அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்
மூலவர்:
காசி விஸ்வநாதர்
அம்மன்/தாயார்:
விசாலாட்சி
தீர்த்தம்:
குப்த கங்கை தீர்த்தம்
ஊர்:
அச்சுதமங்கலம்
மாவட்டம்:
திருவாரூர்
மாநிலம்:
தமிழ்நாடு
திருவிழா:
பிரதோஷம், சிவராத்திரி
தல சிறப்பு:
பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட அற்புதமான திருத்தலம் இது.
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் அச்சுதமங்கலம் திருவாரூர்.
பொது தகவல்:
இந்த ஊரிலேயே தர்மர் வழிபட்ட தர்மேஸ்வரர் கோயிலும் உள்ளது.
பிரார்த்தனை
பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற, பூர்வ ஜென்ம பாபங்கள் விலக, புண்ணியம் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி தங்கள் நேர்த்திகடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட அற்புதமான திருத்தலம் இது. தருமர் தவமிருந்து, சிவனாரைத் தொழுத சிலிர்ப்பான இடம். தேசத்தை இழந்து, சபையின் முன்னே எல்லோராலும் அவமானப்படுத்தப்பட்டு வனாந்திரத்தில் வசித்த காலத்தில், இங்கே வந்து சில காலம் தவமிருந்தனர் தரும சகோதரர்கள். தருமர் தலைமையில் பாண்டவ சகோதரர்கள் வழிபட்ட சிவனாருக்கு இங்கே தனியே கோயில் உள்ளது. அந்த சுவாமியின் திருநாமம் தர்மேஸ்வரர். அர்ஜுனன் தங்கியிருந்ததை நினைவுபடுத்தும் வகையில், அர்ஜுனன் மங்கலம் என இந்த ஊர் அழைக்கப்பட்டு, பிறகு அதுவே அச்சுதமங்கலம் என மருவியது.
தல வரலாறு:
உண்மைக்கு உதாரணமாக விளங்கிய அரிச்சந்திர மகாராஜா, சத்தியத்தைக் கடைசி வரை கைவிடவே இல்லை. சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காக நாடு, நகரம், அரண்மனை, மனைவி, மக்கள் என அனைத்தையும் இழந்தார். அனைத்தையும் இழந்து ஊர்ஊராகச் சுற்றிக் கொண்டிருந்தார். இப்படியாக சுற்றிக் கொண்டிருக்கும் போது இலுப்பை மரங்கள் நிறைந்த அழகான வனப்பகுதியைக் கண்டு தன் மனதை பறிகொடுத்தார். அந்த இடத்தில் சில நாட்கள் தங்கி, அங்கேயிருந்த சிவலிங்கத் திருமேனியை வணங்கித் தொழுதார். சிவலிங்கத்துக்கு தினமும் அபிஷேகம் செய்தார். வில்வம் சார்த்தினார். கண்கள் மூடி, இடைவிடாது கடும் தவம் இருந்தார். இது மிகச் சாந்நித்தியமான சிவலிங்கம் என்று உள்ளுணர்வு சொல்கிறதே.. என யோசித்தார். இந்த லிங்கத் திருமேனி, காசியில் இருந்து எடுத்து வந்ததாக இருக்கவேண்டும். கங்கை நீரில் தினமும் நீராடிய லிங்கம் இது. இந்த காசி சிவலிங்கத்தை பூஜித்தால், பூர்வ ஜென்ம பாபங்கள் அனைத்தும் போய்விடும். நாம் செய்த புண்ணியங்களின் பலன்கள் கிடைத்துவிடும் என அறிந்து மெய்சிலிர்த்தார் அரிச்சந்திரன். ஏற்கெனவே, அருகில் உள்ள வனத்தில் வழிபட்டதால் நல்ல அதிர்வுகள் உள்ளே தோன்றியிருப்பதாக உணர்ந்திருந்தார் அவர். அந்தத் திருத்தலம், மிக உன்னதமான இடம். அங்கேயுள்ள குப்த கங்கை தீர்த்தம் ரொம்பவே விசேஷம்! அதேபோல் இந்தத் தலமும் இங்கேயுள்ள தீர்த்தமும் சிறப்பானது என உணர்ந்தார் அரிச்சந்திரன்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:
பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட அற்புதமான திருத்தலம் இது.