ரிஷிவந்தியம் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் – Arthanareeswarar Temple

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்


மூலவர்:

அர்த்தநாரீஸ்வரர்


அம்மன்/தாயார்:

முத்தாம்பிகை.


தல விருட்சம்:

புன்னை


தீர்த்தம்:

அகஸ்த்திய தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஞான போத புஷ்கரிணி தீர்த்தம், அக்னி தீர்த்தம், சங்கர தீர்த்தம்


ஊர்:

ரிஷிவந்தியம்


மாவட்டம்:

விழுப்புரம்


மாநிலம்:

தமிழ்நாடு


பாடியவர்கள்:


திருவிழா:

ஆனியில் பிரம்மோற்சவம் 10 நாள் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மூன்றாவது திங்கள் கிழமையில் சுவாமிக்கு 108 சங்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.


தல சிறப்பு:

தேவர்களின் தலைவனான இந்திரன் தினமும் இத்தல இறைவனுக்கு 108 குடம் பால் அபிஷேகம் செய்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தான். ஆனால், அம்மனை வழிபடாமல் சென்று விடுவான். தன்னை வழிபடாத இந்திரனுக்கு பாடம் புகட்ட நினைத்த பார்வதி ஒருமுறை அபிஷேககுடங்களை மறைத்து வைத்து விட்டாள். பால் குடங்களை காணவில்லையே என வருந்திய இந்திரன், அங்கிருந்த பலிபீடத்தில் தலையை மோதி உயிர் விட முயற்சித்தான். அப்போது ஈசன் தோன்றி, இனிமேல் பார்வதிக்கும் சேர்த்து அபிஷேகம் செய்யும்படியாக பணித்தார். அத்துடன் தினமும் நடக்கும் தேனபிஷேக பூஜையில் அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுப்பதாக கூறி மறைந்தார். தேன் தானும் கெடாது. தன்னுடன் சேர்க்கும் பொருளையும் கெட விடாது. இதன்படி இன்றும் கூட தினசரி நடக்கும் தேனபிஷேக பூஜையில் சுயம்புலிங்கத்தில் அர்த்தநாரி ஈஸ்வரனாக (ஆண்பாதி பெண்பாதியான) ஒளி வடிவில் காட்சி தருகிறார். மற்ற அபிஷேகம் நடக்கும் போது லிங்க வடிவம் மட்டுமே தெரியும்.


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோயில் ரிஷிவந்தியம் – 606 201, விழுப்புரம் மாவட்டம்.


போன்:

+91 – 90943 68541


பொது தகவல்:

நிறம் மாறும் லிங்கம், நாகத்தை உடலில் தாங்கிய லிங்கம், சாய்ந்த நிலையிலுள்ள லிங்கம், உடலில் காயம் பட்ட லிங்கம் என்றெல்லாம் பல லிங்கங்களை தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால், ஒரு லிங்கத்திற்கு தேனபிஷேகம் செய்யும் போது, லிங்கத்தில் இடை நெளிந்த, கையில் கிளியுடன் இருக்கும் அம்மன் காட்சி தரும் அதிசயத்தைக் ரிஷிவந்தியம் முத்தாம்பிகா சமேத அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் காண முடியும்.


பிரார்த்தனை


பேச்சில் குறைபாடு உள்ளவர்கள், தேன் வாங்கி சிவனுக்கு அபிஷேகம் செய்து அந்த தேனை சாப்பிட்டால் பேச்சு குறைபாடு நீங்கும் என்பது நம்பிக்கை.


நேர்த்திக்கடன்:

தங்களது கோரிக்கை நிறைவேறியவுடன் சிவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம், ஆராதனை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.


தலபெருமை:

விஜய நகர மன்னர்கள் காலத்தில் விவசாயம் செய்வதற்காக வீர வன்னியர் பரம்பரையினர் காடு வெட்டும் போது மண்வெட்டியில் வெட்டுப்பட்ட சுயம்பு லிங்கம்’ தான் ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர். இன்றும் கூட வெட்டுப்பட்ட கீறலை சுயம்புலிங்கத்தில் பார்க்கலாம்.


இந்த கோயில் துவாபராயுகத்தில் தோன்றியதென்று கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இத்தலத்திற்கு வந்து வழிபட்ட ராமருக்கு ஞானத்தையும், அகத்தியருக்கு திருமணக்கோலத்தையும், பூஜைசெய்த ரிஷிகளுக்கு நற்பலன்களையும், குக நமச்சிவாயருக்கு உணவளித்தும் அர்த்தநாரீஸ்வரர் அருள்புரிந்துள்ளார். அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் வந்து ஈசனை வழிபட்டுள்ளனர்.


குக நமச்சிவாயர்:

குரு நமச்சிவாயரின் சீடரான குக நமச்சிவாயர் திருவண்ணாமலையிலிருந்து பல தலங்களை தரிசித்து விட்டு இத்தலம் வழியாக சிதம்பரம் செல்லும்போது பசி அதிகமானது. அவர் இங்குள்ள முத்தாம்பிகை அம்மனிடம் சென்று, “தாயிருக்க பிள்ளை சோறு” என்ற செய்யுளை பாடினார்.


உடனே அம்மன் அவர் முன் தோன்றி “நான் இங்கு ஈசனுடன் அர்த்தபாகம் பெற்றிருக்கிறேன். எனவே இருவரையும் சேர்த்து பாடுவாயாக” என்று கூற குக நமசிவாயரும் அதன்படியே “மின்னும்படிவந்த சோறு கொண்டு வா” என்ற பாடலைப்பாடினார்.


இந்த பாடலை கேட்டதும் முத்தாம்பிகையம்மன் பொற்கிண்ணத்தில் சோறு கொண்டு வந்து குகநமச்சிவாயரின் பசியாற்றினாள் என்பர்.


இக்கோயிலுக்கு தற்போது கும்பாபிஷேக திருப்பணிகள் நடக்கிறது. சிவாலய திருப்பணிகளில் கலந்து கொள்பவர்கள் 27 அஸ்வமேத யாகம் செய்த பலனைத்தரும் என்பது ஐதீகம்.


தல வரலாறு:

சிவபார்வதி திருமணம் கைலாயத்தில் நடந்த போது, தென்திசை உயர்ந்து வட திசை தாழ்ந்தது. இதை சமன் செய்ய அகத்தியரை தென்திசை செல்ல சிவன் உத்தரவிட்டார்.


சிவனின் கட்டளையை ஏற்ற அகத்தியர், பல தலங்களில் தங்கி சிவபூஜை செய்து சென்றார். ஓரிடத்தில் சிவன் அகத்தியருக்கு திருமணக்காட்சி தந்தார். இந்தக்காட்சி எந்நாளும் உலக மக்களுக்கு கிடைக்க வேண்டும் என அகத்தியர் வேண்ட, “எனக்கு (லிங்கத்திற்கு) தேனபிஷேகம் செய்யும் காலத்தில் இங்குள்ள லிங்கத்தில் பார்வதியும் இணைந்து தோன்றுவாள்,” எனக் கூறி மறைந்தார்.


பல ரிஷிகள் இங்கு வந்து தங்கி ஈசனை வழிபட்டதால் இத்தலம் ரிஷிவந்தியம்’ என வழங்கப்பட்டது.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

லிங்கத்திற்கு தேனபிஷேகம் செய்யும் போது, லிங்கத்தில் இடை நெளிந்த, கையில் கிளியுடன் இருக்கும் அம்மன் காட்சி தரும் அதிசயம்.

About the author

Leave a Reply

Your email address will not be published.