வேப்பூர் வசிஷ்டேஸ்வரர் கோயில்

மூலவர்:


வசிஷ்டேஸ்வரர்


அம்மன்/தாயார்:

பாலகுஜாம்பிகை


ஊர்:

வேப்பூர்


மாவட்டம்:

வேலூர்


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

சிவராத்திரி, பவுர்ணமி, ஆவணி வளர்பிறை பஞ்சமி


தல சிறப்பு:

இத்தலம் குரு தலமாக கருதப்படுகிறது.


திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் வேப்பூர், வேலூர்.


போன்:

+91 98429 11671


பொது தகவல்:

இங்கு வள்ளி, தெய்வானையுடனான சுப்பிரமணியர் பற்றி அருணகிரியார் பாடியிருக்கிறார். சரபேஸ்வரர், சப்தமாதர், செல்வ விநாயகர், காசி விஸ்வநாதர், அகோர வீரபத்திரர், கால பைரவர் சந்நிதிகளும் இருக்கிறது. சிவன் சந்நிதி சுற்றுச்சுவரில் தட்சிணாமூர்த்தி இருக்கிறார். இவ்வூரில், வேப்ப மரங்கள் நிறைந்திருந்து இருப்பதால் தலம், வேம்பூர் என்று அழைக்கப்பட்டு, வேப்பூர் என மருவியது.


பிரார்த்தனை


திருமண, குழந்தை பாக்கியம் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். மோட்ச தீபம் ஏற்றுகிறார்கள்.


நேர்த்திக்கடன்:

இத்தலத்தைச் சுற்றியுள்ள பகுதியில் யாரேனும் இறந்து விட்டால், மூன்றாம் நாளில் இங்கு சிவனுக்கு விசேஷ பூஜை செய்கிறார்கள். அப்போது, நவக்கிரகங்களுக்கு வஸ்திரம் அணிவித்து, மோட்ச தீபம் ஏற்றி, நெல்பொரி மற்றும் நவதானியம் படைக்கிறார்கள். இவ்வாறு செய்வதால் முன்னோர்களுக்கு முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. மகாளய பட்சம் மற்றும் அமாவாசை நாட்களில் சிவனுக்கு விசேஷ பூஜை நடக்கிறது.


தலபெருமை:

பக்தருக்கு முதல் மரியாதை:

பாலாற்றின் தென்கரையில் அமைந்த கோயில் இது. சிவன் சந்நிதி மண்டபத்தில் வசிஷ்டர் ருத்ராட்ச மாலை யுடன் சிவனை வணங்கியபடி இருக்கிறார். இவருக்கு பூஜை செய்த பின்பே, சிவனுக்கு பூஜை செய்கிறார்கள். சிவனை விடவும், அவரது அடியார்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டுமென்பதன் அடிப்படையில் இவ்வாறு செய்வதாகச் சொல்கிறார்கள். சிவராத்திரியன்று இரவில் இவருக்கும் விசேஷ பூஜை உண்டு. கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற வசிஷ்டருக்கு வேப்பம்பூ, வில்வமாலை அணிவித்து, மிளகு பொங்கல் படைக்கிறார்கள். ஆவணி வளர்பிறை பஞ்சமியின்று இவருக்கு ரிஷி பூஜை விழா நடக்கிறது. உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று வசிஷ்டருக்கு சிவன் காட்சி தந்ததாகவும், அதனடிப்படையில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் களுக்கான பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது.


அணையும் விளக்கு:

அம்பாள் பாலகுஜாம்பிகை, தனி சந்நிதியில் இருக்கிறாள். சிவன், இங்கு வசிஷ்டருக்கு ஜோதி ரூபமாக காட்சி தந்தாராம். இதன் காரணமாக திங்கள்கிழமைகளில், மாலை 6 மணிக்கு சிவன் சந்நிதியில் எரியும் எல்லா விளக்குகளையும் அணைத்து விட்டு, மீண்டும் ஏற்றுகின்றனர். இவ்வேளையில் ஜோதி ஒளி லிங்கத்தில் பிரகாசிக்கும். பிரகாரத்தில் உள்ள சனீஸ்வரர் சந்நிதியை மிக தாழ்வாக அமைத்துள்ளனர். உக்கிரமான இவரது பார்வை பக்தர்கள் மீது படக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.


ஆடி அமாவாசை சிறப்பு:

ஆடி அமாவாசையை ஒட்டி காலை 9 மணிக்கு சண்டி ஹோமம் ஆரம்பமாகும். குழந்தையில்லாதவர்கள் வெண்ணெய், அவல் கொண்டு வந்து இதில் பங்கேற்கலாம். ஹோமத்திற்குரிய எல்லா பொருட்களும் எடுத்து வரலாம். மோட்ச விளக்கிற்காக கார்த்திகை தீபத்துக்கு பயன்படுத்தும் பெரிய அகல்விளக்கு (மண் மடக்கு தீபம்) கொண்டு வர வேண்டும். அதில் நெய், நல்லெண்ணெய் விட்டு ராஜகோபுரத்தில் ஏற்ற வேண்டும். பக்தர்கள் ராஜகோபரத்தில் ஏற ஏணி வைக்கப்படும்.


தல வரலாறு:

சப்தரிஷிகளில் ஒருவரான வசிஷ்டர் வேம்பு வனமான இங்கு சில காலம் தங்கி, சிவலிங்க வழிபாடு செய்தார். அவருக்கு சிவன் காட்சிதந்து லிங்கத்தில் ஐக்கியமானார். எனவே, சிவனுக்கு வசிஷ்டேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. ராமபிரானின் குருவான வசிஷ்டரால் வழிபடப்பட்ட தலமென்பதால் இத்தலம் குரு தலமாக கருதப்படுகிறது.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

இத்தலம் குரு தலமாக கருதப்படுகிறது.

About the author

Leave a Reply

Your email address will not be published.