ஊத்துக்கோட்டை அருள்மிகு பாபஹரேஸ்வரர் திருக்கோயில் – Papahareswarar Temple

அருள்மிகு பாபஹரேஸ்வரர் திருக்கோயில்


மூலவர்:

பாபஹரேஸ்வரர்


அம்மன்/தாயார்:

மரகதாம்பிகை


ஊர்:

ஊத்துக்கோட்டை


மாவட்டம்:

திருவள்ளூர்


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை தீபம்.


தல சிறப்பு:

மூலவரின் அருகிலேயே காசியில் கிடைத்த உள்ளங்கை அளவிலான பாணலிங்கம் இருப்பது சிறப்பு.


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு பாபஹரேஸ்வரர் கோயில் ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் மாவட்டம்.


பொது தகவல்:

இங்கு விநாயகர், தட்சிணாமூர்த்தி, பால தண்டாயுதபாணி, ஆறுமுகர், துர்கை ஆகிய சன்னதிகள் உள்ளன.


பிரார்த்தனை


பக்தர்கள் தங்களது பாவங்களையும் தோஷங்களையும் நீக்குவதற்கு இங்குள்ள பாபஹரேஸ்வரரை வேண்டுகின்றனர்.


நேர்த்திக்கடன்:

இங்குள்ள சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.


தலபெருமை:

வேங்கி தேசத்தின் ஒரு பகுதியாகத் திகழ்ந்தது சந்திரகிரி. இங்கே, ஊத்துக்காடு எனும் கோட்டம் இருந்தது. இந்த ஊத்துக்காடு எல்லைக்குள், வடதில்லை எனும் கிராமத்தைத் தோற்றுவித்த மன்னன், அங்கேதான் எம்பார் சுவாமிகளுக்காக அழகிய சிவாலயத்தை எழுப்பினான். தில்லையம்பதி எனப்படும் சிதம்பரம் திருத்தலத்துக்கு இணையாக இந்த வடதில்லைத் தலமும் போற்றப்பட வேண்டும் எனும் நோக்கத்துடன், கோயிலுக்கு நிலங்களையும் நிவந்தங்களையும் வாரி வழங்கினான் மன்னன். நந்தியாறு எனும் ஆரணி ஆற்றங்கரையில் அமைந்த இந்தக் கோயில்- காசிக்கு நிகரான தலமாகவும், ஆரணி ஆறு-கங்கைக்கு இணையான தீர்த்தமாகவும் போற்றப்பட்டது. ஆற்றில் நீராடி, இறைவனைத் தொழுதால் , பாவங்கள் யாவும் தொலையும்; தோஷங்கள் அனைத்தும் கழியும் என்பது ஐதீகம் ! எனவே, இங்கேயுள்ள சிவலிங்கத் திருமேனிக்கு பாபஹரேஸ்வரர் என்றே திருநாமம் அமைந்ததாகச் சொல்கின்றனர் மக்கள். மூலவருக்கு அருகிலேயே, கருவறையில் உள்ளங்கை லிங்கம் கொணர்ந்த நாயனாருக்குக் கிடைத்த லிங்கத் திருமேனியும் உள்ளது.


தல வரலாறு:

காசியம்பதியில், ஓர் அதிகாலைப் பொழுது ! கங்கையில் முங்கி எழுந்தவரின் கைகளில் ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. என்ன என்று அதிர்ச்சியும் குழப்பமுமாக கைகளால் துழாவி, அதனை அப்படியே வெளியில் எடுத்தவர், ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் திளைத்து நின்றார். அது, பாணலிங்கம். உள்ளங்கை அளவே இருந்த அந்த லிங்கத்தைக் கண்ணில் ஒற்றிக்கொண்டார்; சிரசில் வைத்துக் கொண்டார்; நெஞ்சில் வைத்துக் கொண்டாடினார்; இரண்டு உள்ளங்கைகளுக்கு நடுவில் வைத்து, சிட்டுக்குருவியை ஏந்துவது போல் ஏந்திக் கூத்தாடினார். அவர் பெயர் கோவிந்தன். உள்ளங்கை அளவிலான சிவலிங்கத் திருமேனியைக் கண்டெடுத்ததால், உள்ளங்கை லிங்கம் கொணர்ந்த நாயனார். எனப் போற்றப்பட்டார் அவர் ! உடையவர் எனப் போற்றப்படும் ராமானுஜருக்குச் சகோதர உறவு, இந்தக் கோவிந்தன். இவர், திடீரென சைவத்துக்கு மாறினார். காசிக்குச் சென்று, கங்கையில் நீராடி, விஸ்வநாதரைத் தரிசித்து, பாண லிங்கமும் கையில் கிடைக்க… அகம் மகிழ்ந்தார்; பூரித்தார். அவர் அந்தப் பாணலிங்கத்தை காளஹஸ்தி கோயிலில் வைத்து, பூஜித்ததாகச் சொல்வர். காலங்கள் ஓடின. கோவிந்தன் திரும்பவும் தன்னை வைஷ்ணவ சம்பிரதாயத்தில் இணைத்துக் கொண்டார். ராமானுஜர், கோவிந்தனைத் தனது சிஷ்யர்களுள் ஒருவராக ஆக்கிக் கொண்டார். எம்பார் எனும் திருநாமத்தையும் சூட்டி, அவருக்கு உபதேசித்து அருளினார். அன்று முதல், எம்பார் சுவாமிகள் என அவர் போற்றப்பட்டார். எம்பார் என்கிற கோவிந்தனுக்காக, ராமானுஜரின் உத்தரவுப்படி, சந்திரகிரி அரசர் கட்டித்தேவன் யாதவராயன் என்பவன், இந்த அழகிய சிவாலயம் ஒன்றை எழுப்பினான் என்கிறது ஸ்தல வரலாறு.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

மூலவரின் அருகிலேயே காசியில் கிடைத்த உள்ளங்கை அளவிலான பாணலிங்கம் இருப்பது சிறப்பு.

About the author

Leave a Reply

Your email address will not be published.