கீழ பத்தை அருள்மிகு குலசேகரநாதர் திருக்கோயில் – Kulasekhara Nathar Temple

அருள்மிகு குலசேகரநாதர் திருக்கோயில்


மூலவர்:

குலசேகரநாதர்


அம்மன்/தாயார்:

சுகந்த குந்தளாம்பிகை, ஆவுடைநாயகி


ஊர்:

கீழ பத்தை


மாவட்டம்:

திருநெல்வேலி


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

பிரதோஷம், சிவராத்திரி


தல சிறப்பு:

இங்குள்ள இரண்டு மூலவர்களில் ஒருவரான பள்ளத்துடையார் சுயம்புவாகத் தோன்றியவர் என்பது தலத்தின் சிறப்பு.


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு குலசேகரநாதர் திருக்கோயில் கீழ பத்தை, திருநெல்வேலி.


போன்:

+91 94866 43260, 98840 28541


பொது தகவல்:

இங்கு சண்டிகேஸ்வரர், பைரவர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்யர், தட்சிணாமூர்த்தி சன்னதிகள் உள்ளன. இங்குள்ள தட்சிணாமூர்த்தி விக்கிரகம் ஒன்றை கோடகநல்லூர் சுந்தர சுவாமிகளே பிரதிஷ்டை செய்துள்ளார்.


பிரார்த்தனை


பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறவும், நோய்கள் குணமாகவும் இங்கு வழிபாடு செய்கின்றனர்.


நேர்த்திக்கடன்:

சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.


தலபெருமை:

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்திலும், பச்சையாற்றின் கரையிலும் அமைந்துள்ள அழகான கிராமம்தான் பத்தை. மன்னர்கள் காலத்தில் முள்ளி நாட்டுச் சதுர்வேதி மங்கலம் என்று இந்த ஊர் அழைக்கப்பட்டு வந்ததாகக் கல்வெட்டுத் தகவல்கள் சொல்கின்றன. பத்தை கிராமத்துக்கே புகழ் சேர்க்கும் அளவில் இந்த குலசேகரநாதர் ஆலயம் உள்ளது. பத்தை ஆலயத்தில் இரு லிங்கத் திருமேனிகள் உண்டு. பிரதானமாக லிங்கத் திருமேனி குலசேகரநாதர், குலசேகரமுடையார் என்றும், பிரதானமான அம்மன் சுகந்த குந்தளாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறாள். கோயில் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. குலசேகரநாதருக்கு வட திசையில் – கொஞ்சம் பள்ளம் போன்ற இடத்தில் அருள் பாலித்து வரும் இன்னொரு லிங்க மூர்த்தி, சுயம்பு ஆகும். பள்ளத்துடையார் என்பது பொதுவான பெயர். இந்த லிங்கத் திருமேனிக்கு திருபுரஹரேஸ்வரர், ஆதிநாதர், தானெழுந்த நாயனார், பழையோன் ஆகிய திருநாமங்கள் உண்டு. இந்தக் கருவறைக்குத் தெற்கே நின்ற கோலத்தில் அருள் புரியும் அன்னை ஆவுடைநாயகி, கோமதி அம்மன், திரிபுரசுந்தரி ஆகிய திருநாமங்களில் அழைக்கப்படுகிறாள். இந்த சுயம்பு லிங்க மூர்த்தியை காமதேனு வழிபட்டதாக புராண வரலாறு கூறுகிறது. குலசேகரநாதருக்கு முன்பிருந்தே இந்த சுயம்பு மூர்த்தி அருள் புரிந்து வருவதால், ஆதி நாதர் என்கிற பெயர் இவருக்கு வந்தது. பத்தை கிராமத்திலும், இதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் உரிய பருவத்தில் மழை பெய்யாமல் போனால், பள்ளத்துடையார் சன்னதியில் நீர் நிரப்பி, அவருக்கு பூஜைகள் செய்து வழிபடுகிறார்கள் ஊர்மக்கள், அடுத்த ஓரிரு தினங்களுக்குள் மழை எப்படியும் கொட்டித் தீர்த்து விடுமாம். அப்படி ஒரு சக்தி பள்ளத்துடையாருக்கு உள்ளது.


தல வரலாறு:

பாண்டிய தேசத்தை ஆண்ட மன்னன் குலசேகரன் ஒரு முறை தன் படை வீரர்களுடன் காட்டுக்கு வேட்டையாடிப் புறப்பட்டான். பொதியமலையின் அடர்ந்த காட்டுக்குள் பயணித்துச் செல்கின்றபோது வழியில் ஓரிடத்தில் சில முனிவர்கள் பந்தல் அமைத்துக் கொண்டிருந்தனர். தாங்கள் செல்லும் வழியில் அந்தப் பந்தல் இருந்ததால், முனிவர்களைக் கூப்பிட்டு இதை அகற்றச் சொன்னார்கள் படை வீரர்கள், இங்கே மிகப் பெரிய வேள்வி நடத்தப்பட இருக்கிறது. அதனால்தான் இந்தப் பந்தல். இதை அகற்றினால் எங்களில் குருநாதர் கோபித்துக் கொள்வார் என்று சொன்னார்கள் முனிவர்கள். முனிவர்களின் முன்பு விவேகத்துடனும், அடக்கத்துடனும் செயல்பட மன்னனும் படை வீரர்களும் அங்கே மறந்து போனது துரதிர்ஷ்டம். விளைவு – கோபப்பட்ட வீரர்கள், அந்தக் பந்தலைப் பிரித்தெரியத் தொடங்கினர். முனிவர்களின் குரு ஸ்தானத்தில் இருந்த கனகமுனி என்பவர், ஆத்திரத்தில் முகம் சிவந்தார். ஒரு மன்னன் என்பவன் தன் நாட்டு மக்களையும் அந்தணர்களையும் நலமுடன் காத்து, இறை பக்தி தன் சாம்ராஜ்யத்தில் மேலோங்கச் செய்ய வேண்டும். இதுதான் அவனது கடமை, அப்படிப்பட்ட ஒரு மன்னனே, நாட்டின் நலம் காக்க நடத்தப்படும் வேள்விச் சாலையில் பந்தலைப் பிரித்தெரிவதா ? இதை விட கேவலம் ஏதும் இல்லை, தகாத செயலைச் செய்த நீ தீராத வயிற்று வலியால் இன்று முதல் அவஸ்தைப்படுவாய் என்று கடும் கோபத்துடன் சாபம் கொடுத்தார் கனகமுனி. குலசேகர மன்னன் சாபத்தைக் கேட்டுத் துடிதுடித்துப் போனான். தன் பிழை பொறுக்குமாறும், இதற்கு சாப விமோசனம் அருளுமாறும் கனகமுனி மற்றும் அங்கு கூடி இருந்த முனிவர்கள் அனைவரிடமும் வேண்டினான். இதை அடுத்து, மனம் இளகினார் முனிவர்கள். பிறகு, இதுவரை நீ எந்தெந்த இடங்களில் எல்லாம் வேட்டையாடி முனிவர்களுக்கும் காட்டு விலங்குகளுக்கும் தொந்தரவு கொடுத்தாயோ, அங்கெல்லாம் ஒரு சிவாலயம் எழுப்பி வழிபாடு நடத்து. இதன்படி செய்து வந்தால், உன் வயிற்று வலியும் படிப்படியாகக் குணமாகும் என்று விமோசனம் அருளினர் முனிவர்கள். இறை பக்தியுடன் குலசேகர பாண்டியனது பயணம் அங்கிருந்து ஆரம்பமானது. தான் வேட்டையாடி மிருகவதை செய்த இடங்களிலும், முனிவர்களை அலட்சியம் செய்த இடங்களிலும், படை வீரர்களுடன் தங்கினான். கோயில் கட்டினான். வழிபாடுகளைத் துவக்கி வைத்தான். இப்படிப் பயணித்துக் கொண்டே வந்தவன், கடைசியில் பத்தை என்கிற இந்த ஊருக்கு வந்து சேர்ந்தான். இங்கு காமதேனு வழிபாடு செய்த சுயம்பு லிங்கமூர்த்தத்தை பூஜித்தான். சாபமாகத் தான் பெற்ற நோயைப் போக்கி அருளுமாறு இந்த ஆதி நாதரிடம் பிரார்த்தித்தான்.


மன்னனின் பூஜையில் அகம் மகிழ்ந்து ஈசனும் உமையும் ஒரு நாள் குலசேகர மன்னனுக்குக் காட்சி தந்தனர். மன்னனின் தீராத வயிற்று வலி நோய் தீர அருளினார்கள். பிறகு, ஈசனிடம் மன்னன், தாங்கள் எனக்கு இங்கு திருக்காட்சி தந்ததை நினைவுபடுத்தும் வகையில் என் பெயர் தாங்கி, இங்கே என்றென்றும் அருள் வேண்டும். தங்களைத் தரிசிக்க வரும் பக்தர்களின் பிணிகளைத் தீர்த்தருள வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டான். அப்படியே ஆகட்டும் என்று ஈசனும் அருள… பின்னாளில் தனக்குக் காட்சி தந்த ஈசனை, விக்கிரகமாக வடித்து வைத்தானாம் குலசேகரன். அந்த லிங்கத் திருமேனியே, குலசேகரநாதர் என அழைக்கப்பட்டது. மன்னன் குலசேகரனுக்குத் தரிசனம் தரும் அவசரத்தில் தலையில் கிரீடம் எதுவும் அணியாமல், கேசத்தையே ஒரு கிரீடம் போல் சுற்றி அமைத்துக் கொண்டு கயிலாயத்தில் இருந்து தேவி வந்தாள். எனவே, தனக்குத் திருக்காட்சி தந்த தேவியின் திருவடிவத்தை நினைவுபடுத்தும் விதமாக மன்னன் வடித்த உமையின் வடிவம், சுகந்த குந்தளாம்பிகை என ஆனது. இந்த அம்பிகையின் தலையில் கிரீடம் இல்லை. கேசமே ஒரு கிரீடம் போல் காணப்படுகிறது. கோயில் கட்டியதோடு தன் பணிகளை நிறுத்திக் கொள்ளவில்லை குலசேகர மன்னன். தனது 15-ஆம் ஆட்சி ஆண்டில் இங்கு தேவாரம் தொடர்ந்து ஓதுவதற்குக் கட்டளை அமைத்தான். மேலும் அமுது படிக்காக நிலங்களை அவன் ஒதுக்கினான் என்றும் கல்வெட்டுகள் தகவல் சொல்கின்றன.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

இங்குள்ள இரண்டு மூலவர்களில் ஒருவரான பள்ளத்துடையார் சுயம்புவாகத் தோன்றியவர் என்பது தலத்தின் சிறப்பு.

About the author

Leave a Reply

Your email address will not be published.