திருக்கல்யாணபுரம் அருள்மிகு இடங்கொண்டீஸ்வரர் திருக்கோயில் – Idam Kondeeswarar Temple

அருள்மிகு இடங்கொண்டீஸ்வரர் திருக்கோயில்


மூலவர்:

இடங்கொண்டீஸ்வரர்


அம்மன்/தாயார்:

பிரஹத்சுந்தர குஜாம்பிகை


ஊர்:

திருக்கல்யாணபுரம்


மாவட்டம்:

தஞ்சாவூர்


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

நவராத்திரி, திருக்கார்த்திகை, பிரதோஷம், கார்த்திகை சோமவாரம், அன்னாபிஷேகம், திருவாதிரை, சிவராத்திரி


தல சிறப்பு:

தேவார வைப்புத்தலங்களில் இடங்கொண்டீஸ்வரர் மிகவும் முக்கியத்தலமாக கருதப்படுகிறது.


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு இடங்கொண்டீஸ்வரர் திருக்கோயில் திருக்கல்யாணபுரம், தஞ்சாவூர்.


பொது தகவல்:

தஞ்சை மாவட்டத்தில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்தில் சுவாமி இடங் கொண்டீஸ்வரர் லிங்க வடிவில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். அம்பாள் பிரகத் சுந்தர குஜாம்பிகை தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள்.


கருவறையை அடுத்து அர்த்த மண்டபம் முன் மண்டபம், மகாமண்டபம் உள்ளது. நுழைவாயிலில் அடுத்து பலிபீடம், நந்திகேஸ்வரர் உள்ளனர், விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், துர்கை, பரமேஸ்வரி, கிருஷ்ணர், மகாலட்சுமி, தட்சணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வத்திருமேனிகள் கோயிலின் பிராகாரத்தில் அமையப் பெற்றுள்ளன. அருகே கச்சப முனிவரின் திருமேனியும் உள்ளது.


பிரார்த்தனை


பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள சிவனையும், அம்மனையும் வேண்டிச் செல்கின்றனர்.


நேர்த்திக்கடன்:

சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புதுவஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.


தலபெருமை:

இங்கு நால்வர், சூரியன், சந்திரன், பைரவர், சனிபகவான், கிருஷ்ணர், துர்கை, நவகிரகங்கள் அருள்பாலிக்கின்றனர். கோயிலின் இருகால பூஜைகள் நடைபெறுவதுடன் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை, பிரதோஷம், கார்த்திகை சோமவாரம், அன்னாபிஷேகம், திருவாதிரை, சிவராத்திரி, தைப்பூச விழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.


தல வரலாறு:

இடங்கொண்டீஸ்வரர் முன்னொரு காலத்தில் இடை மருதூரில் இருந்ததாக வரலாறு கூறுகிறது. அக்காலத்தில் மத்யார்ஜுனமாகிய மகாலிங்க பரமேஸ்வரன், தனது மூத்தவரான ஆதி மத்யார்ஜுனத்திடம் அண்ணா! எனக்கு இடம் கொடுங்கள் என்று கேட்டவுடன், இடத்தை மத்யார்ஜுனனுக்குக் கொடுத்துவிட்டார். அன்று முதல் அவர் இடம் கொடுத்த ஈஸ்வரன் என்று பெயர் பெற்றார். அப்பர் பெருமானும், இடம் கொடுத்த அம்மானே எனப் பாடியுள்ளார். இத்தலம் வைப்புத்தலமாகவும் விளங்குகிறது!


திருக்கல்யாணபுரத்தில் காவிரி நதியின் வடபுரத்தில் தவசீலர்களில் ஒருவரான கச்சப முனிவர் கடும் தவம் புரிந்தார். தவத்தை அறிந்த பரமேஸ்வரன், அசரீரி வாக்காக முனிவரே! தாங்கள் எதற்காக, தவம் புரிகிறீர்கள்? எனக் கேட்டபோது எனக்கு இந்த காவிரி நதி தீரத்தில் ரிஷப வாகனத்தில் பார்வதி-பரமேஸ்வரன் தம்பதி சமேதராக காட்சியளிக்க வேண்டும்.. எனக் கேட்டார். அசரீரி வாக்கும் அப்படியே காட்சி அளிக்கின்றோம் எனக் கூற கச்சப முனிவரே எந்தக் காலகட்டத்தில் எனக்குக் காட்சி கிட்டும்? எனக் கேட்டார் அப்போது அசரீரி; நான் காட்சி கொடுக்கும் தருணத்தில் முன்னதாக காவிரி நதிக்கரையோரம் லிங்கங்கள் முளைக்கும் அதை வைத்து நான் வருவதாக உணர்ந்து கொள்ளவும்…….எனக்கூற அதற்காக முனிவரும் காத்திருந்தார்.


தை மாதம் பவுர்ணமி தினத்தன்று லிங்கங்கள் முளைக்க ஆரம்பித்தன. அப்போது ஆதிமத்யார்ஜுனமும், மத்யார்ஜுனமாகிய மகாலிங்கப் பெருமானும் தம்பதி சமேதராக ரிஷபவாகனத்தில் முனிவருக்குக் காட்சியளித்தனர். அந்தக் காட்சியை முனிவரும் கண்டு களித்தார். அதன் பின்னர் கச்சப முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க ஈசன் பிரஹத்சுந்தர குஜாம்பிகை அம்பாளோடு திருக்கல்யாணக் கோலத்தில் காட்சி தந்து அருளியதால் இவ்வூர் திருக்கல்யாணபுரம் எனப் பெயர் பெற்றது.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

தேவார வைப்புத்தலங்களில் இடங்கொண்டீஸ்வரர் மிகவும் முக்கியத்தலமாக கருதப்படுகிறது.

About the author

Leave a Reply

Your email address will not be published.