம் இறைவியின் சன்னதி உள்ளது.


பிரார்த்தனை


ஜாதகத்தில் தோஷம் நீங்கவும், வெப்பத்தால் வரும் நோய்கள் மற்றும் சரும நோய்கள் நீங்க இங்குள்ள இறைவனை பிரார்த்தனை செய்கிறார்கள்.


நேர்த்திக்கடன்:

சூரிய தேவனை வணங்கி ஒன்பது வாரம் அவர் எதிரே அமர்ந்து அவருக்கு அபிஷேகம் செய்து வந்தால் நோய்களின் கடுமை நீங்கி குணமாவது நிச்சயம் என்கின்றனர்.


தலபெருமை:

ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் இடும்பேஸ்வர சுவாமி இறைவி பெயர் குசும குந்தலாம்பிகை. அன்னை நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் தென் முகம் நோக்கி புன்னகை தவழ காட்சி தரும் அழகே அழகு. அடுத்துள்ள கருவறையில் ஈசன் லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.


ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர். பீமனின் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கியவர் இத்தலத்து இறைவன். எனவே இத்தலம் தோஷ நிவர்த்தி தலமாகவும் போற்றப்படுகிறது.


தல வரலாறு:

சிவபெருமானிடம் சாபம் பெற்று பசுவாக உருவெடுத்து பூலோகம் வந்தாள் பார்வதி தேவி. சிவபெருமானின் லிங்கத் திருமேனியில் பாலைப் பொழியும் போது. பசுவின் கால் இறைவின் மேல் பட்டு பாவ விமோசனம் பெற்றாள் பார்வதி. சிவபெருமான் பார்வதி திருக்கல்யாணம் பந்தணை நல்லூரில் நடைபெறுவதென முடிவாயிற்று. அந்தப் பெருமணத்திற்குக் கயிலையிலிருந்து அனைத்து தேவாதி தேவர்களும் பந்தணை நல்லூருக்கு வரத்தொடங்கினர்.


ஸ்ரீபசுபதீஸ்வரர் என்ற பெயர் கொண்ட சிவபெருமானின் திருக்கல்யாணத்தைக் காண திக்குபாலர்களில் ஒருவனாகிய அக்னி தேவன் சிவபெருமானை பூஜை செய்ய விரும்பினான். பந்தணை நல்லூருக்கு அக்னி திக்கில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தான். தினம் தினம் அந்த இறைவனை பூஜித்து வணங்கினான். அந்த தலம்தான் ரங்கராஜபுரம். இத்தலத்திற்கு இப்பெயரை சூட்டியவர் மகாவிஷ்ணு. மண்ணியாற்றில் நீராடிவிட்டு இத்தலத்து இறைவனை ஆராதிக்க வந்த மகா விஷ்ணு இத்தலத்துக்கு அரங்கராஜபுரம் என பெயர் சூட்டினார். அதுவே தற்போது ரெங்கராஜபுரம் என அழைக்கப்படுகிறது.


வனவாசத்தில் இருந்த பாண்டவர்களில் ஒருவராகிய பீமராஜன் காட்டில் நள்ளிரவில் இடும்பனைக் கொன்றார். அவரைப் பிரம்மஹத்தி தோஷம் பற்றியது. இத்தலம் வந்த பீமராஜன் இத்தலத்து இறைவனை ஆராதித்து தோஷம் நீங்கப் பெற்றார். தன்னைக் காத்து அருள் புரிந்த இத்தலத்து இறைவனை இடும்பேஸ்வர சுவாமி என்று பீமன் அழைக்க, அந்தப் பெயரே இத்தலத்து இறைவனுக்கு நிலையாகி விட்டது.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

இங்குள்ள இறைவன் அக்னி தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர்.

About the author

Leave a Reply

Your email address will not be published.