அச்சுதம்பேட்டை நெறிபுரீஸ்வரர் கோயில்

மூலவர்:


நெறிபுரீஸ்வரர்


அம்மன்/தாயார்:

தர்மாம்பிகை


தல விருட்சம்:

மா


தீர்த்தம்:

முடிகொண்டான் ஆறு


ஊர்:

அச்சுதம்பேட்டை


மாவட்டம்:

திருவாரூர்


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

சிவராத்திரி, பிரதோஷம்


தல சிறப்பு:

இறைவன் மேற்கு நோக்கிய சன்னதியில் லிங்கத் திருமேனியராக அருட்காட்சியளிப்பது சிறப்பு.


திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு நெறிபுரிஸ்வரர் கோவில், அச்சுதம்பேட்டை ,சன்னாநல்லுõர்(வழி),நன்னிலம் தாலுõகா, திருவாரூர் மாவட்டம்.609504.


போன்:

+91 9486912793, 9585160710


பொது தகவல்:

அன்னை தர்மாம்பிகைக்கு தனிச்சன்னிதி உள்ளது. அம்பாள், பைரவர் அழகுருவங்கள் சோழர் காலச் சிற்பக் கலைக்குச் சான்று.


பிரார்த்தனை


திருமணத்தடை, வேலைவாய்ப்பிற்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.


நேர்த்திக்கடன்:

சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்யப்படுகிறது.


தலபெருமை:

இந்த சிவன் கோயிலை ஒட்டியுள்ளது தேனியம்மன் கோயில். சிதம்பரத்தில் நடராஜர் எல்லை தெய்வமாக காளியைக் கொண்டு உள்ளதைப் போன்று, இங்கு நெறிபுரீஸ்வரர் தேனியம்மனை எல்லை தெய்வமாகக் கொண்டிருந்தாராம். அதனால் தேனியம்மன் தனிக்கோயிலில் இங்கு எழுந்தருளியுள்ளார். இவளை பார்வதியின் அம்சம் என்கின்றனர்.


தல வரலாறு:

ஒரு முறை சிவபெருமான் உமையம்பிகையுடன் தாயம் விளையாடத் திருவுளம் கொண்டார். பலமுறை ஆடியும் தோல்வி சிவபெருமானுக்கே. ஆனால் தான்தான் வெற்றி பெற்றதாக சிவபெருமான் சாதித்தார். அருகே இருந்த திருமாலிடம் உமாபதியும் உமையும் தீர்ப்பு கூறும்படி கேட்டனர். எவர் பக்கம் தீர்ப்பு கூறினாலும், மற்றவரின் கோபத்துக்குத் தான் ஆளாக நேரிடும் என அஞ்சிய அச்சுதன், ஆட்டத்தை நான் கவனிக்கவில்லை என்று கூறினார். அதனால் கோபமடைந்தாள் உமையம்பிகை. பிறைசூடனின் பிரகாசமான விழிகளை நான் இப்போது மூடுவேன். வெற்றி என் பக்கமாயின் மூன்று கண்களும் ஒளி குன்றும். இறைவன் பக்கம் வெற்றி எனில், அவை எப்போதும் போல் ஒளி வீசிடும் எனக்கூறி விட்டு ஈசனின் முக்கண்களையும் மூடினாள். இதனால் பேரிருள் மூண்டது. இறைவன் பக்கம் வெற்றி இல்லை. அம்பிகை வெற்றி பெற்றாள் என்பது இதன்மூலம் நிரூபிக்கப்பட்டது.


அதேசமயம் அண்ட சராசரங்களும் இருண்டதால் ரிஷிகள், சித்தர்கள் யாவரும் அழுது புலம்பி அரற்றினார்கள். வெற்றி பெற்ற அகந்தையால் அகிலத்துக்கு அல்லல் ஏற்படும் என்பதை மறந்த தேவியைச் சினந்தார் சிவன். உமையம்பிகை தான் செய்த செயலுக்கு வருந்தி, சிவபெருமானிடம் தனது தவறுக்கு விமோசனம் அருளுமாறு வேண்டினாள். அதற்கு இறைவன், தேவியே! பூவுலகத்தில் யாம் எழுந்தருளியிருக்கும் தலங்களைத் தரிசித்து வருவாயாக! அவ்வாறு தரிசித்து வரும்போது எந்த தலத்தில் உனக்குக் களைப்பு ஏற்படுகின்றதோ அந்த இடத்தில் நீ தங்கி எம்மை பூஜை செய்து வந்தால் நாம் உரிய தருணத்தில் அங்கு வந்து உன்னை ஆட்கொள்வேன் என்று கூறி அருள்பாலித்தார். ஐயனை வணங்கி தென்திசை நோக்கிப் புறப்பட்டாள் அம்பிகை.


தனது சகோதரிக்குத் துணையாக தன் பசுக் கூட்டத்தோடு உடன் புறப்பட்டு வந்தார் பரந்தாமன். அச்சுதனும், உமையம்மையும் பல தலங்களில் ஈசனை தரிசனம் செய்து, காவிரியின் தென்கரையோரம் வந்தனர். அப்போது அம்பிகைக்குத் துணையாக வந்த அச்சுதனும் பசுக்கூட்டத்தோடு அங்கேயே தங்கியதால் அந்தத் தலம் அச்சுதன்பேட்டை என்று பெயர் பெற்றது. உமையம்பிகை அங்கேயே தங்கி இறைவனை தியானித்து தவம் மேற்கொண்டாள். இறைவன் ஒரு நன்நாளில் தவநெறியில் வழுவாமல் தம்மை பூஜிக்கும் அம்பிகைக்கு நெறியீஸ்வரராக காட்சியளித்தார். இறைவனிடம் அந்த இடத்தில் நிரந்தரமாகத் தங்கி பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டுமென வேண்டினாள், உமை. இறைவனும் அதற்கு இசைந்தார். அன்று முதல் இத்தலத்தில் பரமன் நெறியீஸ்வரராகவும், அம்பிகை தர்மாம்பிகை என்ற திருநாமத்துடனும் அருள்புரிந்து வருகின்றனர்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

இறைவன் மேற்கு நோக்கிய சன்னதியில் லிங்கத் திருமேனியராக அருட்காட்சியளிப்பது சிறப்பு.

About the author

Leave a Reply

Your email address will not be published.