தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் – Tenkasi Kasi Viswanathar Temple

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்


மூலவர்:

விஸ்வநாதர்


அம்மன்/தாயார்:

உலகம்மன்


தல விருட்சம்:

செண்பகமரம்


தீர்த்தம்:

காசி தீர்த்தம்


ஊர்:

தென்காசி


மாவட்டம்:

திருநெல்வேலி


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

மாசிமகப் பெருந்திருவிழா 10 நாள் சிறப்பாக கொண்டாடப்படும். புரட்டாசி நவராத்திரி கொலு திருவிழாவும், ஐப்பசி திருக்கல்யாணமும்,ஆவணி மூல தெப்பத்திருவிழாவும், தை அமாவாசை பத்திர தீப திருவிழாவும் முக்கியமானதாகும்.


தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், இத்தலத்து இறைவனை வணங்கினால் வடகாசியில் உள்ள இறைவனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும். கோயில் மூலவரான காசி விஸ்வநாதரை ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருந்தே பார்க்கலாம். அந்த அளவிற்கு சுவாமி சன்னதி அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மற்ற தலங்களில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் துர்க்கை இத்தலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் தென்காசி – 627 811, திருநெல்வேலி மாவட்டம்.


போன்:

+91-4633-222 373


பொது தகவல்:

நாரதர், அகத்தியர், இந்திரன், மிருகண்டு முனிவர், வாலி, நந்தி ஆகியோர் இங்குள்ள காசி விஸ்வநாதரை வழிபட்டுள்ளார்கள்.


பிரார்த்தனை


இத்தலத்து இறைவனை வணங்கினால் வடகாசியில் உள்ள இறைவனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தல இறைவனை வழிபட்டால் மன நிம்மதி உண்டாகும்.


நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.


தலபெருமை:

1967 வரை இங்குள்ள கோபுரம் மொட்டைக்கோபுரமாக இருந்தது. அதன் பின் 1990ல் 180 அடி உயரத்தில் மிகப் பெரிய ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு அழகிய தோற்றத்துடன் தற்போது இக்கோயில் திகழ்கிறது. இந்த கோபுரத்தின் ஒன்பது நிலைகளிலிருந்தும் தென்காசியின் இயற்கை அழகை பார்க்க அகலமான பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப்பாதையில் நடந்து சென்றால் வான் வெளியில் வலம் வருவது போல் இருக்கும். கோபுரத்தின் 9வது நிலையில் இருந்தபடியே கோபுரத்தை சுற்றி வரும் பால்கனி வசதி உள்ளது.


மூர்த்தி, தலம், தீர்த்தம் :

கோயில் மூலவராக காசிவிஸ்வநாதரும், உலகம்மனும் அருள்பாலிக்கிறார்கள். தலவிருட்சமாக செண்பகமரமும், தீர்த்தமாக காசி தீர்த்தமும் அமைந்துள்ளது.


கலை சிற்பங்கள் :

இக்கோயிலில் உள்ள சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை. இங்குள்ள இரட்டைச்சிற்பங்களான வீரபத்திரர்கள் – தாண்டவ மூர்த்திகள். இரண்டு தமிழணங்குகளும், இணைச் சிற்பங்களான ரதி – மன்மதன் சிற்பங்களும், தனியழகு சிற்பங்களான திருமால் -காளிதேவி ஆகியவையும் உள்ளத்தை கொள்ளை கொள்ளும்.


கோபுர தரிசனம் கோடி பாப விமோசனம் என்பார்கள். அப்படிப்பட்ட கோபுரங்களுக்காகவே தனிச் சிறப்பு பெற்ற தமிழகத் தலங்கள் பல உள்ளன. அவற்றுள் ஒன்று உலகம்மை உடன் காசிவிஸ்வநாதர் உறையும் தென்காசி திருத்தலம், தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலின் ஒன்பது நிலை ராஜகோபுரத்திற்கு எதிரே உள்ள அகன்ற வெளித்திடல் கோபுரத்தின் கம்பீரத்தை மேலும் அதிகப்படுத்துகிறது. கோயிலிற்கும் கோபுரத்திற்கும் இடையில் பரந்த வெளிப் பரப்பு பொதிகை மலையிலிருந்து ஆரியங்காவு கணவாய் வழியாக வரும் காற்று கோயிலிற்குள் நுழையும் பக்தர்களை வரவேற்பது போல், மேற்கில் இருந்து கிழக்காக வீசுகிறது. கோயிலை நோக்கிச் செல்லும்போது, காற்று இல்லாமலேயே காற்று சுழன்று வீசுவது போல் ஓர் அனுபவம் ஏற்படுகிறது.


இன்று 178 அடியில் நெடிய உயரத்தோடு பஞ்ச வண்ணங்கள் தீட்டப்பட்டு, 800 சிலைகள் வடிக்கப்பட்டு பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தும் இந்தக் கோபுரம், ஒரு காலத்தில் சிதைந்த நிலையில் இருந்தது என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. 1457 இல் பராக்கிரம பாண்டியனால் கட்ட ஆரம்பிக்கப்பட்ட கோபுரம் 1518 இல் அழகன் குலசேகரனால் கட்டி முடிக்கப்பெற்றது. கி.பி. 1792 க்குப் பின்னரும், கி.பி. 1824 க்கு முன்னரும் உள்ள இடைப்பட்ட காலத்தில் பாளையக்காரர்களுக்குள் ஏற்பட்ட பகையாலும், வெள்ளையர்களின் சூழ்ச்சியாலும், உட்பகையாலும் ஆவணங்களை அழிப்பதற்காக வைக்கப்பெற்ற நெருப்பு, கோபுரத்தையும் அழித்துவிட்டது. கோபுரத்தை இடியும், மின்னலும் தாக்கியதால் அழிந்தது என்பது தவறான செய்தியாகும். பல ஆண்டுகளுக்குப் பிறகு கோபுரத்தைக் கட்ட பலர் முன்வந்தர்கள். இப்பணிகள் பல லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு, புதிய ராஜகோபுரம் கட்டப்பட்டு 1990 ஆம் ஆண்டு குடமுழுக்கு நிகழ்ந்தது.


தென்காசி இறைவன், காசிவிசுவநாதர்; இறைவி, உலகம்மை; செண்பக மரமும், பலா மரமும் தல விருட்சங்கள் இத்தலம் கண்ணைக் கவரும் சிற்பங்களைக் கொண்டது இரட்டைச் சிற்பங்களான இரண்டு வீரபத்திரர்கள், இரண்டு தாண்டவ மூர்த்திகள், இரண்டு தமிழணங்குகள், மன்மதன் ரதிதேவி ஆகியவை தனியழகுச் சிற்பங்கள். ஆவணி மூலத் திருவிழா, ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா, மாசிமகப் பெருந்திருவிழா ஆகியவை சிறப்பான திருவிழாக்கள் ஒன்பது நீராழி மண்டபத்துடன் உள்ள தெப்பத்தில் ஆவணி மாதம் தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெறும். வடகாசியில் இறந்தால்தான் முக்தி; ஆனால் தென்காசியைக் கண்டாலே முக்திதான்.


தல வரலாறு:

சுமார் எழுநூறு வருடங்களுக்கு முன்பு பராக்கிரம பாண்டியன் சிவ பெருமானை வழிபட காசிக்கு செல்வதையே வழக்கமாக கொண்டிருந்தான். ஒருநாள் மன்னன் கனவில் தோன்றிய இறைவன், வடக்கே உள்ள காசிக்கு வருதற்கு பதிலாக இவ்விடத்திலேயே தட்சிண(தென்) காசியில் கோயில் அமைத்து வழிபடும்படி கூறினார். அதாவது எறும்பு ஊர்ந்து செல்லும் வழியாக சென்று அது எங்கு முடிகிறதோ அங்கு கோயில் கட்டும் படி இறைவன் கூறுகிறார். அதன்படி மன்னனும் எறும்பு சென்ற வழியே சென்ற போது, அது சிற்றாற்றங்கரையில் செண்பக வனத்திற்கு வந்து சேர்ந்தது. அந்த இடத்தில் புற்றில் சுயம்புலிங்கம் கண்டு கோயில் கட்டி வழிபட்டான்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

About the author

Leave a Reply

Your email address will not be published.