நரிக்குடி விருப்பாட்சிநாதர் கோயில்

மூலவர்:


விருப்பாட்சிநாதர்


அம்மன்/தாயார்:

நாகவல்லி


ஊர்:

நரிக்குடி


மாவட்டம்:

விருதுநகர்


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

ஆடி கடைசி வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜையும், நவராத்திரி உற்சவமும் பெண்களால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்ப்புத்தாண்டு சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், ஆடி கடைசி வெள்ளி, விநாயகர் சதுர்த்தி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், பங்குனி உத்திரம், பிரதோஷ வழிபாடு ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.


திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு விருப்பாட்சிநாதர் திருக்கோயில், நரிக்குடி, 626607 விருதுநகர்.


பொது தகவல்:

பலிபீடம், நந்தி மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை ஆகியவற்றில் நேர்த்தியான கலைத்திறன் வெளிப்படுகிறது. மகா மண்டபத்தின் வடபகுதியில் நாகவல்லி அம்மன் சன்னதி உள்ளது. அம்பாள் கொடியிடை கொண்ட பேரழகி. அர்த்த மண்டபத்தில் விநாயகர், காசிலிங்கம், திருவாச்சி சுப்பிரமணியர், சனீஸ்வரர், நடராஜர், சயனக்கோல பெருமாள் அருள்கின்றனர். விஸ்தாரமான பிராகாரச் சுற்றில் பரிவாரதேவதை சன்னிதிகள் எதுவும் இல்லை.


பிரார்த்தனை


விரும்பிய இடமாறுதல் கிட்ட, திருமணத் தடை நீங்க திருவாசக முற்றோதல் நடத்தி வழிபடும் வழக்கமும் உள்ளது.


நேர்த்திக்கடன்:

இளநீர், பால், தேன் என இவருக்கு விருப்பமான பொருள் கொண்டு திருமஞ்சனம் செய்வித்து, புது வஸ்திரம் சாத்தி வழிபட்டால், நம் விருப்பங்கள் விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.


தலபெருமை:

எந்த பிரச்னைகளையும் இலகுவாகத் தீர்த்து வைப்பவர் என்கிற பெருமை இங்கு எழுந்தருளியுள்ள விருப்பாட்சிநாதருக்கு உண்டு. மகா மண்டப வடபக்கச் சுவரில் மானூரில் அமைந்திருக்கும் சிவன் மற்றும் விஷ்ணு திருக்கோயிலுக்கு அளிக்கப்பட்ட தர்மங்கள் குறித்த கல்வெட்டுச் செய்திகள் காணப்படுகின்றன. அதேபோல மகா மண்டப தெற்குச் சுவரில் நரிக்குடி விருப்பாட்சி நாதர் கோயிலில் அன்றாட பூஜை பணிகள் நடைபெற வழங்கப்பட்ட தர்மங்கள் குறித்த கல்வெட்டுகளும், வேதம் கற்றுணர்ந்த அந்தணர்களுக்கு இறைப்பணிக்காக ஒரு கிராமம் வழங்கப்பட்டு, அது பிரம்மதேயம் என அழைக்கப்பட்ட செய்தியும் காணப்படுகின்றன.


தல வரலாறு:

கண்ணுக்கெட்டிய தூரம் வரை காடும், பரந்த நிலப்பரப்பும், நீர்ப்பரப்பும் விரிந்து காணப்படும் தலம், நரிக்குடி. இங்கே வன விலங்குகளுக்கு பஞ்சமில்லை. குறிப்பாக, சாலைகளில் பகலில் நரியின் நடமாட்டத்தையும், இரவில் அவற்றின் ஊளைச் சத்தத்தையும் கேட்கலாம். அதனால் ஊருக்கு நரிக்குடி என்கிற பெயர். நான்கு புறமும் உயர்ந்த மதில்கள் சூழ, கிருதுமால் நதியின் மேற்குக் கரையில் கிழக்கு நோக்கி அமைந்த கோயில். உள்ளே நுழைந்ததும் விஸ்தாரமான பிராகாரச் சுற்று. கி.பி. 1216-ல் பாண்டியப் பேரரசன் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனின் ஆட்சிக் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டதை கல்வெட்டுச் செய்திகளால் அறியமுடிகிறது. விஸ்தார மட்டம் வரை கல்கட்டுமானமாகவே அமைத்துள்ளனர். அந்தக் காலத்தில் கட்டி வைத்த அமைப்பிலேயே எந்தவித மாறுதலும் இல்லாமல் இன்றளவும் கோயில் நிலைத்து நிற்பது சிறப்பு.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

எந்த பிரச்னைகளையும் இலகுவாகத் தீர்த்து வைப்பவர் என்கிற பெருமை இங்கு எழுந்தருளியுள்ள விருப்பாட்சிநாதருக்கு உண்டு.

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *