எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோயில்,எஸ்.பெரியபாளையம் மிளகேஸ்வரர் கோயில்

மூலவர்:


சுக்ரீஸ்வரர், மிளகேஸ்வரர்


அம்மன்/தாயார்:

ஆவுடைய நாயகி


தல விருட்சம்:

வில்வமரம், மாமரம்


ஆகமம்/பூஜை :

காமீக விதி


புராண பெயர்:

முகுந்தாபுரிபட்டிணம்


ஊர்:

எஸ்.பெரியபாளையம்


மாவட்டம்:

திருப்பூர்


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

ஆனி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் கும்பாபிஷேக விழா நடத்தப்படுகிறது. ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை, 1008 திருவிளக்கு பூஜை; ஆவணியில் அன்னாபிஷேகம், புரட்டாசியில் நவராத்திரி விழா; கார்த்திகை தீபம், மார்கழி முப்பது நாளும் சிறப்பு வழிபாடு, ஆருத்ரா தரிசனம், சுமங்கலி நோன்பு இங்கு விசேஷமாக கொண்டாடப்படுகிறது. தை பவுர்ணமியில் சுப்ரமணியருக்கு தைப்பூச விழா; மாசி மாதம், பங்குனி உத்திரம்.


தல சிறப்பு:

கோயிலில் உள்ள சுக்ரீஸ்வரர் விக்ரகம், 31.5 அடி உயரம் கொண்டதாகும்; 28 ஆக விதிகளை கணக்கிட்டு, 28 அடி சிலை கருவறையில் புதைக்கப்பட்டு, 3.5 அடி சிலை வெளியே தெரியும் வகையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக கருத்து நிலவுகிறது.


திறக்கும் நேரம்:

காலை 7:

30 மணி முதல் 1:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை திறந்திருக்கும். (விசேஷ நாட்களில் மேற்கண்ட பூஜை முறையில் மாற்றம் இருக்கும்.)

முகவரி:

அருள்மிகு சுக்ரீஸ்வரர்/ மிளகேஸ்வரர் திருக்கோயில், ஊத்துக்குளி தாலூகா, (கூலிபாளையம் நால்ரோடு வழி), ஊத்துக்குளி ரோடு, எஸ்.பெரியபாளையம், திருப்பூர்- 641 607.


போன்:

+91 94423 73455


பொது தகவல்:

தெற்கு பார்த்த நுழைவு வாயில் கொண்டது கோயில்; கன்னிமூல விநாயகர், சுக்ரீஸ்வரர் (அக்னி லிங்கம்), வாயு (காளஹஸ்தி) லிங்கம், நிலம் மற்றும் ஆகாய லிங்கம் கிழக்கு பார்த்து வீற்றிருக்கிறது; ஆவுடையநாயகி, சுப்ரமணியரும் கிழக்கு பார்த்தே உள்ளனர். தட்சணாமூர்த்தி தெற்கு பார்த்தும், சூரியன் மேற்கு பார்த்தும், பத்ரகாளியம்மன் கிழக்கு பார்த்தும், சண்டிகேஸ்வரர், காலபைரவர் தெற்கு பார்த்தும் காட்சியளிக்கின்றனர். வில்வமரத்துக்கு அடியில் நீர்லிங்கம் இருப்பதாக நம்பப்படுகிறது. சுக்ரீஸ்வரர் கிழக்கு நோக்கி இருந்தாலும், வாயில் தெற்கு நோக்கியே உள்ளது; தற்காலிகமாக, தொல்பொருள் துறையிடம் அனுமதி பெற்று, கிழக்கு வாசல் ஏற்படுத்தியுள்ளனர். அங்கு, படிக்கட்டுகள் இல்லை. தற்காலிகமாக, இரும்பு படிக்கட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.


பிரார்த்தனை


கோயிலுக்கு வந்து, மனதில் நினைக்கும் காரியத்தை நிறைவேற்றிக் கொடுப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.


நேர்த்திக்கடன்:

உடலில் வரும் மருகு மறைய உப்பு, மிளகு வைத்து வழிபாட்டால் குணமாகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. சிவனை வழிபாடு செய்யும் போது உப்பு, மிளகு வைத்து பலரும் வழிபடுகின்றனர். வேண்டிய வரத்தை வாரிக்கொடுப்பதால், வாரி வழங்கும் வள்ளல் என பக்தர்களால் சுக்ரீஸ்வரர் போற்றப்படுகிறார்.


தலபெருமை:

கருவறைக்கு நேர் எதிரே, மகா மண்டபத்தில் சூரிய ஒளி இறைவன் மேல் விழுவதற்கேற்ப, மூன்று துவாரங்கள் இருந்துள்ளது. தை மாதத்தின் முதல் மூன்று நாட்கள், சுவாமி சிலையின் நெற்றில் சரியாக சூரிய ஓளி விழும் அற்புதம் நடந்து வந்தது. கோயில் பாதுகாப்பு நலன்கருதி, தற்போது துவாரங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டுவிட்டன. கருவறைக்கு அடுத்துள்ள மகா மண்டபத்தில் ஆஞ்சநேயர், சனீஸ்வரர் அருகருகே வீற்றிருக்கின்றனர்.


நவக்கிரகத்தில் ஈஸ்வர பட்டத்தை பெற்றவர் சனீஸ்வரர்; இவர், இங்கு சிவனை நோக்கி தவக்கோலத்தில் வீற்றிருக்கிறார். கோயிலில் உள்ள நந்தி, அருகில் உள்ள தோட்டத்துக்கு சென்று தானியங்களை தினமும் மேய்ந்து விட்டு திரும்பியுள்ளது. தொடர்ந்து கண்காணித்த தோட்டக்காரர் ஒரு நாள் கோபத்தில், கதிர் அறுக்கும் அரிவாளை எடுத்து வீசியுள்ளார்; இது பசுவின் காதை அறுத்துள்ளது. சிவ பக்தரான தோட்டத்துக்காரர் சுக்ரீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்ய வந்துள்ளார்; கோயிலில் இருந்த நந்தி காதில் (கல்சிலையில்) ரத்தம் வடிந்து கொண்டிருந்ததை பார்த்துள்ளார்.


செய்த தவறை உணர்ந்த பக்தர், மீண்டும் நந்தி சிலை ஒன்றை செய்து, ஏற்கனவே இருந்த நந்தியை அகற்றி விட்டு, புதிய நந்தியை வைத்துள்ளார்; ஆனால், மறுநாள் கோயிலுக்கு வந்து பார்த்த போது, அகற்றிய நந்தி மீண்டும் அதே இடத்துக்கு வந்துள்ளது; இன்றும் கோயிலில் பக்தர் வைத்த நந்தி பின்னாளிலும், ஆதிகாலத்துக்கு நந்தி முன்புறத்திலும் உள்ளது; பழமையான நந்தி காது அறுபட்ட நிலையிலேயே காணப்படுகிறது. அரசர் காலத்துக்கு முற்பட்டதாக கோயில் கோபுரம் என்பதற்கான சான்றுகள் இல்லை; ஆனால், நான்கு புறத்திலும் சிவன் அமர்ந்த நிலையில் முழுஉருவமாக வீற்றிருக்கிறார். சிவனுக்கு மேல், சிவபெருமானின் சிரசு இருப்பது போன்ற அமைப்புடன் கோபுர விமானம் அமைக்கப்பட்டுள்ளது.


தல வரலாறு:

பாசிப்பயறுகளை கோயில் வழியாக கொண்டு சென்ற வணிகர் ஒருவரிடம், உன் வண்டியில் என்ன கொண்டு செல்கிறாய் என்று மாறுவேடத்தில் வந்திருந்த சிவபெருமான் கேட்டுள்ளார். இவரிடம் ஏன் கூற வேண்டும் என மறைக்க நினைத்த வணிகர், அனைத்தும் மிளகு என கூறியுள்ளார். பொய் கூறியதால், வண்டி மூட்டையில் இருந்த, 100 பயறு மூட்டையும் மிளகாக மாற்றிவிட்டார்; சிவன்; விற்பனைக்கு கொண்டு சென்ற போது அதிர்ச்சியடைந்த வியாபாரி, ஏன்? இப்படி நடந்தது என வியந்து, யோசித்துள்ளார். வழியில் ஒருவர் கேட்டாரோ என நினைத்த போது, கண்முன் தோன்றிய சிவன் தான் தான் கேட்டது என கூறியுள்ளார். மீண்டும் என் கோயிலுக்கு வந்து நீ மிளகு வைத்து பூஜிக்க வேண்டும் என கூறியுள்ளார்.


இடம் தெரியாது என வியாபாரி மறுக்க, நீ வந்த வழியில் வாகனத்தை திருப்பு, வண்டி மாடு வந்து நிற்குமிடம், என் ஆலயம் என சிவபெருமான் கூறியுள்ளார். கோயிலுக்கு வந்த வியாபாரி, மிளகு வைத்து வழிபட்டவுடன், வண்டியில் இருந்த மிளகு, பாசிப்பயறாக மாறி விட்டது. 2,000 ஆண்டுகளுக்கு முன் கோயில் உருவானதாக கூறப்படுகிறது; இதற்கு முன் இது போன்ற அமைப்புடன் கோயில் இருந்ததாகவும், அக்கோயில் பல நூற்றாண்டுக்கு முன் 20 அடி வரை நிலத்தில் இறங்கி விட்டதாக நம்பப்படுகிறது. அன்றைய அரசாங்கத்தால் (சர்க்காரால்) வழங்கப்பட்ட இடம் என்பதால், சர்க்கார் பெரியபாளையம் என அழைக்கப்படுகிறது. இதன் அருகில் அக்ரஹார பெரியபாளையம் உள்ளது. கோயில் கருவறையை அடுத்துள்ள அர்த்த மண்டபத்தில், மிகப்பெரிய சுரங்கம் ஒன்று இருந்துள்ளது; கோயிலில் இருந்து வெளியேற வசதியுடன் இருந்துள்ளது. பின்னாளில் அவை மூடப்பட்டு விட்டது. வியக்க தகுந்த கோபுர அமைப்பு மற்றும் கல்வெட்டுகள் உள்ளதால், கடந்த 1956 ம் ஆண்டு, இக்கோயிலை மத்திய அரசின் கலாச்சார அமைப்புடன் இணைந்த தொல்பொருள் ஆராய்ச்சித்துறை கையகப்படுத்தி, பராமரிப்பு செய்து வருகிறது.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

கோயிலில் உள்ள சுக்ரீஸ்வரர் விக்ரகம், 31.5 அடி உயரம் கொண்டதாகும்; 28 ஆக விதிகளை கணக்கிட்டு, 28 அடி சிலை கருவறையில் புதைக்கப்பட்டு, 3.5 அடி சிலை வெளியே தெரியும் வகையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக கருத்து நிலவுகிறது.

About the author

Leave a Reply

Your email address will not be published.