செப்பறை அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயில் – Nellayappar (Chepparai Natarajar) Temple

அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயில்


மூலவர்:

நெல்லையப்பர்


உற்சவர்:

நடராஜர்


அம்மன்/தாயார்:

காந்திமதி


ஊர்:

செப்பறை


மாவட்டம்:

திருநெல்வேலி


மாநிலம்:

தமிழ்நாடு


பாடியவர்கள்:


திருவிழா:

மகாசிவராத்திரி


தல சிறப்பு:

இதில் செப்பறை கோயில் சிலையே உலகின் முதல் நடராஜர் சிலையாக கருதப்படுகிறது.


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு நெல்லையப்பர் (செப்பறை நடராஜர்) திருக்கோயில், செப்பறை-627 006, திருநெல்வேலி மாவட்டம்.


போன்:

+91-4622-339 910, 88707 20217,94866 47493


பொது தகவல்:

சிதம்பரம் நடராஜர் சிலை எப்படி இருக்கிறதோ, அதற்கு சற்றும் மாறாமல் நான்கு சிலைகள் அக்காலத்தில் வடிவமைக்கப்பட்டன. அந்த சிலைகளை காண வேண்டுமானால், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செப்பறை, கரிசூழ்ந்தமங்கலம், கருவேலங்குளம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கட்டாரிமங்கலம் கோயில்களுக்கு செல்ல வேண்டும்.


பிரார்த்தனை


திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.


நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும் வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக் கடன் நிறைவேற்றலாம்


தலபெருமை:

வீரபாண்டியன் என்ற மன்னன் ராமபாண்டியனின் எல்கைக்குட்பட்ட சிற்றரசன். செப்பறையில் இருந்த நடராஜர் சிலையை அவன் கண்டான்.அதேபோல தனக்கும் இரண்டு சிலைகள் வேண்டும் என ஸ்தபதியிடம் கூறினான். சிலை செய்யும் பணி துவங்கியது. இதில் ஒன்றை கட்டாரிமங்கலத்தில் உள்ள கோயிலிலும், மற்றொன்றை கரிசூழ்ந்தமங்கலம் கோயிலிலும் வைக்க எண்ணினான். சிலை செய்யும் பணி முடிந்தது. சிலைகளின் அழகைக் கண்டு மன்னன் ஆனந்தம் கொண்டான்.இதே போல சிலைகள் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற எண்ணத்தில் ஸ்தபதியை கொன்றுவிடும்படி காவலாளிகளுக்கு கட்டளையிட்டான். வீரர்கள் ஸ்பதியின் மீது இரக்கம் கொண்டு அவரது கையை மட்டும் வெட்டிவிட்டனர். இதைக் கேள்விப்பட்ட ராமபாண்டியன், வீரபாண்டியன் மீது கோபம் கொண்டான். ஸ்தபதியின் கையை வெட்டிய வீரபாண்டியனின் கைகளை துண்டித்தான். இவ்வாறு செய்யப்பட்ட இரண்டு சிலைகளும் கட்டாரிமங்கலம் மற்றும் கரிசூழ்ந்தமங்கலத்தில் உள்ள சிவாலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.இதன் பிறகு ஸ்தபதிக்கு மரக்கை பொருத்தப்பட்டது. கலையார்வம் மிக்க ஸ்தபதி, மரக்கைகளின் உதவியுடன், முன்னை விட அழகாக மற்றொரு சிலை செய்தார்.அந்தச்சிலையின் அழகைப் பார்த்து அதன் கன்னத்தில் கிள்ளினான். அவ்வாறு கிள்ளிய வடுவுடன் கூடிய சிலை கருவேலங்குளம் கோயிலில் வைக்கப்பட்டது.


முதல் நடராஜர்:

சிதம்பரம் நடராஜருக்கு சோழநாட்டு சிற்பியான நமச்சிவாயமுத்து ஸ்தபதி சிலை செய்தார். அவ்வூரை ஆண்ட சிங்கவர்மன் என்ற மன்னன் அச்சிலையைக் கண்டு வியப்படைந்தான். அது தாமிர சிலையாக இருந்தது. இதே சிலையை தங்கத்தில் வடித்தால் மிகவும் சிறப்பாக இருக்குமே என எண்ணியவன், முதலில் செய்த சிலையை பிரதிஷ்டை செய்யாமல் தங்கத்தால் சிலை செய்ய உத்தரவிட்டான். ஆனால், அந்த சிலையும் தாமிரமாகவே மாறிவிட்டது.சிவன் அவன் கனவில் தோன்றி, “”நான் உன் கண்ணுக்கு மட்டுமே தங்கமாக தெரிவேன். மற்றவர்கள் கண்ணுக்கு தாமிர மாகவே தெரிவேன். இதுவே என் விருப்பம்!’ எனக்கூறி மறைந்தார். எனவே, இரண்டாவது செய்த சிலையையே சிங்கவர்மன் சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்தான். முதலில் செய்த சிலையை இறைவனின் கட்டளைப்படி சிற்பி ஒருவனிடம் கொடுத்துவிட்டான். அவனது கனவில் தோன்றிய சிவன், “”இந்தச் சிலையை சுமந்துகொண்டு தெற்கு நோக்கிச் செல்,’ எனக்கூறி மறைந்தார். அந்த சிலையே இந்தக் கோயிலில் உள்ளது. இதன்படி முதன்முதலாக செய்யப்பட்ட நடராஜர் சிலை செப்பறைக்கு வந்து சேர்ந்தது குறிப்பிடத் தக்கது. இங்கு திருவாதிரைத் திருவிழா மிக விசேஷமாக நடக்கும்.


தல வரலாறு:

தாமிரபரணியின் வடகரையில் ராஜவல்லிபுரம் கிராமம் உள்ளது. இவ்வூரிலேயே மன்னர் ராமபாண்டியனின் அரண்மனை இருந்தது. இவர் தினமும் திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் கோயிலுக்கு சென்று வழிபட்ட பிறகே சாப்பிடுவார். ஒருமுறை தாமிரபரணியில் பெரும் வெள்ளம் வந்துவிட்டதால் அவரால் ஆற்றைக் கடக்க முடியவில்லை. அன்று முழுவதும் ராமபாண்டியன் பட்டினியாக இருந்தார். அன்று இரவில் மன்னர் கனவில் நெல்லையப்பர் தோன்றி, “”இனிமேல் உன் மாளிகையின் அருகிலேயே நான் கோயில் கொள்ள முடிவு செய்துள்ளேன். சிதம்பரத்திலிருந்து ஒருவன் எனது நடனமாடும் வடிவுடைய விக்ரகத்துடன் வருவான். அந்த விக்ரகத்தை உன் மாளிகையின் அருகில் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டு. கோயில் கட்டுமிடத்தின் அருகிலுள்ள குழிக்குள் எறும்புகள் ஊர்ந்துசெல்லும். அந்த இடத்தில் லிங்கம் ஒன்றையும் பிரதிஷ்டை செய்துவிடு,’ என கூறி மறைந்தார்.


அதன்படியே, சிற்பி ஒருவர் நடராஜரின் விக்ரகம் ஒன்றை சுமந்து வந்தார். வழியில் ஓரிடத்தில் சிலை கனத்தது. அதற்கு மேல் அவரால் சிலையை சுமக்க முடியவில்லை. சிலையை அவர் செப்பறை என்ற இடத்தில் வைத்துவிட்டு, களைப்பினால் தூங்கி விட்டார். கண்விழித்து பார்த்தபோது சிலையை காணவில்லை. அவர் பதைபதைத்து மன்னனிடம் முறையிட்டார். ராமபாண்டியன் அதிர்ச்சி யடைந்து சிலையை தேடிச்சென்றார். வேணுவனத்தில் ஓரிடத்தில் சலங்கை ஒலியும், யாரோ நடனமாடும் சப்தமும் கேட்டது. அந்த இடத்தில் மன்னர் சென்று பார்த்தபோது, நடராஜரின் சிலை இருந்ததைக் கண்டார். அதன் பக்கத்திலேயே ஒரு குழியில் எறும்புகள் ஊர்ந்து சென்று மறைந்து கொண்டிருந்தன. ராமபாண்டியன் மகிழ்வடைந்து லிங்கம் ஒன்றை எறும்புகள் ஊர்ந்த குழியின் மீது பிரதிஷ்டை செய்தார். நடராஜருக்கும் தனி சன்னதி அமைத்தார். அவர் கட்டிய கோயில் வெள்ளத்தால் அழிந்துவிட்டது. அதன்பிறகு ஆரை அழகப்ப முதலியார் என்பவர் இப்போதுள்ள கோயிலைக் கட்டினார்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவரான “வேண்ட வளர்ந்தநாதர்’ சுயம்புமூர்த்தியாக முக்கிய சன்னதியில் இருக்கிறார். இவரே “நெல்லையப்பர்’ எனப்படுகிறார். இந்த லிங்கத்தின் மத்தியில் அம்பிகையின் உருவம் தெரிகிறது. இதை அபிஷேகத்தின் போது காணலாம்.

About the author

Leave a Reply

Your email address will not be published.